தெனாலிராமனும் திருடர்களும்

விஜயநகரப் பேரரசில் அந்த வருஷம் மழையே பெய்யவில்லை. நாடு முழுவதும் வறட்சி . நதிகள், குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன.

தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மிகவும் ஆழத்துக்குப் போய்விட்டது. அதிலிருந்து நீர் இறைத்துத் தோட்டத்திற்கு ஊற்றத் தெனாலிராமன் மிகவும் கஷ்டப்பட்டான்.

இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் சில திருடர்கள் தெனாலிராமன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள். திருடுவதற்குச் சரியான நேரம் பார்த்துத் தோட்டத்தில் பதுங்கி இருந்தார்கள்.

தெனாலிராமன் அதைப் பார்த்துவிட்டான். திருடர்கள் ஒளிந்துகொண்டிருப்பதைத் தன் மனைவியிடம் ரகசியமாகச் சொன்னான்.

தெனாலிராமன் அரண்மனையில் வேலை பார்ப்பவன். அவன் நினைத்தால் காவலர்களைக் கூப்பிட்டு அவர்களைக் கைது செய்யலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு ஒரு திட்டம் இருந்தது.

மனைவியிடம் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

“நம்ம நாட்டுல பஞ்சம் அதிகமாயிடிச்சி. திருடங்க அதிகமாயிட்டாங்க...”

தன் கணவன் சத்தமாகப் பேசுவது ஏன் என்று மனைவிக்குப் புரியவில்லை. ராமன் தொடர்ந்து பேசினான்.

“நாம்ப கொஞ்ச காலத்துக்கு வீட்டில இருக்குற நகைகள், மத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பத்திரமா எங்கயாவது ஒளிச்சி வைக்கணும்” என்றான்.

மனைவி ஒன்றும் புரியாமல் தலை ஆட்டினாள்.

“எல்லாத்தையும் பத்திரமா பெட்டிக்குள்ள போட்டு கிணத்துக்குள்ள போட்டுடலாம். பஞ்சம் முடிஞ்சதும் திரும்ப எடுத்துக்கலாம்” என்றான்.

மனைவியிடம் ஜாடையாக ஏதோ கூறினான். அவளுக்கு விஷயம் புரிந்தது.

அவர்கள் இருவரும் தேவையில்லாத பொருட்கள் எல்லாவற்றையும், ஒரு பெட்டிக்குள் போட்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் போட்டார்கள்.

“அப்பாடா! நகையெல்லாம் பத்திரமா இருக்கும்” என்று சத்தமாகச் சொன்னான். ராமன். பிறகு இருவரும் வீட்டுக்குள் வந்து படுத்துவிட்டார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த திருடர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இன்று நல்ல வருமானம்தான் என்று நினைத்தார்கள். கிணற்றுக்குள் இறங்கிப் பெட்டியை எடுக்கப் பார்த்தார்கள்.

அது ரொம்ப ஆழமான கிணறு. எனவே அதில் இறங்க பயந்தார்கள். நிலா வெளிச்சத்தில் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்கள். நீர் குறைவாக இருந்தது.

“தண்ணிய எடுத்து வெளியே இறைச்சிட்டா பெட்டிய எடுத்துடலாமே” என்று ஒருவன் கிசுகிசுத்தான்.

மற்றவர்கள் அதை ஒப்புக்கொண்டார்கள்.

வாளியைக் கிணற்றுக்கு உள்ளே இறக்கி நீரை இறைத்துத் தோட்டத்தில் ஊற்ற ஆரம்பித்தார்கள். பல வாளித் தண்ணீரை இறைத்தும் பெட்டி தட்டுப்படவில்லை. விடா முயற்சியுடன் தொடர்ந்து இறைத்துக்கொண்டே இருந்தார்கள்.

அப்போது சேவல் கூவியது. இன்னும் சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும் என்பதைத் திருடர்கள் புரிந்துகொண்டார்கள்.

“கிளம்பலாம். மீதி தண்ணியை நாளைக்கு இறைக்கலாம்” என்றான் ஒருவன். மற்றவர்கள் ஆமாம் என்று தலையை ஆட்டினார்கள்.

அப்போது அவர்கள் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் காவலர்கள். அவர்களுக்குப் பக்கத்தில் தெனாலிராமன்.

“நீங்க நாளைக்கு வந்து தண்ணி இறைக்க வேண்டாம். இன்னிக்கி இறைச்ச தண்ணியே இன்னும் ஒரு வாரத்துக்குப் போதும். இப்ப இவங்க கூட போங்க” என்றான்.

அவர்கள் போனதும் தோட்டம் முழுவதும் இறைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பார்த்து ராமனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்