மரபு மருத்துவம்: கைகொடுக்கும் கபசுரக் குடிநீர்

By செய்திப்பிரிவு

டாக்டர் பி.ஆர். செந்தில்குமார்

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்த நேரத்தில் சித்த மருத்துவ நிபுணர்கள், பிரதமருடன் காணொலிக் காட்சி வாயிலாகப் பேசினார்கள். அப்போது அறிகுறியற்ற (Asymptomatic) கோவிட்-19 நோயாளர்களுக்கு, சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிற கபசுரக் குடிநீர் என்னும் மூலிகை மருந்தை வழங்கலாம். அதன்மூலம், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம், தீவிர நோய் நிலையைத் தவிர்க்கலாம் என்று பரிந்துரைசெய்தனர்.

அதைத் தொடர்ந்து இந்தக் குடிநீர் குறித்த அறிவியல் தரவுகள், இதன் பயன்பாடு குறித்த சந்தேகங்கள், இதை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள் ஆகியவற்றைக் குறித்து மருத்துவத் துறை சார்ந்தோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கபசுரக் குடிநீரும் அறிவியல் தரவுகளும்

சித்த மருத்துவத்தில், கபசுரக் குடிநீர் பன்னெடுங்காலமாக சளி, இருமலுடன் கூடிய சுவாச நோய்த்தொற்றுக்குக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இது சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகை மருந்து. கபசுரக் குடிநீரானது சுவாசநோய் அறிகுறிகளைக் கட்டுக்குள் கொணர்ந்து, நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்து, உடலுக்கு உறுதியளிக்கவல்லது. இதில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகாரம், முள்ளி வேர், கடுக்காய்த் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, வட்டத்திருப்பு, நிலவேம்புச் சமூலம் - எனப் பதினைந்து மூலிகைகள் அடங்கியுள்ளன.

இதை ஆய்வுக்கூட எலிகளுக்குக் கொடுத்து ஆய்வு நடத்தியதில், இது நச்சுத்தன்மையற்றது என்று தெரியவந்தது. அத்துடன் சுரம் அகற்றி, வீக்கமுறுக்கி, வலியகற்றி போன்ற மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து பாக்டீரியாவை எதிர்க்கும் திறம் (Anti-bacterial) பெற்ற காரணிகளான Alkaloids, Phenolics, Flavonoids, Tannins ஆகியன பெருமளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் காணப்படும் ஒவ்வொரு மூலிகையின் நோய் தடுப்புத்திறன், சுவாச நோய் அறிகுறிகளை மேம்படுத்தும் திறன் ஆகியன பற்றி ஏராளமான அறிவியல் தரவுகள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, ஆடாதோடை இலையில் உள்ள Vasicine என்கிற alkaloid இன்ஃப்ளுயன்சா வைரஸின் பரவலைத் தடுத்து, அவற்றை முழுமையாக அழிக்கிறது. கபசுரக் குடிநீரின் இன்னொரு மூலிகை, ‘டெங்கு சுரக் காவலனாக' அறியப்படுகிற நிலவேம்பு. இதன் சுரம் அகற்றி, வைரஸ் எதிர்ப்புத் திறன் ஆகியன பற்றி மதிப்பிடப்பட்ட அறிவியல் இதழ்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தொடக்கக் கட்ட ஆய்வக முடிவுகள், நிலவேம்புக் குடிநீருக்கு சுவாசப் பாதையில் காணப்படும் AC2 receptor உடன் இணைந்து, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் திறன் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன.

பன்னெடுங்காலமாக பயன்பாட்டி லுள்ள, செயல்திறன்மிக்க இந்த மரபு மருந்தை ‘ரிவர்ஸ் பார்மகாலஜி' முறைப்படி, அறிகுறிகள் இல்லாத கரோனா வைரஸ் தொற்றுள்ள ஒரு குழுவினருக்கு வழங்கி, அதேவேளையில் நவீன மருத்துவம் மேற்கொள்ளும் மற்றொரு குழுவினருடன் ஒப்பிட்டு - ஒரு மருத்துவ ஆய்வை மேற்கொள்ள நவீன மருத்துவர்களும் மரபு மருத்துவர்களும் முன்வர வேண்டும்.

இந்தச் சித்த மருந்தானது நோயாளிகளின் தீவிர நிலையைத் தடுத்து, ரத்த, உயிர்வேதியியல் கூறுகளை மேம்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். பாரம்பரிய மருந்தை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு, தங்கள் மண்ணின் மருத்துவத்தின் மீதுள்ள உள்ளார்ந்த நம்பிக்கை, நோயை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும். இன்றைய இக்கட்டான மருத்துவச் சூழலில், அதிக பக்கவிளைவுகள் இல்லாத இந்திய மரபு மருத்துவத்தின் பயன்பாட்டை நோயாளிகளுக்குக் கிடைக்கச்செய்வதுடன், அதன் உயர்வை உலகுக்கு உணர்த்த இத்தகைய ஆய்வுகள் உதவியாக இருக்கும்.

தரத்தை உறுதிசெய்தல்

சித்த மருத்துவர்கள், பிரதமருடன் காணொலியில் பேசி முடித்த அடுத்த கணமே, சித்த மருந்தகங்களிலுள்ள கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகளை வாங்கிக் குவித்து, கடையிலுள்ள இருப்பை மக்கள் காலிசெய்திருக்கிறார்கள். தர உற்பத்திச் சான்றிதழ் அல்லது அரசு உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்களின் மருந்துகளை, சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாது போனால், தரக்குறைவான மூலிகைப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் மருந்துகள் சந்தைக்கு வரும் சாத்தியம் அதிகரிக்கும். அத்தகைய மருந்துகள் பலனளிக்காமல் போவதுடன், மரபு மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் கேள்விக்குரியதாக்கிவிடும். அத்தகைய சூழல் வரா வண்ணம், மருந்துக் கட்டுப்பாடு நிறுவனங்கள் (Drug Conrol authorities) உறுதிப்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த மருந்துவம்

கபசுரக் குடிநீர் மட்டுமில்லாமல், சித்த மருத்துவர்களால் பெருமளவில் சுவாச நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் தாளிசாதி வடகம், சுவாச குடோரி, ஆடாதோடை மணப்பாகு போன்ற மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்படி கோவிட்-19 நோயாளர்களின் நிலைக் கேற்ப மருத்துவக் கண்காணிப்பில் வழங்கலாம். சீனாவில் அறிகுறிகள் இல்லாத கரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கு ‘கியூ.பி.டி. (QPD)” குடிநீர் வழங்கப்பட்டது. நவீன மருத்துவத்துடன் இணைந்து அளிக்கப்பட்ட மரபு சிகிச்சை முறைகளும் கோவிட்-19 நோய்த் தடுப்பிலும் நோய் மேலாண்மையிலும் பெரும் பயனளித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன மருத்துவத்துக்கு சற்றும் குறைவில்லாத இந்திய மரபு மருத்துவத்தை கோவிட்-19 நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதுடன், மரபு மருத்துவர்களையும் இது சார்ந்த மருத்துவப் பணியில் பயன்படுத்திக்கொள்வது, நவீன மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்கும். மண்ணின் மருத்துவம் மீது மக்களிடையே நம்பிக்கையைப் பெருக்கும். இந்த ஒருங்கிணைப்பு பயனுடையதாகவும் இருக்கும். நவீனமும் மரபும் ஒருங்கிணைந்த மருத்துவம் / மருத்துவர்கள் துணைகொண்டு கரோனாவை வெல்ல முடியும்.

கட்டுரையாளர், தேசிய சித்த மருத்தவ நிறுவன உதவிப் பேராசிரியர்தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்