காரணம் ஆயிரம் 07: செத்து செத்து விளையாடும் விலங்கு

By ஆதலையூர் சூரியகுமார்

எல்லா உயிரினங்களுமே தங்களுடைய வாழ்க்கைக்காகப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு செல் உயிரியான அமீபா முதல் மிகப் பெரிய விலங்கான நீலத் திமிங்கலம் வரை எல்லா உயிரினங்களும்தான். தங்களுடைய அன்றாட வாழ்வில் மாபெரும் தடைகளையும் ஆபத்துகளையும் தாண்டியே வாழ்க்கைப் பாதையைக் கடந்து வருகின்றன. ரோஜாவுக்கு முள், எறும்புக்கு பார்மிக் அமிலம் என்று ஒவ்வொரு உயிரிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல்.

சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் ஆயுதத்தால் எதிரியை வெட்டி வீழ்த்திவிடுகின்றன. சில விலங்குகள் எதிரிகளிடம் நடித்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன. என்ன! விலங்குகள் நடிக்குமா என்றுதானே நினைக்கிறீர்கள். இந்த நடிப்பெல்லாம் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்!

சிறு வயதில் நீங்கள் ஒரு கதை படித்திருப்பீர்கள். ஒரு காட்டில் இரண்டு நண்பர்கள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். கரடி ஒன்று வந்துவிடும். கரடியிடமிருந்து தப்பிக்க ஒருவன் மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று விடுவான். மரம் ஏறத் தெரியாதாவன் மரத்துக்குக் கீழே பிணம் போலக் கிடப்பான். இருவரும் கரடியிடமிருந்து தப்பித்துவிடுவார்கள்.


இறந்தது போல் கிடக்கும் ஒப்போசம்

பலே ஒப்போசம்

எதிரிகளிடமிருந்து தப்பிக்கக் கிட்டதட்ட இதே வழியைப் பின்பற்றுகிறது ஒப்போசம் என்ற விலங்கு. இது ஒரு சந்தர்ப்பவாத விலங்கு. பழங்கள், காய்கறிகள், மாமிசம் என்று எதையும் விட்டுவைக்காமல் சாப்பிடும். சமயத்துக்கு ஏற்றாற்போலக் கிடைத்ததைச் சாப்பிடும். எலிக்கும் நாய்க்கும் இடைப்பட்ட உருவத்தில் உலவுகிறது இந்த ஒப்போசம் விலங்கு.

இடம் மாறும்

பெரும்பாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கரீபியன் தீவுகளிலும் காணப் படுகின்றன. ஒப்போசம் தனக்குத் தேவையான நீரும், உணவும் கிடைக்கும்வரை மட்டுமே ஓர் இடத்தில் வசிக்கும். உணவு தீர்ந்துவிட்டால் வேறு இடம் நோக்கி ஓடிவிடும். பிற விலங்குகள் கட்டி வைத்திருக்கும் புதர் புற்றுகளை ஆக்கிரமித்து, அதில் வசிக்க ஆரம்பித்துவிடும் இந்த ஒப்போசம். சொந்தமாக வளைகளை உருவாக்கிக்கொள்ள இந்த ஒப்போசம் முயற்சிப்பதும் இல்லை.

ஒரு காலத்தில் அமெரிக்க நாடுகளில் ஒப்போசம் விலங்கை வேட்டையாடி உணவாகச் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேட்டையிலிருந்து தப்பிக்கவும், பிற சிறிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும், சீறிப்பாய்ந்து கடிக்கவும் தயங்காது. நாய்கள் போலவே இதுவும் வெறிநோயை (Rabies) பரப்பக்கூடியது.

உலக மகா நடிப்பு

பெரிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து எப்படித் தப்பிக்கிறது என்பதுதான் பெரிய வேடிக்கை. ஆபத்து என்று தெரிந்துவிட்டால் உடனே ஒப்போசம் இறந்ததுபோல் படுத்துவிடும். உடல் முழுவதையும் மயக்கமடைந்த நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். வாயைப் பிளந்து உதடுகளைப் பிதுக்கிக்கொள்ளும். பற்கள் பிளந்து நிற்கும். கடவாய் வழியாக உமிழ்நீர் வெளியேறும். கண்களைப் பாதியாகவோ முழுமையாகவோ மூடிக்கொள்ளும். கால்களைப் பரப்பிக்கொண்டு கிடக்கும். கழிவு மண்டலத்திலிருந்து கெட்ட வாடையுடன் திரவத்தை வெளியேற்றும். எந்த ஒரு வேட்டைக்கார விலங்கும் செத்துப்போன ( மாதிரி நடிக்கும்) ஒப்போசத்தை நெருங்காமல் ஓடிவிடும்.

கிட்டதட்ட 40 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம்வரை இப்படித் தற்காலிக மரணத்தைத் தழுவிக்கொள்கிறது ஒப்போசம். மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து ஆபத்திலிருந்து தப்பித்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டபின் எழுந்து ஓடிவிடும்.

இந்த காமெடியில் ஒரு சோகம் என்னவென்றால், குட்டி ஒப்போசத்துக்கு இப்படி முழுமையாக நடிக்கத் தெரியாது. நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே கண்களைத் திறந்து பார்த்துவிடும். மற்ற விலங்குகள் அதனைக் கவ்விக்கொண்டு போய்விடும்.

பல தடைகளைத் தாண்டி, எதிரிகளை வென்று வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் ஒப்போசம் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஒப்பற்றது அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

25 mins ago

தமிழகம்

41 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்