முகங்கள்: வெயிலோடு மல்லுக்கட்டும் பெண்கள்!

By எல்.ரேணுகா தேவி

சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல், வழியும் வியர்வைத் துளிகளைத் துடைத்தெறிந்துவிட்டுப், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள். சாலையோரங்களில் கிடைக்கும் நிழலில் ஒதுங்கிக்கொண்டு, தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்குக் காரணம் அவர்களின் வறுமைதான்.

கும்மிடிப்பூண்டிக்கு அருகே கிளிகோடி கிராமத்திலிருந்து தினமும் காலை ஐந்து மணிக்குக் கிளம்பி, திருவல்லிக்கேணியில் நுங்கு வியாபாரம் செய்கிறார் கனகா. பூவின் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும் இவரின் வாழ்க்கை மென்மையாக இல்லை. நண்பன் இறந்த துக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மகனை நினைத்து கடந்த ஓராண்டாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் கனகா. துயரத்திலிருந்து மீண்டுவர உதவியாக இருப்பது, இவரது மகன் விட்டுச் சென்ற நுங்கு வியாபாரம்தான்.

“என் பையன் படிச்சுக்கிட்டே நுங்கு வியாபாரம் பார்த்துக்கிட்டு இருந்தான். திருவல்லிக்கேணி மார்க்கெட்டில் எல்லோரும் அவனுக்கு நண்பர்கள். ஆனா, இப்போ அவன் இல்லை. நான் காலையிலிருந்து இந்த ஒரு கூடை நுங்கை வச்சுக்கிட்டு வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். என் பையன் இருந்திருந்தால் ஒரு நாளைக்கு நாலு கூடை வித்து முடிச்சிருப்பான். இவன் இப்படிப் பண்ணிக்கிட்டானே என்ன செய்றது? எங்களையெல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்கலையே... என் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். மகள் வந்தா போனா ஏதாச்சும் செய்யணும் இல்லையா, அதான் வியாபாரம் பண்ணறேன். என் மனசும் கொஞ்சம் கொஞ்சமா மாறும்ங்கிற நம்பிக்கையில் இந்தக் கூடையைச் சுமந்துக்கிட்டு இருக்கேன்” என்று கண்ணீர் வடிக்கும் கனகா, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டுத் தேவைகளையும் வியாபாரத்தையும் சமாளிக்கிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய மகனின் நினைவோடுதான் விடிகிறது, முடிகிறது.

பெற்ற நான்கு பிள்ளைகளும் கடைசிக் காலத்தில் கைவிட்டதால், வேறு வழியின்றி கேழ்வரகுக் கூழ் வியாபாரம் செய்துவருகிறார் லட்சுமி. சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை அருகில் இருக்கும் வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் இவரது வாடிக்கையாளர்கள்.

“உடம்புல தெம்பு இருந்தவரைக்கும் கட்டிட வேலைக்குப் போயிட்டிருந்தேன். வயசான பிறகு படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியல. நாலு பசங்க இருந்தும் யாரும் ஒரு வாய் கஞ்சி ஊத்தலை. அதனால் சொந்தமா தொழில் செய்ய முடிவு பண்ணேன். தண்டல் காசு வாங்கி இந்தக் கடையை ஆரம்பிச்சேன். பத்து வருஷம் ஓடிடுச்சு. எங்கிட்ட தொடர்ந்து கூழ் குடிக்கிறவங்க வேறு எங்கேயும் சாப்பிட மாட்டாங்க. பசியால இருக்குறவங்க இந்தக் கூழை வயிறார குடிச்சு, மனசார வாழ்த்தினாலே சந்தோஷம்” என்று நிறைவாகச் சொல்கிறார் லட்சுமி. கூழுக்குத் தொட்டுக்கொள்ள தக்காளிச் சட்னி, கருவாட்டுக் குழம்பு, புதினா துவையல், மாங்காய் ஊறுகாய் என்று விதவிதமான பதார்த்தங்களை வைப்பதால் தனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில் சாத்துக்குடி, கிர்னி, எலுமிச்சைப் பழச்சாறுகளை விற்பனை செய்துவருகிறார் வள்ளி வெங்கடேசன். ஆட்டோ ஓட்டுநரான கணவர் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டதால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

“குடும்பத்துக்காக என் கணவர் கஷ்டப்பட்டார். அவருக்குக் கஷ்டம் வரும்போது நான் துணையா இருக்க முடிவு செய்தேன். நமக்குன்னு ஒரு தொழில் இருந்தால் யார் கிட்டேயும் கைகட்டி நிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடன் வாங்கிதான் இந்த வியாபாரம் செய்றேன். வருமானத்தில் கடனைக் கட்டிக்கிட்டு, வீட்டுத் தேவைகளையும் பார்த்துக்கறேன்” என்று சொல்லும் வள்ளி, மகள் பொறியியல் படித்துவருவதைத் தன் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறார்!

தனக்குக் கிடைக்காத கல்வி, தன் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சோற்றுக் கற்றாழை பானத்தை விற்பனை செய்துவருகிறார் ஞானம் மேரி. இவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்தவர். சொந்தப் பிரச்சினைகளால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டு மனக்கஷ்டத்தில் இருந்தவருக்கு, பாட்டி கொடுத்த யோசனைதான் சோற்றுக் கற்றாழை பானம் விற்பனை செய்வது.

“நாலு வருஷமா இந்த வியாபாரம் செய்றேன். ஒரு நாளுக்கு அஞ்சு கிலோ கற்றாழை வாங்கி, சதைப் பகுதியைக் கூழாக்கி, மோரில் கலந்து விற்கிறேன். வெயிலுக்கு ஏற்ற அருமையான பானம். உடல் சூடு தணியும். அதனால் பலரும் விரும்பிக் குடிக்கிறாங்க. வியாபாரம் நல்லா போகுது. குடும்பத்தை நடத்துற அளவுக்கு வருமானமும் கிடைக்குது. நான் இந்த வெயிலில் கஷ்டப்படற மாதிரி என் புள்ளைங்க கஷ்டப்படக் கூடாது. அவங்க படிச்சு ஒரு வேலைக்குப் போகணும். அதுக்காக எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிப்பேன்” என்கிறார் திடமான குரலில் ஞானம் மேரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்