புற்றுநோயைக் கண்டறிய எறும்புகள் போதும்!

By நிஷா

புற்றுநோய் செல்கள், நம் உடலின் சாதாரண செல்களிலிருந்து மாறுபட்டவை. ஓயாது மாறும் தன்மைகொண்ட கரிமச் சேர்மங்களை உற்பத்திசெய்யும் திறன் அந்த செல்களுக்கு உண்டு. இந்தக் கரிமச் சேர்மங்களே புற்றுநோயைக் கண்டறியும் உயிரியக்கக் குறிப்பான்களாகத் (Bio-markers) திகழ்கின்றன. புற்றுநோய் கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் குரோமட்டோகிராபி, இ-நோஸஸ் (ஆர்டிஃபிசியல் ஆல்ஃபாக்டரி அமைப்பு) போன்ற பரிசோதனைகள் இந்தக் குறிப்பான்களின் மூலம்தான் புற்றுநோயைக் கண்டறிகின்றன. ஆனால், இவற்றின் முடிவுகள் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டவையாகவும், துல்லியமற்றதாகவும் இருக்கின்றன. இதற்கான செலவும் அதிகம்.

புற்றுநோயைக் குறைந்த செலவில், துல்லியமாகக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் சாத்தியப்படாத சூழலில், புற்றுநோய் செல்களை அவற்றின் உயிரியக்கக் குறிப்பான்களின் வாசனை மூலம் கண்டறிய நாய்களின் மோப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், புற்றுநோய் செல்களையும், பாதிப்பற்ற செல்களையும் பிரித்துணர்ந்து, புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாகக் கண்டறிவதற்கு நாய்களுக்குப் பல மாதங்கள் கடினப் பயிற்சி தேவைப்பட்டது. அவற்றின் துல்லியமும் 91 சதவீதம் என்கிற அளவில்தான் இருந்தது.

இந்த நிலையில்தான் எறும்புகளைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறியும் முயற்சியில் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டது. எறும்பின் மோப்ப ஆற்றல் பரவலாக அறியப்பட்ட ஒன்று. சொல்லப்போனால், மருத்துவ அறிவியல் வளர்ச்சியடையாத காலகட்டத்திலேயே, நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கு எறும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் ஃபார்மிகா ஃபுஸ்கா (Formica fusca) என்கிற எறும்பு வகைகளை ஆய்வுக்குப் பயன்படுத்தினர். அவற்றுக்குப் பட்டு எறும்புகள் (silky ants) என்றும் பெயர் உண்டு. அந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் செல்களைக் கண்டறிவதற்கு எறும்புகளுக்குச் சிறிது நேரப் பயிற்சியே போதுமானதாக இருந்தது. பயிற்சி கொடுத்த சில நிமிடங்களிலேயே அந்த எறும்புகள், ஆரோக்கியமான மனிதச் செல்களிலிருந்து புற்றுநோய் செல்களை வேறுபடுத்திக் கண்டறிந்தன.

”புற்றுநோய் செல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டறியும் முயற்சியில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் எறும்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே எளிதானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறது. எறும்புகள் புற்றுநோய் செல்களின் உயிரியக்கக் குறிப்பான்களை முகர்வதன் மூலம் எளிதாக அடையாளம் காணுகின்றன” என்று பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, புற்றுநோய் கண்டறிதலில் ஒரு முக்கிய மைல்கல். இத்தகைய துல்லியக் கண்டறிதல், புற்றுநோய்க்கான சிகிச்சையைத் துரிதப்படுத்தும். புற்றுநோய்க்குப் பலியாகும் மனிதர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

44 mins ago

க்ரைம்

48 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்