பெண் தடம்: ஆங்கிலேயரை அஞ்சவைத்த ஜிந்தன்

By ஆதி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கைபர் கணவாயில் இருந்து காஷ்மீர்வரை பரந்து விரிந்திருந்தது பஞ்சாப் பேரரசு. அதன் அப்போதைய தலைநகர் லாகூர். அந்தப் பேரரசைக் கடைசியாக ஆட்சி செய்தவர் ஒரு பெண். அவர்தான் ஜிந்த் கௌர் என்றழைக்கப்பட்ட ஜிந்தன் கௌர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இரண்டு முறை போர் தொடுத்தவர்.

பழமைக்கு எதிராக

அரசவை நாய் பராமரிப்பவரின் மகளாகப் பிறந்தவர் ஜிந்தன். புகழ்பெற்ற பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவியானார். ஆங்கிலேயரைப் பல பத்தாண்டுகளுக்கு எதிர்த்துவந்த ரஞ்சித் சிங், 1839-ல் முடக்குவாதத்தால் இறந்தார். அந்தக் காலத்தில் சாதாரணமாக நடைபெற்றுவந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும், பர்தா அணியும் வழக்கத்தையும் ஜிந்தன் துணிச்சலாக மறுத்தார்.

ரஞ்சித் சிங் இறந்தபோது அவர்களுடைய மகன் துலீப் சிங், ஒரு வயதுக் குழந்தை. ஆட்சிப் பகுதி ஆட்டம் காண ஆரம்பித்தது. சிறுவன் துலீப் சிங்குக்குப் பதவி போவதைத் தடுத்துப் பஞ்சாபைக் கைப்பற்ற ஆங்கிலேய அரசு முயன்றது. பஞ்சாப் பேரரசின் சொத்துகளாலும் ஆங்கிலேய அரசு கவரப்பட்டது.

அவதூறு பிரச்சாரம்

மகன் துலீப் சிங்குக்குப் பொறுப்பாளராக ஆட்சி அதிகாரத்தை ஜிந்தன் கௌர் ஏற்றுக்கொண்டார். அரசவையை நடத்தியதோடு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடினார். அவரது ஆலோசனை இல்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆட்சியைப் பொறுப்புடன் நடத்திய ஜிந்தனை ஆங்கிலேயர்கள் தங்கள் அரசுக்கு மிகப் பெரிய தடையாகக் கருதினார்கள். அவரைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தை ஆங்கிலேயர்கள் கட்டவிழ்த்துவிட்டனர். ஜிந்தனை ‘பஞ்சாபின் அதீத பாலியல் ஆர்வம் கொண்டவர்’ (பஞ்சாபின் மெசலினா) என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

பறிபோன பேரரசு

1845-ல் ஆங்கிலேயப் படை போர் தொடுத்துவந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான சீக்கிய எதிர்ப்பை ஜிந்தன் ஒருங்கிணைத்தார். தனது தளபதிகளை ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போரிட ஒன்றுசேர்த்தார். பிறகு, இரண்டு தீவிரத் தாக்குதல்களை ஜிந்தன் கௌர் தொடுத்தார்.

ஆனால் ராணுவத்தைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அனுபவமின்மை, இளம் வயது (20-கள்) காரணமாகத் தாக்குதல் வியூகத்தில் கோட்டைவிட்டார். இப்படியாக ஆசியாவின் முக்கியப் பகுதியான பஞ்சாப் பேரரசை ஆங்கிலேயர் வீழ்த்தினர். 1849-ல் பஞ்சாப் ஆங்கிலேயர் வசமானது.

வெட்டப்பட்ட பாசம்

மகன் துலீப் மீது செல்வாக்கு செலுத்தி, பஞ்சாப் மக்களை மீண்டும் ஒருங்கிணைத்துத் தங்களுக்கு எதிராக ஜிந்தன் போரிடலாம் என்று ஆங்கிலேயர் அஞ்சினர். இதனால் தாயையும் மகனையும் பிரிக்கத் திட்டமிட்டனர். ஒன்பது வயதில் துலீப் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்தவராக மதமும் மாற்றப்பட்டார். மகாராணி ஜிந்தனோ, லாகூர் அரசவையில் இருந்து முடியைப் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டு, ஷேக்குபுரா கோட்டையிலும் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் சுனார் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டார்.

ஒருநாள் சிறையிலிருந்து வேலைக்காரியைப் போல மாறுவேடம் அணிந்து கோட்டையிலிருந்து தப்பித்து 1,300 கி.மீ. தூரம் காடுகள் வழியாகப் பயணித்து நேபாளத்தை அடைந்தார். பிறகு, மந்திரத்தால் தான் தப்பித்துவிட்டதாக ஆங்கிலேயர்களுக்குக் கடிதம் எழுதினார்.

புதிய அத்தியாயம்

பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புலி வேட்டையாடுவதற்காக இங்கிலாந்திலிருந்து துலீப் கொல்கத்தாவுக்கு வந்தார். அப்போது மகனைப் பார்க்க ஜிந்தன் அனுமதிக்கப்பட்டார். துலீப்பின் விருப்பத்தின் பேரில் ஜிந்தனும் இங்கிலாந்து சென்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.

அப்போது தங்கள் அரச பாரம்பரியம் பற்றியும், துலீப்பின் ஆட்சிப் பகுதி எங்கிருக்கிறது என்பதையும் ஜிந்தன் நினைவுபடுத்தினார். இழந்த பேரரசைப் பற்றி தன் மகனுக்கு எடுத்துக் கூறி, அதை மீட்டெடுக்க வலியுறுத்தினார்.

தாய் தந்த உத்வேகத்தால் பழையபடி சீக்கிய மதத்துக்குத் திரும்பிய துலீப் சிங், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாறினார். ரஷ்ய மன்னர் ஜாரை இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு துலீப் வலியுறுத்திக்கொண்டிருந்தார். ஆனால், ஆங்கிலேய உளவுத் துறையினர் அதைக் கண்டறிந்து தடுத்துவிட்டனர்.

பெண் சிங்கம்

தன்னுடைய நாற்பதுகளில் உடல் பலவீனப்பட்ட நிலையிலும் மனவலிமையுடன் திகழ்ந்த ஜிந்தன் கௌர், தான் நினைத்ததை மகன் மூலமாக சாதிக்க முயற்சித்தார். 1863 ஆகஸ்ட் 1-ம் தேதி இறந்த பிறகு மேற்கு லண்டனில் கென்சிங்டன் பகுதியில் அவர் புதைக்கப்பட்டார்.

எளிதில் விட்டுக்கொடுத்துவிடாத, அடிபணியாத ஓர் ஆட்சியாளராகவே ஜிந்தன் இருந்தார். இந்தியாவில் ஆங்கிலேயரைக் கடைசியாக எதிர்த்து நின்ற பெண் ஆட்சியாளர் என்ற பெருமை அவருக்கு உண்டு. பஞ்சாப் மண்ணில் அநீதி, சீற்றத்துக்கான அடையாளமாக இன்றைக்கும் ஜிந்தன் கௌர் கருதப்படுகிறார். சீக்கியர்களின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

விளையாட்டு

33 mins ago

இந்தியா

37 mins ago

உலகம்

44 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்