எசப்பாட்டு 38: இதையும் கடந்துவர வேண்டும்

By ச.தமிழ்ச்செல்வன்

காமுகனும் காமக்கொடூரனும் காட்டில் பிறந்து தனியே வளர்ந்து வந்தவர்கள் அல்லர். அவர்களும் ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்த சாதாரண மனிதர்கள்தாம். பிறகெப்படி அவர்கள் வல்லுறவாளர்களாக (RAPIST) மாறினார்கள்? அவர்களது உளவியலின் வேர் எங்கிருந்து கிளம்புகிறது? இது குறித்த கள ஆய்வுகளும் உள ஆய்வுகளும் மிகவும் குறைவு.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட பின்னணியில் நிறைய விவாதங்கள் நடந்தாலும் ஓர் ஆண் எப்போது, எப்படி ரேப்பிஸ்ட்டாக மாறுகிறான் என்ற கோணத்தில் பெரிதாக விவாதங்கள் நடைபெறவில்லை. நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் அதைக் குணப்படுத்துவதன் முதல்படி அல்லவா?

குற்றவாளிகளுடன் உரையாடல்

இந்தக் கேள்விகளோடு மதுமிதா பாண்டே என்ற இளம் பெண் ஆய்வாளர் டெல்லி திகார் சிறைக்குச் சென்றார். சிறையில் இருந்த பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளைச் சந்தித்தார். குற்றவியல் துறைக்கான டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான தரவுகளைப் பெறவே வல்லுறவுக் குற்றவாளிகள் நூறு பேருடன் அவர் உரையாடினார்.

அவர்கள் எல்லாம் அரக்கர்கள் என்ற எண்ணத்துடன் சிறைக்குள் போன அவர், அவர்களோடு பேசப்பேச அவர்களும் நம்மோடு வாழும் சாதாரண மனிதர்கள்தாம் என்பதைக் கண்டுகொள்கிறார். அது இன்னும் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களே சந்தர்ப்பங்களை உருவாக்கி அல்லது சந்தர்ப்பம் வாய்க்கும்போது வல்லுறவுக் குற்றம் புரிகின்றனர்.

அவர் சந்தித்த 100 குற்றவாளிகளில் எவருக்குமே தாம் செய்த கொடுமை குறித்த குற்றவுணர்வு இல்லை. தங்கள் செயலை நியாயப்படுத்தவே ஒவ்வொருவரும் முயன்றுள்ளனர். பெரும்பாலானோர் அந்தப் பெண்கள் மீதே குற்றம் சாட்டினர். ‘அவள் என்னைத் தூண்டிவிட்டாள் என்றோ அவள் மறுக்கவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ இல்லை, அதனால் அவள் சம்மதத்தோடுதான் நடந்தது’ என்றோதான் அந்த நூறு பேரும் சொன்னதாக மதுமிதா குறிப்பிடுகிறார்.

எது சம்மதம்?

குற்றவாளிகள் குறிப்பிடும் ‘சம்மதம்’ என்பது என்ன? பெண் குறித்த ஆண் மனத்தின் எண்ணற்ற கற்பிதங்களின் பட்டியலில் இந்தச் சம்மதமும் ஒன்று. ‘அவள் வேண்டாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். அவள் தொடாதேன்னு சொன்னா தொடுன்னு அர்த்தம்’ என்ற ஆணுலக மொக்கைப் புரிதல் பரவலாக இருக்கிறது. பல தமிழ்த் திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. பெண்ணின் காதல், காமம் ஆகியவை குறித்து நம் சமூகத்தில் உலவும் அத்தனை கருத்துக்களும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டவையே. இவை பாலியல் வல்லுறவை நோக்கி நகரும் ஆண் மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுத்து ஊக்குவிக்கின்றன.

மதுமிதாவின் ஆய்வுக்குள் வந்த நூறு பேரில் 80 பேர் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது ஆரம்பப் பள்ளியைத் தாண்டாதவர்கள். எனில், அவர்கள் மனங்களில் இதுபோன்ற கருத்துகள் எப்படிப் போய்ச்சேர்ந்தன? ஒட்டுமொத்தமாக நம் சமூகத்தின் உளவியலே இப்படியாகத்தான் இருக்கிறது. ஆகவேதான் யாரும் கற்றுக்கொடுக்காமலேயே ஆண் மனம் பெண்ணுடல், பெண் மனம் குறித்த தவறான கற்பிதங்களை நூறு சதவீதம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கிறது. கூச்சமோ குற்றவுணர்வோ இல்லாமல் பாலியல் சீண்டல் தொடங்கி வல்லுறவுவரை ஈடுபட முடிகிறது.

shutterstock_775551214 [Converted]_colவாழ்வை மீண்டும் கொண்டாடும் சிறுமி

மதுமிதாவின் பட்டியலில் 49-வது இடத்தில் உள்ள குற்றவாளி, ஐந்து வயதுப் பெண் குழந்தையை வல்லுறவு செய்தவன். அவனுடைய நேர்காணலில் “அவள் என்னைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுச் சீண்டிக்கொண்டே இருந்தாள். அவளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தே அப்படிச் செய்தேன். இப்போது வருத்தப்படுகிறேன். கெட்டுப்போன அவளை இனிமேல் யாரும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள். சிறையிலிருந்து வெளியேறியதும் அவளை நானே திருமணம் செய்து கண்டிப்பாக வாழ்வளிப்பேன்” என்று ‘பெருந்தன்மை’யோடு கூறுகிறான்.

அந்தக் குற்றவாளி சொன்ன தகவலின் அடிப்படையில் மதுமிதா அவனது கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குழந்தையையும் அக்குழந்தையின் அம்மாவையும் சந்தித்திருக்கிறார்.

அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம் அது. பெண்ணுக்கு இப்படி ஆனதால் தகப்பன் எங்கோ ஓடிப் போய்விடுகிறான். தாய் மட்டுமே இருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு இப்போது பத்து வயது. பள்ளிக்குப் போகிறாள். நன்றாகப் படிக்கிறாள். ஐந்து வயதில் தனக்கு நேர்ந்தது பற்றி இப்போது அவளுக்கு ஏதும் நினைவில்லை.

அந்த நினைவே வராமல் தாய் அவளை வளர்க்கிறாள். குற்றவாளி சிறையில் இருக்கும் செய்திகூட அவர்களுக்குத் தெரியவில்லை. அந்தச் செய்தி கேட்டு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைகிறாள் அந்தத் தாய். இப்படியெல்லாம்கூட நம் நாட்டில் நடக்குமா என வியக்கிறாள். அறியாமையும் வறுமையும் பின்னிப் பிணைந்த இந்திய வாழ்க்கை இது போன்ற தருணங்களில் இன்னும் கூடுதல் அச்சத்தைத் தருகிறது.

மனமே மாமருந்து

அந்தத் தாய் பற்றி மதுமிதா எழுதியதை வாசிக்கையில் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையில் வரும் தாய் நினைவுக்கு வந்தாள். கல்லூரிப் பெண் ஒருத்தியை காரில் ஏற்றி, மயக்கி, உறவுகொள்ளும் ஒரு பணக்காரன் அவளை காரிலேயே கொண்டுவந்து வீட்டில் விட்டுப்போகிறான். நடந்ததைச் சொல்லி அழும் அவளது தலையில் தண்ணீரைக் கொட்டிக் குளிக்கவைத்துப் பின் அந்தப் பெண்ணின் அம்மா கூறுவதாக வரும் பகுதி இது:

“நீ சுத்தமாயிட்டே.. ஆமா.. தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப்போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப்போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறா? எல்லாம் மனசுதான்டி.. மனசு சுத்தமா இருக்கணும்.. ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத்துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனாலேதான் ராமரோட பாதத்துளி அவ மேலே பட்டுது. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே”

குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித்தருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வன்முறைக்கு ஆளான பெண்ணுக்கு உளவியல் ரீதியான ஆறுதலும் சிகிச்சையும் அளிப்பது.

உடல்ரீதியாக வேறெந்த உறுப்பின் மீதும் தாக்குதல் நடந்தால் எப்படி அதை நாம் கடக்கிறோமோ அப்படித்தான் பாலியல் வன்முறையையும் கடக்க வேண்டும் என்பதே ஜெயகாந்தன் சொல்லும் ஒரு தீர்வு. ஆனால், கதையில் வருவதைப் போல அவ்வளவு எளிதாகத் துடைத்துப் போட்டுவிட முடியுமா? அப்படித் துடைத்துப் போட நம் குழந்தைகளைப் பயிற்றுவிக்க முடியாதா என்ன? அதுவும் தேவைதானே?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்