காமிக்ஸ் ஹீரோக்கள்: ரோமானியர்களை வென்ற குள்ள ஹீரோ

By கிங் விஸ்வா

பிரம்மாண்டமான தோற்றம் கொண்டவர்களே கதாநாயகனாக இருந்துவந்த வழக்கத்தை உடைத்தது அஸ்டெரிக்ஸ், உருவத்தில் சிறியவரைக் கதாநாயகன் ஆக்கி, புதிய பாணியை உருவாக்கியது அந்த காமிக்ஸ் தொடர் அஸ்ட்ரிக்ஸ். (ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரிக்ஸ்) மூன்று தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் விற்பனையில் சாதனை புரிந்துவரும் இந்தத் தொடர்தான் உலகில் பரவலாக அறியப்பட்ட காமிக்ஸ் தொடர்.

உருவான கதை

1955-ம் ஆண்டு காமிக்ஸ் படைப்பாளிகளான ரெனே குசினி ஆல்பர்ட் உடர்சோ, ஜான் மிஷேல் சார்லியேர் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்கள். அதன் பின்னர் இவர்கள் ஐரோப்பாவின் மிகப் பெரிய காமிக்ஸ் இதழான டின்டின், ஏனைய இதழ்களில் தங்கள் கதைகளை வெளியிட்டு வந்தனர். வாரம் ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகும் டின்டின்னுக்குப் போட்டியாக, 1959-ல் இவர்கள் ஆரம்பித்த காமிக்ஸ் வார இதழின் பெயர்தான் பிலோட்.

இந்தப் போட்டி இதழை வெற்றிகரமாக நடத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருந்தது. எனவே, தனித்தன்மையான கதைகளை இந்த இதழில் வெளியிட நினைத்தனர். சுதந்திரத்தைப் பெரிதாக மதிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் குணாதிசயங்களை மையமாகக் கொண்டு, அப்போது பெரிதாகப் பேசப்பட்ட உலக மயமாக்கலுக்கு எதிரான கருத்துகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டது அஸ்டெரிக்ஸ்.

கதைத் தொடரில் இருந்த அரசியலைப் புரிந்துகொண்ட பிரெஞ்சு மக்கள், உடனடியாக அஸ்டெரிக்ஸைத் தங்கள் ஆதர்ச நாயகனாக அங்கீகரித்தார்கள். அச்சிட்ட மூன்று லட்சம் பிரதிகள் ஒரே நாளில் விற்றுத் தீர்த்தன. இதிலிருந்து, இந்தத் தொடரின் வெற்றியைக் கணிக்கலாம். இப்படி அறிமுகமே அதிரடியாக அமைந்த இதழின் கதாநாயகன்தான் அஸ்டெரிக்ஸ்.

அஸ்டெரிக்ஸ் தொடரின் கதை: பண்டைக் காலத்தில் (கி.மு. 50) ஃபிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி, இத்தாலியின் சில பகுதிகளை உள்ளடக்கிய பெரிய சாம்ராஜ்யமாக இருந்ததுதான் கால் என்ற நாடு. இதை ஜூலியஸ் சீசரின் தலைமையிலான ரோமானியப் படை படையெடுத்து வென்றதாக வரலாறு.

ஆனால், ரோமானியர்களால் கால் நாட்டை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு சிறிய கிராமம் மட்டும் இன்னமும் தன்னிச்சையாகவே இயங்குவதாகக் கதையை ஆரம்பிக்கிறார் குசினி. கடற்கரையின் அருகில் இருக்கும் இந்தக் கிராமத்து மக்களுக்கு வழிகாட்டியாக ஒரு குரு இருக்கிறார். அவர் தயாரிக்கும் மந்திரசக்தி கொண்ட பானத்தைப் பருகினால் அசாத்திய உடல் வலிமை கிடைக்கும். இதைப் பயன்படுத்தி, அந்தக் கிராம மக்கள் ரோம் நாட்டு வீரர்களை விரட்டி அடிப்பதாகக் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

அஸ்டெரிக்ஸ்:

35 வயதான இவர்தான் இந்தக் கிராமத்திலேயே புத்திசாலி. கத்திச் சண்டையில் சூரப்புலியான இவருடைய சாகசங்கள்தான் கதையை நகர்த்திச் செல்லும். மாயாஜாலப் பானத்தைக் குடித்துவிட்டு அசாத்திய வலிமை கொண்டவராக இருந்தாலும், தன்னுடைய புத்திசாலித்தனம் மூலமாகவே எதிரிகளை இவர் ஜெயிப்பார். நான்காவது கதை முதல் இவருக்கென்று ஒரு பாணி அமைந்துவிட்டது. கதை நடக்கும் களம் எதுவாக இருந்தாலும், இவரிடம் ரோம் வீரர்கள் அடிவாங்குவது மட்டும் மாறாமல் தொடரும்.

நண்பர்கள்

ஓபிலிக்ஸ்:

அஸ்டெரிக்ஸ் பிறந்த அதே நாளில் பிறந்த ஓபிலிக்ஸ், பார்க்கப் பிரம்மாண்டமாக இருந்தாலும் மனதளவிலும், புத்தசாலித்தனத்திலும் ஒரு குழந்தை. சிறு வயதில் விளையாடும்போது மாயாஜாலப் பானத்தைத் தயாரிக்கும் பாத்திரத்தில் விழுந்து, நிறைய குடித்துவிட்டதால், இவருக்கு எப்போதுமே மந்திரசக்தி தரும் வலிமை உண்டு. பெரிய பாறைகளை விநியோகம் செய்யும் இவர், காட்டுப்பன்றியை விரும்பி சாப்பிடுவார். அஸ்டெரிக்ஸுடன் பெரும்பாலான சாகசங்களில் இவரும் இவருடைய செல்லப்பிராணியான டாக்மாடிக்சும் தவறாமல் இடம்பிடிப்பார்கள்.

கெட்-எஃபிக்ஸ்:

இவர்தான் இந்தக் கிராமத்தின் குரு. இவருக்கு மட்டும்தான் மந்திரசக்தி கொண்ட பானத்தைத் தயாரிப்பது எப்படி என்று தெரியும். இவர் தன்னுடைய அரிவாளைக்கொண்டு மூலிகைகளையும், இலைகளையும் அறுக்கும்போது அஸ்டெரிக்ஸ் அழைப்பதும், அதனால் இவர் தடுமாறுவதும் கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளிலும் தொடரும் ஒரு சங்கதி.

வைடல்-ஸ்டாடிஸ்டிக்ஸ்:

வானம் இடிந்து தலையில் விழுந்துவிடும் என்ற பயத்தை எப்போதுமே கொண்ட கிராமத்துத் தலைவரான இவர், உணவுப்பிரியர். தலைவர் என்பதால் ஒரு கேடயத்தின் மீது இவரை உட்கார வைத்துப் பல்லக்குப் போல இரண்டு பேர் தூக்கி வருவார்கள். ஒவ்வொரு கதையிலும் இவர் அந்தப் பல்லக்கிலிருந்து விழுவதற்கான புதிய வழியைக் கண்டறிவார்.

காகோபோனிக்ஸ்: கிராமத்து இசைக்கலைஞரான இவருடைய திறமையைப் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டு. தான் ஒரு இசைமேதை என்று இவர் நினைக்க, அது உண்மையல்ல என்று மற்ற அனைவரும் கருதுகிறார்கள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக விருந்து சாப்பிடும்போது இவர் இசையமைக்க வர, அவரை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விட்டு விருந்தைத் தொடர்வதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

மாற்று ஊடகத்தில்:

காமிக்ஸ் கதை வரிசையைத் தவிர்த்து, 4 திரைப்படங்களும், 9 கார்ட்டூன் அனிமேஷன் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஃபிரான்ஸில் ஆண்டொன்றுக்கு 16 லட்சம் மக்கள் சென்று பார்க்கும் சுற்றுலாத்தலம் அஸ்டெரிக்ஸ் தீம் பார்க்தான். ஈபில் கோபுரத்தைவிட அதிகமானோர் இந்தப் பொழுதுபோக்குப் பூங்காவுக்குச் செல்கிறார்கள்.

உருவாக்கியவர்கள்: ரெனே குசினி, ஆல்பர்ட் உடர்சோ

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்: டெரக் ஹாக்ரிட்ஜ், அன்தியா பெல்

முதலில் தோன்றிய தேதி: 29-10-1959

பெயர்: அஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்

வசிப்பது: மேற்கத்திய ஐரோப்பாவின் ஒரு பகுதியான கால் என்ற நாட்டில்.

கதை நடக்கும் காலம்: ஜூலியஸ் சீஸர் ஆட்சி புரிந்த கி.மு. 50.

உலகின் நூற்றுக்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 33 கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகி, தலைமுறைகளைக் கடந்து அஸ்டெரிக்ஸ் ஒரு கலாசாரத் தூதுவராக இருப்பது பெரிய சாதனைதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்