பருவத்தே பணம் செய்: வெற்றிக்கு மூன்று வழிகள்

By சி.முருகேஷ்பாபு

பங்குச் சந்தை முதலீட்டின் உள்ளே நுழையவிடாமல் எதையாவது சொல்லிக்கொண்டே போகிறாரே என்று உங்களுக்குத் தோன்றலாம். அடிப்படை விஷயங்கள், பொதுவான முதலீட்டு வாய்ப்புகள் பற்றிப்பேசுகிற போதே ஏராளமான சந்தேகங்களோடு கடிதம் எழுதுகிறார்கள் வாசகர்கள். அப்படியிருக்கும்போது பங்குச் சந்தை முதலீட்டைப் பற்றிச் சொல்லும்போது மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

அரிச்சுவடியை எத்தனை முறை படித்தாலும் தவறில்லை. நாம் கணினியில் கணக்குப் போடும் காலத்துக்கு முன்னேறிவிட்டாலும் பள்ளிக் கூடத்தில் கோரஸாகப் பாடியபடியே படித்த கணக்கு வாய்ப்பாடு பயன்படாமல் போவதில்லை. அதுபோலத்தான் முதலீடு சார்ந்த முன் படிப்பினைகளும். அவற்றை வரிசையாகப் பார்க்கலாம்.

தெளிவு தேவை

முதலீடு பற்றிய அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும். நம்மிடம் பணம் இருக்கிறது, அதை முதலீடு செய்யப் போகிறோம் என்ற மனநிலை இல்லாமல் பங்குச் சந்தை பற்றியும் அதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெளிவான அறிவைப் பெற்ற பிறகுதான் உள்ளே நுழைய வேண்டும்.

ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவு இருந்தாலும் எந்த நேரத்தில் சந்தையின் உள்ளே நுழைய வேண்டும், எப்போது வெளியேற வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்றெல்லாம் அடிப்படையாகத் தெரிந்து வைத்திருந்தால்தான் நம்மால் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும். அதனால், சந்தை பற்றிய அறிவும் முக்கியம். அதில் உள்ள ரிஸ்க்கையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சரி, இந்த ரிஸ்க்கையும் தாண்டி நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துதான் ஆக வேண்டுமா? வேண்டும். காரணம் இதில் சுயநலம் மட்டுமல்ல, பொதுநலமும் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச் சந்தையில் கொஞ்சமாவது பங்கெடுத்துக்கொள்வதன் மூலம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு அணில் போலச் சிறு பங்கை ஆற்றுகிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் பலமாக இருக்கிறதா பலமில்லாமல் தவித்துக்கொண்டு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் முக்கியமான கருவியாக பங்குச் சந்தை இருக்கிறது. அந்தச் சந்தையை வெளிப்படுத்தும் சென்செக்ஸும் நிஃப்டியும் நாட்டின் நிலையைச் சொல்வதாகவே இருக்கிறன. சென்செக்ஸ் உயர்ந்தால் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று சொல்கிறோம். அது சரிந்தால் பொருளாதாரமும் நொண்டி அடிக்கிறது என்கிறோம். அதனால் நம்முடைய பங்குச் சந்தை முதலீடும் நாட்டின் நலனுக்குப் பயன்படட்டுமே.

நாம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களில் நம்முடைய முதலீட்டைச் செய்யும்போது நம் பணத்தின் மூலம் நாடு வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்போது நமக்குப் பெருமைதானே! கட்டுமானத் துறையோ எரிசக்தித் துறையோ எதுவாக இருந்தாலும் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் பொறுப்போடு செயல்பட முடியும்.

அதனால் மட்டுமல்ல, பங்குச் சந்தை போன்ற முக்கியமான முதலீட்டு வாய்ப்பில் நாம் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது. இப்போதைய கணக்கின்படி பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சதவிகிதம் மொத்த ஜனத் தொகையில் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டாமல் தவிக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் பொது நலத்தோடு இருக்க வேண்டியது அவசியம்தானே!

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் பெரிய பெரிய நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட நம்முடைய மூலதனமும் பயன்படும். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் திட்டம் தீட்டும்போது அதில் நம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டுமல்லவா?

எண்ணித் துணிக

முடிவெடுத்த பிறகு அதில் காட்ட வேண்டிய தீவிர உறுதியும் முதலீட்டாளர்களுக்குத் தேவை. முடிவெடுத்து இறங்கிவிட்டால் அதன் பிறகு அதை எண்ணி வருந்துவது இழுக்குதான். உங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தொடங்கும் முன் அதற்கு ஆதரவும் எதிர்ப்புமான பல தகவல்களைச் சேகரியுங்கள். அவற்றை வைத்து மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தி முடிவெடுங்கள். ஆனால், முடிவு செய்துவிட்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும்.

அச்சச்சோ, சந்தை இன்னும் ஏறும் என்று தெரியாமல் விற்றுவிட்டேனே என்று வருந்துவதோ, இவ்வளவு சரியும்போது வாங்கிப் போடப் பணமில்லாமல் முன்பே முதலீடு செய்து தொலைத்துவிட்டேனே என்று அங்கலாய்ப்பதோ தேவையில்லை.

உங்கள் மனதில் முதலீடு செய்யும்போதே இலக்கு இருக்க வேண்டும். அதை அடைந்த பிறகு முதலீட்டை விட்டு வெளியே வந்துவிடுங்கள். அதற்குப் பிறகு சந்தை என்ன ஆனாலும் அதைப் பார்க்க வேண்டாம். லாபம்தான் இலக்கு என்றாலும் அதிக லாபத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதிக லாபத்துக்காக ஏங்கி நின்றால் ஒருவேளை சடாரென்று சரிவு ஏற்பட்டு மொத்தத்தையும் இழக்க நேரிடலாம்.

அப்படியானால் ஆசைப்படக் கூடாதா? இல்லையே, அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அப்போதுதான் நம்மால் முன்னேற முடியும். உங்கள் ஆசை என்ன? யோசித்துவையுங்கள், அதை நிறைவேற்றும் வழியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்