இனி எல்லாம் நலமே 40: ஆரோக்கியத்தில் இருக்கிறது அழகு!

By செய்திப்பிரிவு

இளம் தம்பதி என்னிடம் வந்தனர். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். வயிற்றில் வலி, வீக்கம் என்று பொதுவான செக்கப் செய்துகொள்ள வந்தார்கள். சோதனை செய்து பார்த்ததில் சினைப் பையில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் சினைப்பையில் கட்டி இருப்பது உறுதியானது.

அறுவை சிகிச்சை செய்தபோது ஒரு சினைப்பையில் மட்டும் ஆரம்ப நிலைப் புற்றுநோய்க் கட்டி இருந்தது. வேறு எந்த இடத்துக்கும் பரவ ஆரம்பிக்கவில்லை. அது மெதுவாகப் பரவக்கூடிய சினைப்பைப் புற்றுக்கட்டி. அறுவை சிகிச்சையில் கட்டி அகற்றப்பட்டது. பின் கீமோதெரபி கொடுக்கப் பட்டது. அந்தப் பெண் குணமாகி மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. இப்போது அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடிந்தால், மெதுவாகப் பரவக்கூடிய தன்மை கொண்ட புற்றுநோய்க் கட்டியாக இருந்தால் சினைப்பைப் புற்றுநோயைக்கூடக் குணப்படுத்த முடியும்.

தாமதம் வேண்டாம்

இன்னொரு பெண் மெனோபாஸ் ஆனவர். திடீரெனப் புளித்த ஏப்பம், வயிறு வீக்கம், வயிற்று வலி போன்றவற்றுடன் வயிறு பாரமாக இருந்திருக்கிறது. வாயுத்தொல்லையாக இருக்கக்கூடும் என்று அவராகவே மருந்துகளைச் சாப்பிட்டு ஆறு மாதங்களைத் தள்ளியிருக்கிறார். வயிறு மிகவும் பாரமாக உணர ஆரம்பித்து, ரத்தத் துளிகள் பட ஆரம்பித்ததும்தான் டாக்டரைப் பார்த்திருக்கிறார். அவர் பெண்கள் நல மருத்துவரைப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் அவர் என்னிடம் வந்தார். சோதித்துப் பார்த்ததில் சினைப்பையில் பெரிய கட்டி இருந்தது. உடனே ‘ஒமெண்டெல் பயாப்சி’ (Ultrasound Guided Omental Biopsy) செய்து பார்த்தோம். அதற்குள் அந்தப் பெண்ணுக்கு Fluid என்று சொல்லப்படும் திரவம் வெளிவரத் தொடங்கிவிட்டது. கட்டியை நீக்கியும் புற்றுநோய் அதிகமாகப் பரவியிருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பெண்கள் தங்கள் உடல் நலத்தை அலட்சியம் செய்யக் கூடாது என்பதைத்தான் இந்த இரண்டு பெண்களின் கதைகளும் உணர்த்துகின்றன. வழக்கத்துக்கு மாறான அறிகுறிகள் தோன்றிய உடனே தகுந்த மருத்துவரைப் பார்த்துச் சோதித்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. கடைசி நிலைப் புற்றுநோயாக இருந்தால்கூட அதை அகற்றி கீமோதெரபி கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்க முடியும். சினைப்பைப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது கடினம். இதன் அறிகுறிகள் மிகவும் பொதுவானதாக இருப்பதாலும், சினைப்பை மிகவும் உள் பகுதியில் இருப்பதாலும் ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.

பொதுவாக 55 வயதைக் கடந்தவர் களுக்கும், பரம்பரையில் இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சினைப்பைப் புற்றுநோய் வரலாம். பரம்பரை காரணமாக வரும் புற்றுநோய் 55 வயதுக்கு முன்னதாகவே வருவதற்கும் சாத்தியமுண்டு.

சினைப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள்

l வயிறு வீக்கம், வயிறு நிறைந்தாற்போல் எப்போதும் உணருதல்

l எடை குறைதல்

l அதிக முதுகு வலி

l அதிக நெஞ்செரிச்சல்

l இடுப்புப் பகுதியில் எப்போதும் வலியை உணர்தல்

l மலம் கழிக்கும் பழக்கம் மாறுதல்

l அழுத்தத்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

- இவை எதுவும் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்பதால் புற்றுநோய் என்பதைக் கண்டறிவது கடினம். சில செல்களில் வரும் கட்டிகள் வேகமாகப் பரவக்கூடியவை. வேறு சில செல்களில் வரக்கூடிய புற்றுநோய் சற்று மெதுவாகப் பரவக்கூடியது.

நோயின் நிலைகள்

சினைப்பைப் புற்றுநோயின் முதல் நிலையில் இது ஒரு சினைப்பையில் மட்டுமே இருக்கும். இரண்டாம் நிலையில் இரு சினைப்பைகளிலும் பரவி இருக்கும். மூன்றாம் நிலையில் சினைப்பைக்கு அருகில் இருக்கும் உறுப்புகளுக்குப் பரவும். நான்காம் நிலையில் நுரையீரல், மூளை என எல்லா இடங்களிலும் பரவிவிடும்.

சிகிச்சை முறை

பரவியிருக்கும் நிலையின் அடிப்படை யிலேயே சிகிச்சை முறைகளும் அமையும்.

l அறுவை சிகிச்சை: கட்டியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுதல்.

l கீமோதெரபி: இது நிலைகளைப் பொறுத்தது. அந்தந்த நிலைகளுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு வகையான கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.

l ரேடியோ தெரபி

l சிலநேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் கீமோதெரபி, மாத்திரைகள் மூலமாகவும் அளிக்கப்படுகிறது.

சோதனை முறைகள்

முதலில் மருத்துவர் உட்புறப் பரிசோதனை செய்வார். பின் அல்ட்ரா சவுண்ட் சோதனை. அதைத் தொடர்ந்து ரத்தப் பரிசோதனை (serum CA125). தேவைப்பட்டால் CT, MRI போன்ற சோதனைகள் செய்யப்படும். திரவமே வெளிவரத் தொடங்கியிருந்தால் பயாப்சி அல்லது லேப்ரோஸ்கோபி செய்யப்படுகிறது. சில நேரம் எந்த நிலை என்று கண்டறிவதற்காகவும் இவை செய்யப்படும்.

பலரும் ஏன் பெண்ணாகப் பிறந்தோம் என்று வருத்தப்படுகின்றனர். இது தேவையற்றது. பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட வேண்டும். அதற்கு முதலில் நமது உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க வேண்டும். பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் வரை பலவற்றைப் பற்றி இந்தத் தொடரில் பார்த்தோம். இந்தப் பருவங்களில் வரும் பிரச்சினைகளைப் பற்றியும் பார்த்தோம். இந்தத் தகவல்கள் எல்லாம் படித்துவிட்டுப் பயப்படுவதற்காக அல்ல.

அறிகுறிகள் தெரிந்தால் உடனே தேவையான முயற்சியைச் செய்வதற்காகத் தான். அதேபோல் தன்னுடைய பிரச்சினைகள் குறித்து ஒரு மகளிர் மருத்துவரை அணுகி, தெளிவு பெறுவதற்குக் கூச்சப்படவோ, வெட்கப்படவோ கூடாது. பெண்களின் ஆரோக்கியம்தான் அந்தக் குடும்பத்தின் அடிப்படை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் தங்களைச் சார்ந்தவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோலத் தங்களுடைய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முற்றிய நிலையிலேயே வேறு வழியில்லாமல் மருத்துவரிடம் வருகிறார்கள். அதேபோல் வெளிப்புறத் தோற்றத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அக ஆரோக்கியத்துக்குக் கொடுப்பதில்லை. அக ஆரோக்கியம்தான் உண்மையான அழகு என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

l உணவு: சத்தான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

l உடற்பயிற்சி: குறைந்தது 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், நேரம் மாற்றிச் செய்யாமல் தினமும் ஒரே நேரத்தில் செய்யும்போது மூளை அதைப் புரிந்துகொண்டு செயல்படுவதால் நல்ல பலனைக் கொடுக்கும்.

l மன ஆரோக்கியம்: எப்போதும் நேர்மறை யான சிந்தனைகளைக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பிரச்சினை இருக்கும். அந்தப் பிரச்சினைகளிலிருந்து எப்படி நாம் வெளியே வருவது என்று நம் மனத்தைச் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும். நல்ல விஷயங்களைப் பார்ப்பது, நல்ல விஷயங்களைப் படிப்பது போன்ற செயல்கள் மூலம் நாம் இதைச் சாத்தியமாக்கலாம்.

l எப்போதும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காலைப் பயன்படுத்தாமல் இருந்தால் அது சூம்பிப்போவதுபோல மூளையைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதுவும் மங்கிப்போகும். மறதி போன்றவை வரும். ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்வதன் மூலமும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள், விளையாட்டுகள் மூலமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயல வேண்டும்.

l நல்ல சுற்றத்தாரை அமைத்துக்கொள்ளுதல் (social network) அவசியம்.

நாம் நம் உடல், மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நம் வாழ்க்கைமுறையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இனி எல்லாம் நலமே!

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்