இல்லம் சங்கீதம் 33: குழந்தைகள் தூங்கியாச்சா?

By எஸ்.எஸ்.லெனின்

அழகாய் வரும்

அருவிகள் எல்லாம்

பாறையின் வெப்பத்தில்

ஆவியாகிவிடுகின்றன

-சேவியர்

திருமணப் பேச்சு தொடங்கியதிலிருந்தே மகள் வித்யாவிடம் தென்பட்ட மாற்றங்கள் அவளுடைய பெற்றோருக்குக் கவலை அளித்தன. திருமண ஏற்பாட்டை நிறுத்தும்படி அவள் சொல்ல, பெற்றோர் திகைத்தனர். மகளின் மனதை அறியும் முயற்சியில் சோர்ந்துபோனவர்கள், மனநல ஆலோசகரிடம் அவளை அழைத்துச் சென்றனர். அவள் திருமணத்தை விரும்பாததற்கான உளவியல் காரணமும் தெரிந்தது. மகள் திருமணத்தை வெறுக்கத் தாங்களே காரணமாக இருந்ததை அறிந்ததும் பெற்றோர் அதிர்ந்துபோனார்கள்.

ஒரே மகள் வித்யாவை அன்போடு அரவணைத்து வளர்த்த பெற்றோர், எப்போதும் அவளைத் தங்களுடனே உறங்கப் பழக்கி இருந்தனர். இரவில் மகள் உறங்கிவிட்டதாக நம்பி அந்தத் தாயும் தந்தையும் கணவன் - மனைவியாக மாறியது பிஞ்சு மனதைப் பாதித்திருக்கிறது. அறிந்தும் அறியாத வயதில் மனதில் பதிந்த காட்சி, அவள் வளர்ந்தபோது இல்லற வாழ்க்கைமீது இனம்புரியாத அச்சத்தையும் வெறுப்பையும் வளர்த்தது. அதுவே திருமண வாழ்க்கை மீது வெறுப்பு மண்டவும் காரணமானது. மனநல மருத்துவத்தின் உதவியால் மகளைக் குணமாக்கி உரிய மணவாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்குள் அந்தப் பெற்றோர் திணறிவிட்டனர்.

தற்சார்புக்குப் பழக்குவோம்

குறிப்பிட்ட வயதுவரை குழந்தைகளின் வளர்ப்பில் அன்பும் அரவணைப்பும் அவசியம். குழந்தைகளின் மன மற்றும் உடல்ரீதியிலான வளர்ச்சியில் இந்த அரவணைப்புக்கும் முக்கியப் பங்குண்டு. பெற்றோருக்கு நடுவே படுத்துக்கொண்டு கதைகள் கேட்டபடியும் தாய்/தந்தை மீது கால் போட்டவாறும் உறங்கிப்போகும் குழந்தைகளைப் பிரிந்து படுக்க வைக்க பெற்றோருக்கு மனம் வருவதில்லை. ஆனால், குழந்தையின் எந்த வயதுவரை இவ்வாறு பெற்றோருடன் ஒரே அறையில் அல்லது படுக்கையில் இணைந்து உறங்கலாம் என்பதற்கும் வரைமுறை உண்டு.

குழந்தைகள் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் தற்சார்பு மிக்கவர்களாகவும் வளர, அவர்களைச் சுயமாய்த் தங்கள் கடமைகளைச் செய்யப் பழக்குதல் அவசியம். குறிப்பிட்ட வயதிலிருந்து தனியாக உறங்குவதையும் இதில் சேர்க்கலாம். இந்தக் குறிப்பிட்ட வயது என்பது பொதுவாக எட்டு வயதைக் குறிக்கும். பெற்றோர், குழந்தைகள் இருவரது இயல்பைப் பொறுத்தும் வளர்ப்பின் தன்மையைப் பொறுத்தும் ஓரிரு ஆண்டுகள் முன்பின்னாக இது அமையலாம். வளர்ந்த நாடுகளில் இதை வலியப் பழக்குகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகத் தனியறை ஒதுக்குவதே பல குடும்பங்களில் சவால் நிறைந்தது. கலாச்சார அடிப்படையிலும் குழந்தைளுடன் ஒன்றாக உறங்குவதையே விரும்புகிறோம்.

அறிந்தும் அறியாமலும்

பெற்றோர் மத்தியில் மட்டுமல்ல விருந்தினர்கள், உறவினர், அண்டை அயலார் எனப் பிறரிடையேயும் குழந்தைகள் பார்க்கும் காட்சிகள் அவர்களின் மனதில் தங்கி எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும். பெற்றோரைப் பொறுத்தவரை குழந்தை உறங்கியதைப் பல முறை உறுதி செய்த பிறகே தங்களுக்கான நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் கணவனின் விருப்பதைப் புறக்கணிக்கும் அளவு குழந்தை வளர்ப்புக்கு இல்லத்தரசிகள் முக்கியத்துவம் தருவார்கள். அதையும் மீறி பெற்றோர் அல்லது பிற தம்பதி அருகில் குழந்தைகள் புரிந்தும் புரியாதுமாய் அறியும் காட்சிகள் அவர்களிடம் எதிர்மறைப் பாதிப்புகளை உண்டாக்கும்.

“2 - 8 மற்றும் 9 - 14 எனக் குழந்தைகளின் வயதைப் பொறுத்து பாதிப்புகள் அமையும். இரண்டாவது பிரிவான 9-14 வயதுக் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பார்கள். மாறாக, 2-8 வயதுக் குழந்தைகள் மத்தியில் சற்றுக் கவனக் குறைவாக இருப்பார்கள். உண்மையில் இந்த 2-8 வயதில் குழந்தைகள் பார்க்கும் காட்சி அவர்களுக்கு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தும்.

அது அவர்களது மனதில் வடுவாகப் புதைந்து, எதிர்கால மணவாழ்க்கைக்கு விரோதமான எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கும். எனவே, பத்து வயதுவரை குழந்தைகள் முன்பாக உடைமாற்றுவது, அந்தரங்கமாக இருப்பது உட்பட எந்தவொரு பாலியல் தொடர்பான மனப்பதிவுகளுக்கும் வாய்ப்பளிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார் மனநல மருத்துவர் பாலசுப்பிரமணியன்.

மேலும், கட்டற்ற இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்றவை மூலம் அவர்கள் பார்க்கிற பட்டவர்த்தமான காட்சிகள் அவர்களைப் பாதிக்கலாம். எனவே, அறியா வயதுக் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும்கூட அவசியம்.

அரவணைப்பு நல்லது

“பிஞ்சு மனதைப் பாதிக்கச் செய்யும் சங்கடங்கள் அவர்களிடம் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தும். தொடர்ந்து சில நாட்களுக்கு எவரிடமும் பேசாமல் இருப்பது, இறுக்கத்துடன் இருப்பது, இயல்பான கல கலப்பைத் தொலைப்பது, வெளியில் செல்ல பயப்படுவது, குறிப்பிட்ட நபர்களைத் தவிர்ப்பது போன்றவற்றில் ஏதாவதொரு அறிகுறியைக் குழந்தைகளிடம் கண்டால் பெற்றோர் அவற்றைக் கவனித்துப் பரிவுடன் நடந்துகொள்வது அவசியம். அவர்களை ஆறுதல்படுத்தி எப்போதும்போலப் பேசி, சிரித்து, அரவணைப்பு காட்டினால் ஓரிரு நாட்களில் அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவிடுவார்கள். மீளவில்லையெனில் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்” என்று வழிகாட்டுகிறார் மருத்துவர் பாலசுப்பிரமணியன்.

வளர்ந்த குழந்தைகள் வேறுவிதம்

பார்க்கக்கூடாததைப் பார்க்க நேரிடும் குழந்தைகள் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், அவர்களிடம் அச்சத்தைவிட ஆராயும் மனப்பான்மை மிகுந்திருக்கும். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசல்புரசலாக அறிந்திருப்பார்கள் என்பதால் அவற்றை எளிதாகக் கடந்துபோவார்கள். அவர்களில் சிலருக்கு இயல்பு மற்றும் சூழல் அழுத்தத்தால் ஆராயும் மனப்பான்மை அதிகமாகி, பிஞ்சிலேயே பழுக்கவும் நேரிடும். எனவே, எட்டு வயதுக்கு அப்பால் குழந்தைகளைத் தனியாக உறங்கப் பழக்குதல் அவசியம். பெற்றோர் என்றில்லை, புதிதாகத் திருமணமானவர்கள் உள்ளிட்ட உறவினர் தம்பதிகள் என குழந்தைகளை யாருடனும் உறங்க அனுமதிக்கக் கூடாது.

நேர்மறையான வளர்ப்பு

அதே வேளை பாலியல் குறித்தும் இல்லறத்தின் இணக்கம் குறித்தும் நேர்மறையாகக் குழந்தைகள் அறிந்துகொள்ளவும் பெற்றோரே வழிகாட்டியாக இருக்க வேண்டும். பாலியல் குறித்தும் ஆண் - பெண் நெருக்கம் குறித்தும் குழந்தைகள் குற்றவுணர்வு கொள்வதும் அவற்றைத் தமக்குள் புதைத்துக்கொண்டு ரகசியமாக வெளிப்படுத்த முயல்வதும் அவர்கள் பக்குவமான பெரியவர்களாக வளர உதவாது.

பாலியல் சார்ந்த குற்றச் செயல்கள், எதிர் பாலினத்தவரைத் தரக்குறைவாக நடத்துதல் போன்றவற்றுக்குக் குழந்தைப் பருவத்துப் பாலியல் சார்ந்த மனப்பதிவுகளும் காரணமாகலாம். தாயும் தந்தையும் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, ஒருவரையொருவர் கொண்டாடுவது, கன்னத்தில் முத்தமிடுவது ஆகிய அனைத்தையும் அன்பின் வெளிப்பாடாகக் குழந்தைகள் எதிரில் செய்வது அவர்கள் மனதில் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்