“அங்கே பாருடா பிரெய்ன் தெரியுது!” - ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு

By செய்திப்பிரிவு

கவட்டை, கரண்ட்-பாஸ், நாடு பிடித்தல், பேபே, 7 கல்லு, சில்லு, சூடுகாய், பல்லாங்குழி, ஐஸ்பாய், தாயம், டிக் டிக் யாரது, கிச்சு கிச்சு தாம்பாளம், டயர் ஓட்டுதல் ஆகியவை நானும் நண்பர்களும் நித்தம் விளையாடிய விளையாட்டுகள்.

சிறுவயதில் நாங்கள் வீட்டுக்குள் இருந்ததைவிட தெருக்களில்தான் அதிகம் இருந்திருக்கிறோம். வெயிலோ மழையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ வீடியோ கேம்களோ எங்களை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிடவில்லை. அதே போன்று தெரு விளையாட்டுகளில் ஆண்-பெண் பேதம் எல்லாம் அவ்வளவாக இல்லாததால், அனைத்து விளையாட்டுகளையும் ஆசைதீர விளையாடித் தீர்த்தோம்.

எங்கள் தெருவில் சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் பெரிய அளவில் வந்து செல்லாததால், நாங்கள் அச்சமின்றி தெருக்களில் விளையாடித் திரிந்தோம். அதனால்தான் எப்போதாவது காட்சி தரும் பைக், கார், லாரி முதல் விண்ணில் பறக்கும் விமானம் வரை எதைக் கண்டாலும் ஆர்வத்துடன் பார்ப்போம்.

இப்படியாக நான் வளர்ந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில், அக்கம்பக்கம் வீடுகளில் டிவிஎஸ்-50, சன்னி, பஜாஜ்-எம்80, ஸ்கூட்டர், ராஜ்தூத், சுசுகி சாமுராய், கைனடிக் ஹோண்டா போன்ற இருசக்கர வாகனங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கின. அதைப் பார்க்கப் பார்க்க, பைக்கில் செல்ல வேண்டும் என்கிற ஆசை வந்தது. காலைத் தரையில் தேய்த்து கிக் ஸ்டார்ட் செய்வது, கையால் கியர் போடுவது, வாயால் வண்டியின் சத்தத்தைத் தருவது, பிரேக் போடுவதுபோல் உடலை அசைப்பது எனக் கற்பனையாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். அருகில் உள்ள கடைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தக் கற்பனை வண்டியில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பறந்தேன்.

வீட்டுக்கு யாராவது வண்டியில் வந்துவிட்டால், “ஒரு ரவுண்டு வர்றீயா?” என்று அவர்கள் அழைப்பதற்காக மனம் ஏங்கும். ஆனால், எனக்குள் இருந்த தயக்கத்தால் நான் யாரிடமும் கேட்டதில்லை. மூன்றாம் வகுப்பில் தோன்றிய இந்த ஆசை ஏழாம் வகுப்பு வரை நிறைவேறவே இல்லை.

ஏழாம் வகுப்பு படித்தபோது பள்ளிப் பேருந்தில் செல்வேன். அதில் இரண்டாவது ட்ரிப்பில் செல்லும் வாய்ப்புதான் எனக்குக் கிடைத்தது. அதனால், முதல் ட்ரிப் சென்ற பேருந்து திரும்பும் வரை பள்ளியிலேயே காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருந்த போது லெக்-ஸ்பின், கல்லாங்காய் போன்ற விளையாட்டுகளை விளையாடுவேன்.

ஒருநாள் அப்படி விளையாடும்போது, என் உச்சந்தலை ஏதோ ஒன்றின் மீது பலமாக மோதியது. தலையிலிருந்து பீறிட்ட ரத்தம் வெள்ளைச் சட்டையைச் சிவப்பாக மாற்றிவிட்டது. முதலுதவி செய்யும்போது, 11-12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் என் தலையில் அனுபவ ரீதியாக உயிரியல் பாடத்தைப் படித்துக்கொண்டிருந்தனர். அது சாதாரண காயமாக இருந்த போதும், “டேய், அங்க பாரு பிரெய்ன் தெரியுது” என்று அவர்களுக்குள் குறும்பாகப் பேசிக்கொண்டதும் நான் ரொம்பவே பயந்துவிட்டேன். பள்ளி வாகனங்கள் ஏதும் அந்த நேரத்தில் இல்லாததால், அலுவலகப் பணியிலிருந்த ஒருவர் தன் வண்டியிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவுசெய்தார்.

வண்டியை அவர் காலால் உதைத்து ஸ்டார்ட் செய்யும்போதே, அது பஜாஜ்-எம்80 என்று நான் சரியாகக் கணித்தேன். “வண்டியில் உட்காருவியா?” என்று கேட்டார். எனக்கு அடிபட்ட வலியை மறந்து வண்டியில் செல்லும் ஆர்வம் வந்துவிட்டது!

காற்றில் சிறகை விரித்து மீண்டும் ஒரு பட்டாம்பூச்சிபோல் அந்த வண்டியில் பறக்க ஆரம்பித்தேன். ஆனால், அந்தப் பட்டாம்பூச்சி தலையில் முண்டாசு கட்டியிருந்தது!

‘பஞ்சுமிட்டாய்’ பிரபு, எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்