ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?

By பிருந்தா சீனிவாசன்

தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரமும் அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் கரோனாவின் இரண்டாம் அலையைத் தோற்கடித்துவிடும் அளவுக்கு ஆபத்தான வகையில் வேகமாகப் பரவிவருகின்றன. பலரும் மருத்துவ வல்லுநர்களைப் போலவும் ஆராய்ச்சியாளர் போலவும் கருத்துகளை உதிர்ப்பதுடன் அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கண்மூடித்தனமாகப் பரப்பவும் செய்கின்றனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இரண்டாம் நாளில் நடிகர் விவேக் மரணித்ததும் அதைத் தொடர்ந்த மக்களின் அச்சமும் இதற்கு ஒரு காரணம். ஒருவரது திடீர் மரணம் இப்படியான பதற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தலாம் என்கிறபோதும், இது தேவையற்ற பீதி என்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும் தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரம் மட்டுப்படவில்லை. தடுப்பூசிகள் மக்களிடம் என்னென்ன எதிர்விளைவை ஏற்படுத்தும்? அதை மருத்துவர்களே விளக்குகின்றனர்.

நடிகர் விவேக்கின் மரணத்துக்கும் கரோனா தடுப்பூசிக்கும் ஏன் தொடர்பு இல்லை?

டாக்டர் ஜோ. அமலோற்பவநாதன், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்

தடுப்பூசியால் ரத்தக் கட்டி ஏற்படுவதாகச் சொல்கி றார்கள். உண்மை யிலேயே தடுப்பூசியால் ரத்தக் கட்டி ஏற்படுவதாக இருந்தால், அதற்கு ஐந்து முதல் 15 நாள்கள் ஆகும். ஆனால், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டாம் நாளிலேயே இறந்துவிட்டார். அதனால், அவருக்குத் தடுப்பூசியால் ரத்தக் கட்டி உருவாகியிருக்க சாத்தியமில்லை.

விவேக் மாரடைப்பால் இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதயத்தில் இருக்கிற மூன்று கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்புக்கு இட்டுச் செல்கிறது. ரத்தக் குழாய்களில் தமனி, சிரை என்று இரண்டு பிரிவுகள் உண்டு. வெளிநாடுகளில் அஸ்ட்ரோ ஜெனேகா (இந்தியாவில் கோவிஷீல்டு) நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, சிரையில்தான் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அந்த நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. தவிர, விவேக்குக்கு இதயத் தமனியில்தான் அடைப்பு என்று மருத்துவர்கள் கூறியிருப்பதால், அது தடுப்பூசியால் ஏற்பட்ட அடைப்பாக இருப்பதற்குச் சாத்தியமில்லை. அது மட்டுமல்லாமல் விவேக் போட்டுக்கொண்டது கோவேக்சின் தடுப்பூசி, கோவிஷீல்டு அல்ல.

தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படும் என்பது உண்மையா?

டாக்டர் பாபு, இதய நோய் நிபுணர், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை

தடுப்பூசிக்கும் பக்கவிளைவுகள் உண்டு, ஆனால், அவை உயிருக்கு ஆபத்தானவையல்ல. அது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட பக்கவிளைவுகள் எத்தனை பேருக்கு ஏற்படுகின்றன என்பதும் முக்கியம். கரோனா தடுப்பூசிக்குக் காய்ச்சல், ஊசிபோட்ட இடத்தில் வீக்கம், தலைவலி போன்றவை சிலருக்கு ஏற்படும். இவை தடுப்பூசியின் இயல்பான விளைவுகள். மிக அரிதாக, அதாவது லட்சத்தில் ஒருவருக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக மருத்துவ ஆய்விதழ்கள் தெரிவிகின்றன. அதுவும்கூட, தடுப்பூசியால்தான் அது உருவானதா என்று ஆய்வுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் இந்த நேரத்தில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதய நோய் உள்ளிட்ட துணைநோய் உள்ள 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரசு கூறியிருப்பதால், அதைப் பின்பற்றுவதே அனைவருக்கும் நல்லது.

தடுப்பூசி போடுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் அனுரத்னா, பொன்னேரி அரசு மருத்துவமனை

கரோனா பரவல் உலகளாவிய பெருந் தொற்று என்பதால் அவசரகால நடவடிக்கையாக குறுகிய காலத்தில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவிஷீல்டுக்கு மூன்று கட்டப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, கோவேக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. இந்தப் பரிசோதனைகள் குறித்த தகவல்களை மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கரோனா தொற்று ஏற்படுகிறது என்றால், நாங்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். இதற்குத் திட்டவட்டமான விளக்கம் இருக்கிறது, தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோயின் தீவிரம் மட்டுப்படுத்தப்படும். அதை அரசாங்கமே கூறுவது நல்லது.

எத்தனை பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்று சொல்வதுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, அவர்களில் எத்தனை பேர் குணமடைந்திருக்கிறார்கள், இறந்தவர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும். தடுப்பூசிக்கு முன்னரும் பின்னரும் போதுமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், தடுப்பூசியால் சிக்கல் உருவானதா என்பதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நிச்சயம் நன்மை கிடைக்கும் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அரசு அறிவிக்கும்போது, மக்கள் தயக்கமின்றித் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள்.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் என்ன பிரச்சினை?

டாக்டர் முகமது தாரிக், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாறாந்தை, ஆலங்குளம்

செயல்பட இயலாத நிலையில் உள்ள வைரஸை நம் உடலுக்குள் செலுத்துவதுதான் தடுப்பூசி. இப்படிச் செய்வதால், நம் உடல் அந்த வைரஸை இனங்கண்டறிந்து வைத்துக்கொள்வதுடன் அதை எதிர்ப்பதற்கான தயார் நிலையில் இருக்கும். அதன்பிறகு, நோயை ஏற்படுத்தும் வைரஸ் நம் உடலுக்குள் நுழைந்தாலும் அதன் வீரியத்தை மட்டுப்படுத்த தடுப்பூசி தயார்படுத்தும். அதனால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்கிறோம்.

ஒருவர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமல் இருப்பதால் தன்னளவில் பாதிக்கப்படுவதுடன் பிறருக்கும் அந்த நோயைக் கடத்துகிறார். இப்படிப் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மீண்டும் பலருக்கு அது பரவும். இப்படியே சங்கிலித் தொடர்போல் பரவி, வைரஸ் நம் சமூகத்திடையே காலாகாலத்துக்கும் தங்கியிருக்கும்.

கடந்த ஆண்டு இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதற்குக் காரணம், மக்கள் நேரடியாகத் தொற்றைப் பெற்றதல்ல. வெளியே வேலைக்குச் சென்றுவந்த இளையோர் தங்கள் வீட்டிலிருந்த குழந்தைகளுக்கும் முதியோருக்கும் நோயைப் பரப்ப, அங்கே இறப்பு விகிதம் அதிகரித்தது. இது போன்ற நெருக்கடிகளைத் தடுக்கவும் தடுப்பூசி அவசியம்.

அண்மையில் வெளியிடப்பட்ட கணக்கீட்டின்படி தொற்றுவிகிதம் 1.7 என்கிற அளவில் இருக்கிறது. இது ஒன்றுக்கும் கீழே குறைந்தால்தான், தடுப்பூசித் திட்டம் பயனளிக்கிறது என்று அர்த்தம். முன்பைவிட தடுப்பூசி போட்டுக்கொள்ள இப்போது அதிகமானோர் முன்வந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

55 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்