அவலம்: குழந்தைகளுக்குக் கிடைக்காதா நீதி?

By ப்ரதிமா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. 12 வயது சிறுமியைத் தகாத முறையில் தொடுகிறார் 39 வயது ஆண் ஒருவர். சிறுமியின் போராட்டத்தையும் மீறி அவளது ஆடை களைக் களைய முனைகிறார். இதைப் பார்க்கிற அல்லது கேட்கிற யாருக்கும் இது அந்தச் சிறுமியின் மீதான பாலியல் அத்துமீறல் என்பது புரிந்துவிடும். ஆனால், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி, இதை வேறு வகையில் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘போக்சோ’ சட்டத்துக்கு உட்பட்டு இது பாலியல் சீண்டல் இல்லையாம். அதாவது, ஆடை அணிந்திருக்கும் குழந்தையைத் தகாத முறையில் தொடுவது பாலியல் அத்துமீறலுக்குரிய வகைமையில் வராது என்று நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே செஷன்ஸ் நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனை காலத்தை மூன்று ஆண்டுகளாகக் குறைத்த நீதிபதி, தன் தீர்ப்பில் இப்படித் தெரிவித்திருக்கிறார். “இந்த வழக்கில் நேரடியான உடல் தொடர்பு ஏற்படவில்லை. அதாவது, எந்தத் தடுப்பும் இல்லாமல் உடல் பாலியல் நோக்கத்துடன் தீண்டப்படவில்லை”. இதனோடும் அந்தத் தீர்ப்பு முடிந்துவிடவில்லை. சிறுமியின் மார்பை அந்த நபர் அழுத்தியபோது அந்தச் சிறுமியின் ஆடை விலக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதற்குப் போதுமான தரவுகள் இல்லாத நிலையில், இதைப் பெண்கள், குழந்தைகளின் கண்ணியத்துக்கு எதிரான குற்றச் செயலாக மட்டுமே கருத முடியும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் பல தரப்பினரையும் கொதிப்படைய வைத்தது.

குற்றம் குற்றமே

உண்மையில் ‘போக்சோ’ சட்டம் இப்படித்தான் சொல்கிறதா? ‘ஒரு குழந்தை யின் (ஆண்/பெண் இருபாலரும்) அந்தரங்க உறுப்பு, ஆசனவாய், மார்பு ஆகியவற்றைத் தொடுவதும், தங்களுடைய அல்லது பிறரது உறுப்புகளைத் தொடச் செய்வதும், பாலியல் இச்சையோடு குழந்தையைத் தொடுவதும் பாலியல் துன்புறுத்தல் வகையின்கீழ் வரும்’ என்று ‘போக்சோ’ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நடக்கும்போது அந்தக் குழந்தை ஆடை அணிந்திருக்க வேண்டுமா, இல்லையா என்று குறிப்பிடப்படவில்லை. எப்படி நடந்தாலும் குற்றம் குற்றம்தனே. ஆனால், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் தவறான புரிதலால் அந்த ஒரு வரி குற்றவாளிக்குச் சாதகமாகிவிட்டது. “பாலியல்ரீதியான தொடுதல் என்றால் அது ஆடையில்லாத நிலையில், நடப்பது மட்டுமே” என்று சொல்லிவிட்டார்.

இந்தத் தீர்ப்பை வழங்கியவர் பெண் என்பதும் இதில் கவனிக்க வேண்டிய அம்சம். பொதுவாகப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் சட்டத்தின்படி மட்டுமல்லாமல் உணர்வுரீதியாகவும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அதனாலேயே, இதுபோன்ற வழக்குகளில் பெண் வழக்கறிஞர்களையும் நீதிபதி களையும் அமர்த்த வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். ஆனால், அந்த விருப்பத்தை இந்தத் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யவைத்துவிட்டது.

போதாமையைக் களைவோம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பல தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதத்தையும் இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது. இப்படியொரு தீர்ப்பு, தவறு செய்கிறவர்களுக்குச் சாதகமாகவே அமையும் என்று குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் பலரும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யவிருப்ப தாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், குழந்தைகளின் உரிமைக்கான தேசிய ஆணையம் இந்தத் தீர்ப்பின் மீது அவசர மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மகாராஷ்டிர அரசைக் கேட்டுக்கொண்டது.

பிறகு, உச்ச நீதிமன்றம் இதில் இடை யிட்டது. தீர்ப்புக்குத் தடைவிதித்ததுடன் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவரை இரண்டு வாரங்களுக்குள் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியது. “இந்தத் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது” என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை சற்றே நம்பிக்கை தருவதாக இருந்தாலும், சட்டத்தைச் செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறவர்களின் போதாமை, பாதிக்கப்படும் குழந்தைகளுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிற பேராபத்து இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்