முகம் நூறு: முன்னுதாரண ஆசிரியர்கள் முன்னேறும் மாணவர்கள்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

ஆசிரியர் ஒருவர் நடனமாடியபடியே  ககா, கிகீ, குகூ... என உயிர்மெய் எழுத்துக்களை  ராகத்துடன் மாணவர் களுக்குச் சொல்லிகொடுக்கும் வீடியோ வலைத்தள உலகில் வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்தவர்களில் பலர், ‘நாம் படித்த போது இப்படியெல்லாம் சொல்லித் தரவில்லையே’ என ஏங்கியிருக்கலாம். ஆனால், திருவாரூர் மாவட்டம் ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு அந்த ஏக்கம் இல்லை. காரணம் அங்கேயும் இப்படியான செயல்வழிக் கற்றல் முறையில்தான் பாடம் நடத்தப்படுகிறது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்குக் கற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பாடலாகவோ கதையாகவோ மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அதை அவர்களால் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், போதுமான பயிற்சியும் கல்வி உபகரணங்களும் இல்லாத நிலையில் அதை  நடைமுறைப்படுத்துவது சவாலானது.

அந்தச் சவாலையே சந்தோஷமாக ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள் ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பிள்ளைகளே இந்தப் பள்ளியில் அதிகமாகப் படிக்கின்றனர். ‘அழாமல் ஸ்கூலுக்குப் போகணும்’ என்று குழந்தைகளைச் சமாதானப்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவதைப் பார்த்தே பழக்கப்பட்ட நிலையில், பெற்றோரைப் பார்த்த நம்மை, பள்ளியின் நுழைவு வாயிலைப் பார்த்ததுமே துள்ளிக் குதித்துச் சிட்டாகப் பறக்கும் மாணவர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

“எங்கள் பள்ளியில் ஆசிரியர், தலைமையாசிரியர் எனப் பாகுபாடு கிடையாது. அனைவரும் ஆசிரியர்கள் என்ற ஒற்றை வார்த்தைக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக இருக்கிறாம். பெற்றோருக்கு அடுத்தபடியாகப் பிள்ளைகளை இந்தச் சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக, குடிமகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. அதை எங்கள் பள்ளி ஆசிரியர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். மாணவர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகவே நடத்துகிறார்கள். பாடங்களை எளிமையாக நடத்தச் செயல்வழி கற்றல் முறை உதவியாக உள்ளது” எனப் பெருமிதத்தோடு கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி.

அவரது வார்த்தைகளை மாணவர்கள் தங்கள் திறமையால் மெய்ப்பிக்கின்றனர். முதல் வகுப்பு மாணவர்கள்  தமிழ் எழுத்துகளையும் ஆங்கில வார்த்தைகளையும் பாட்டுப் பாடுவதைப் போல் ராகத்துடன் சொல்கிறார்கள். அவர்களின் தமிழ்ப் பேச்சு, காதில் இன்பத் தேனை வார்க்கிறது. தமிழ், ஆங்கிலப் பாடங்களை மட்டுமே ராகத்துடன் பாட முடியும் என நினைப்பைப் பொய்யாக்கி, கணக்கு வாய்ப்பாடுகளைக்கூட ராகத்துடன் பாடி அசத்துகிறார்கள் மாணவிகள். ஆங்கில வார்த்தை விளையாட்டு, அறிவியல், சமூக அறிவியல் போன்றவை குறித்தும்  சிறப்பாக விளக்குகிறார்கள்.

பாடம் தொடர்பான திறன் வெளிப்பாட்டைத் தொடர்ந்து கலை, இலக்கிய நிகழ்வு நடந்தது. “அருவி என்ற சிறுகதையை எங்கள் அனுசுயா சொல்வாள்” என்று பெருமிதத்துடன் ஆசிரியை  சொல்ல, அனுசுயா சிறிது பயமும் வெட்கமுமாகத் தயங்கினாள். அந்தக் குழந்தையின் கன்னத்தை வருடி ஆசிரியை உற்சாகப்படுத்த,  பின்னர் அனுசுயாவின் ‘அருவி’ கொட்டியதில் குழந்தைகள் மட்டுமல்ல; நாமும் மகிழ்ந்து நனைந்தோம்.  

தொடர்ந்து ரித்திகாவின் பாட்டு, மாணவர்கள் சஞ்சய், வைஷ்ணவி இருவரின் பேச்சரங்கம் என இலக்கிய நிகழ்வுகள் வரிசை கட்டின. “ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் எங்கள் மாணவிகளின் கையெழுத்தைக் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்” என ஆசிரியை முத்துலெட்சுமி பெருமிதத்துடன் சொல்கிறார்.

“குழந்தைகள் எங்களை இரண்டாவது தாயாக உணர்வதன் வெளிப்பாடுதான் இது. அந்தப் பிணைப்பால்தான் நாங்கள் கற்றுத் தரும் கல்வியை அவர்களால்  முழுமையாக உள்வாங்க முடிகிறது.  அதற்குத் தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமிதான் காரணம்” என அறிவியல் ஆசிரியர் செந்தாமரை  சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்தார் தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி. “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பெரியார் சொன்ன ‘வெங்காயம்’ போலத்தான். கடமையோடு ஒற்றுமையும் இணைந்திருப்பதாலதான் குழந்தைகளுக்குக் கல்வி என்னும் அருமையான உணவை ஊட்ட முடியுது. அதோட  வெளிப்பாடுதான் இது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்