14, மே மிருணாள் சென் பிறந்தநாள் : அவள் எங்கே சென்றாள்?

By எஸ்.சுஜாதா


'அந்தப் பெண் எங்கே போனாள்?’ என்ற இந்தக் கேள்வியை 43 ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இது சின்னுவைக் குறித்த கேள்வியாக மட்டும் இல்லை, இன்றும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கக்கூடிய, சங்கடத்துக்கு உள்ளாக்கக்கூடிய கேள்வியாகவே இருக்கிறது.

நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பக்கத்து வீடுகளைப் பற்றி அக்கறையோ கவலையோ கொள்வதில்லை. அதனால் அங்கு வசிக்கும் பெண்கள் இதுபோன்ற கேள்விகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைவு. மற்ற இடங்களில் வழக்கமான நேரத்தைத் தவிர்த்து வீடு திரும்பும்போதோ நண்பருடன் வாகனத்தில் வரும்போதோ யார், என்ன என்ற கேள்விகளையோ பார்வைகளையோ தவிர்க்கவே இயலாது. அதிலும் 'தனியாக’ வாழ்க்கை நடத்தும் பெண்கள் என்றால், இந்தக் கேள்விக்கு அடர்த்தி அதிகம். யாரும் கேட்காமலேயே அந்தப் பெண்ணைப் ‘பாதுகாக்கும்’ பொறுப்பை அவர்களாகவே எடுத்துக்கொள்வார்கள்!

'ஏக் தின் பிரதிதின்' என்ற திரைப்படம் மிருணாள் சென் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்களில் மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் இது முக்கியமானது. உலக அளவில் விருதுகளையும் கவனத்தையும் பெற்றது. இன்றும் இந்தத் திரைப்படம் பொருத்தமாக இருப்பது வேதனையானது.

காரை உதிர்ந்த மிகப் பெரிய வீட்டில் பல குடும்பங்கள் குடியிருக்கின்றன. அவற்றில் சின்னுவின் குடும்பமும் ஒன்று. பழுப்பேறிய, சாயம் போன உடைகளைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் வண்ணம் இன்றி, வறுமையில் உழன்றுகொண்டிருக்கிறது. அவர்களின் துயரத்தைக் கொஞ்சம் குறைப்பதற்கான வாய்ப்பு சின்னுவுக்குக் கிடைக்கிறது.

550 ரூபாய் சம்பளத்தில் வேலை. சின்னுவுக்கும் அவள் குடும்பத்துக்கும் துயரத்திலிருந்து விடுபடப் போகும் மகிழ்ச்சி. அப்பாயின்மெண்ட் ஆர்டரை வாசிக்கும் அண்ணன், வரிசையாகச் செலவுகளைப் பட்டியலிடுகிறான். இரண்டு தங்கைகள், தம்பியின் படிப்புச் செலவு. ஏழு பேருக்கான உணவு, மருத்துவச் செலவு. வாடகை, அண்ணனுக்கு பாக்கெட் மணி. வருமானத்தைவிடச் செலவு அதிகமாக இருக்க, வந்த சுவடு தெரியாமல் மகிழ்ச்சி காணாமல் போய்விடுகிறது.

சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய சூழல். இந்தப் பொறுப்பை சின்னுவும் விரும்பியிருக்க மாட்டாள். அவள் குடும்பமும் விரும்பியிருக்காது. வீட்டின் வறுமை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு இன்னொரு வாய்ப்பை வழங்கவில்லை.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வழக்கமான நேரத்தில் சின்னு வீடு திரும்பவில்லை. ஏற்கெனவே சின்ன மகன் மண்டை உடைந்த வருத்தத்தில் இருக்கிறது குடும்பம். இந்த நேரத்தில் சின்னு வீட்டுக்கு வராதது சூழலை இன்னும் கடினமாக்குறது. நேரம் செல்லச் செல்ல வீட்டில் உள்ளவர்களுக்குப் பதற்றம் அதிகரிக்கிறது. சின்னுவின் தங்கை மின்னு அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறார். சின்னு அங்கே இல்லை. எங்கே போயிருப்பாள், என்ன ஆகியிருப்பாள் என்ற தவிப்புடன் வீட்டுக்கு வருகிறாள். நேரம் செல்லச் செல்ல அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த விஷயத்தைக் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான் அண்ணன். மார்ச்சுவரியில் சென்று பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறான். பயந்துகொண்டே செல்பவன், அங்கே சின்னு இல்லாதது கண்டு நிம்மதியடைகிறான்.

சற்று நேரத்தில் காவலர்கள் இருவர் சின்னு வீட்டுக்கு வருகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சின்னுவின் அடையாளங்களைக் கேட்டுப் போவதற்காக வந்திருக்கிறார்கள் என்றதும், அப்பா இடிந்துவிடுகிறார். ஆனால், இறந்த பெண்ணின் அடையாளங்களும் சின்னுவின் அடையாளங்களும் ஒத்துப் போகவில்லை என்பதால் காவலர்கள் கிளம்புகிறார்கள். சின்னுவின் அம்மா அழுது புலம்புகிறார். அக்கம்பக்கத்தினருக்கு விஷயம் நன்றாகத் தெரிந்துவிட்டது. அவரவர் வீட்டில் சின்னுவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இரவெல்லாம் சின்னுவுக்காக விழித்திருக்கும் குடும்பம் முதலில் பயப்படுவது அக்கம்பக்கத்தினர் என்ன சொல்வார்களோ என்பதற்காகத்தான். இரண்டாவதாகத்தான் அவள் உயிர் குறித்து யோசிக்கிறார்கள்.

அதிகாலையில் சின்னு வீடு திரும்புகிறாள். ஒரு பக்கம் நிம்மதியும் இன்னொரு பக்கம் கோபமுமாக அவரை எதிர்கொள்கிறார்கள். ஆனால், ஒருவரும் அவள் எங்கே சென்றாள் என்ற கேள்வியை மட்டும் கேட்கவில்லை. காரணம் பயம். ஒருவேளை கேள்வி கேட்டு, அவள் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டால் மற்றவர்களின் நிலை என்னாவது? அதனால் அமைதி காக்கிறார்கள்.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சின்னு குறித்துத் தவறாகப் பேசுகிறார்கள். சின்னுவின் அண்ணன் சண்டைக்குச் செல்கிறான். வீட்டு உரிமையாளர் சின்னுவின் அப்பாவை அழைத்து, 'இது கவுரவமானவர்கள் வாழும் இடம். அதனால் வீட்டைக் காலி செய்யுங்கள்’ என்கிறார்.

மறுநாள் காலை சின்னுவின் அம்மா வெளியே வருகிறார். விமானம் ஒன்று பறக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, வழக்கம்போல் அடுப்பை மூட்டி, சமைக்க ஆரம்பிக்கிறார்.

உலகம் அறிவியல் தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தாலும் பெண்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை என்ற பதிவோடு படம் நிறைவடைகிறது.

ஒரு மகன் வீடு திரும்பாவிட்டால், அவன் உயிர் குறித்த அச்சம் மட்டுமே அந்தக் குடும்பத்துக்கு இருந்திருக்கும். மகள் என்பதால்தான் அவள் நடத்தைக் குறித்த அச்சம் உயிரைவிடப் பிரதானமாக நிற்கிறது. மகனுக்கு வழங்கப்படும் உரிமை வேலைக்கே சென்றாலும் மகளுக்கு வழங்கப்படுவதில்லை. குடும்பச் சூழலால்தான் பெண்ணை வேலைக்கே அனுப்புகிறார்கள். வேலைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற கட்டளையும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூண்டு சற்றுப் பெரிதாக ஆனாலும் கூண்டுக்குள்தான் பெண் இருக்க வேண்டும்!

இயக்குநர் மிருணாள் சென்

இயக்குநர் மிருணாள் சென்னிடம், ‘சின்னு எங்கே சென்றாள்?’ என்ற கேள்வியைச் சாமானியர்களிலிருந்து இந்தியாவின் முக்கியமான இயக்குநரான சத்யஜித் ராய் வரை கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். “வேலைக்குச் சென்ற பெண் இரவு வீடு திரும்பாவிட்டால் அந்த வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் என்ன நடக்கும் என்பதைக் காட்ட விரும்பினேன். அதைச் செய்துவிட்டேன். சின்னுவைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை. சின்னு எங்கே சென்றாள் என்பதை என்னால் சொல்லியிருக்க முடியும். ஆனால், என் நோக்கம் பெண் குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் சமூகத்தில் பாதுகாப்பு முக்கியம். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தால், அதுவே இந்தத் திரைப்படம் எடுத்ததற்கான நோக்கத்தை நிறைவேற்றும்” எனப் பதிலளித்தார் மிருணாள் சென்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வர்த்தக உலகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்