இடம் பொருள் மனிதர் விலங்கு: ஜப்பான் அரிசியின் கதை

By மருதன்

‘‘முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்தில் உன்னைப்போல் ஒரு சிறுவன் இருந்தான். நல்ல பையன்தான் என்றாலும் ஒரு நாள் தவறுதலாக ஒரே ஒரு குன்றிமணி அரிசியை வீணாக்கிவிட்டான். அவ்வளவுதான், அடுத்த நொடியே அவன் துண்டுத் துண்டாகச் சிதறி மண்ணில் விழுந்துவிட்டான்.

ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘அன்போடு’ சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று’’ என்று கண்களைச் சிமிட்டிக்கொண்டது அரிசி. ‘‘எனக்குத் தற்பெருமை அறவே பிடிக்காது. இருந்தாலும், ஜப்பானில் என்னுடைய மதிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சோறு பதம்’’ என்று தொண்டையை வேறு கனைத்துக்கொண்டது.

ஜப்பான் அரிசி என்றால் சும்மாவா? ‘‘இந்தப் பொன்னான நேரத்தில், என்னை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்திய அண்ணன் கொரியாவுக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தன் குட்டி முதுகை வளைத்து வணக்கமும் போட்டது அரிசி.

‘‘சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் இருந்து முதல்முறையாக, இங்கு வந்து சேர்ந்தேன். சரி என்னவோ புதிதாக வந்திருக்கிறதே, முயன்று பார்ப்போம் என்று தயக்கத்தோடு என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். பிறகென்ன? நானும் ஜப்பானும் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டோம். நெல்லும் உமியும்போல், வயலும் வாழ்வும்போல், கதிரும் குதிரும்போல்...’’

போதும் போதும். கதையைச் சொல் என்றவுடன் அரிசி ஒருமுறை முறைத்துவிட்டுத் தொடர்ந்தது. ‘‘ஜப்பானில் என் பெயர் கோஹான். காலை கோஹான், மதிய கோஹான், இரவு கோஹான் என்று எல்லா வேளை உணவுக்கும் என் பெயரையே பயன்படுத்துகிறார்கள். மீன், இறைச்சி, காய், பழம் என்று பலவற்றைப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாலும் செல்லமோ செல்லமான என்னை மட்டும் ஜப்பானியர்களே பயிரிட்டுக்கொள்கிறார்கள். அதுவும் தங்கள் சொந்த கைகளால்... கஷ்டப்பட்டு...’’

ஓஹோ, அப்புறம்? ‘‘வயலில் தொடங்கிய உறவு வாழ்க்கைவரை நீண்டுவிட்டது. உதாரணம் சொல்லவா? ஹோண்டா என்றால் என்ன தெரியுமா? முக்கியமான நெல் வயல். டோயோடா என்றால் செழிப்பான நெல் வயல். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் ஒரு விமான நிலையம் இருக்கிறது. அதற்கும் என் பெயர்தான் வைத்திருக்கிறார்கள். நொரிடா. அப்படி என்றால் வளர்ந்து நிற்கும் நெல்வயல். இப்படி ஒரு குழந்தையைப்போல் பார்த்துப் பார்த்து, அன்பைப் பொழிந்து என்னை வளர்க்கிறார்கள்... தண்ணீர் விட்டா வளர்த்தோம்...’’

அரிசியின் கண்களிலிருந்து ஒரு துளி ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ‘‘ஆ, தண்ணீர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கே தெரியும், மழை இல்லாமல் வயல் இல்லை. வயல் இல்லாமல் நான் இல்லை. மழை பொய்த்துப் போனால் என்ன செய்வது? ஜப்பானிய கிராமப்புறங்களில் என்ன செய்வார்கள் தெரியுமா? கோயிலுக்குச் சென்று எனக்காகப் புத்தரை வேண்டுவார்கள். புனிதப் பிரார்த்தனை எல்லாம் தடபுடலாக நடக்கும். சில தினங்கள் காத்திருப்பார்கள். அப்படியும் மழை வரவில்லையா? மீண்டும் கோயிலுக்குப் போவார்கள். இந்த முறை அவர்கள் கையில் ஒரு பெரிய கயிறு இருக்கும்.’’

எவ்வளவு பெரியது என்பதை இரு கைகளையும் விரித்துக் காட்டியது அரிசி. ‘‘மளமளவென்று அந்தக் கயிற்றால் கடவுளைக் கட்டுவார்கள். ‘இதோ பாருங்கள், கடவுளே. நமக்கு இடையில் பகை எதுவும் இல்லை. ஆனால், இத்தனை முறை கேட்டும் மழை வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? உங்களுக்கும் எங்கள் நெருக்கடி புரிய வேண்டும் அல்லவா? அதான் உங்களைக் கட்டிப்போட்டிருக்கிறோம். மழை வரட்டும், நாங்களே ஓடிவந்து அவிழ்த்துவிடுகிறோம். மற்றபடி எங்களைத் தவறாக நினைக்க வேண்டாம், சரியா?’ இப்படி ஜப்பானியர்கள் எனக்காகத் தங்கள் கடவுளையே...’’

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டு, தன்னைத் தானே தேற்றிக்கொண்டது அரிசி. ‘‘இது போதாதென்று என் பெயரில் இனாரி என்று ஒரு கடவுளையும் உருவாக்கிவிட்டார்கள். அது சரி, ஜீஜோவின் கதை தெரியுமா உங்களுக்கு? அவரும் கடவுள்தான். ஆனால், அவருடைய உருவச்சிலையில் கால்களில் மட்டும் சேறு படிந்திருக்கும். அதற்குக் காரணம் ஒரு பக்தர். தினமும் வயலில் இறங்கி, கடினமாக வேலை செய்வார், கடவுளுக்கும் படைப்பார்.

ஒரு நாள் அவருக்கு உடம்பு சரியில்லை. அன்றைக்குப் பார்த்து அறுவடை தினம் வேறு. கடவுள் பார்த்தார். ஐயோ பாவம், தினமும் நமக்காக இவர் ரொம்பக் கஷ்டப்படுகிறார். நாம் ஏன் இவருக்காக ஒரு நாள் வேலைக்குப் போகக் கூடாது என்று வயலில் இறங்கிவிட்டார். அதனால்தான் அவர் கால்களில் சேறு படிந்திருக்கிறது. பாருங்கள், எனக்காகக் கடவுளே....’’

சின்னத் தொண்டை. அதுவும் அடைத்துக்கொண்டது. அதற்கு மேல் ஒரு வார்த்தையும் வரவில்லை. உன் கதையைச் சொல் என்று கேட்டால் கதை, கதையாக அடித்துவிடுகிறதோ என்று பார்த்தால் அத்தனையும் உண்மை! (தற்பெருமை நீங்கலாக). ஊர், உலகில் எங்கும் இல்லாதபடி இந்த ஜப்பானில் மட்டும் தேவைக்கும் அதிகமாகவே அரிசியைத் தாலாட்டிச் சீராட்டி வளர்ப்பதால்தான் மூச்சுக்கு மூச்சு இப்படி ஏராளமாக உணர்ச்சிவசப்படுகிறது! பொதுவாக அரிசியின் இயல்பு பணிவுதான். வயலில் இளம் நெற்கதிர்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? தலை சாய்த்துதான் நிற்கும்.

ஒருவேளை ஜப்பானில் மட்டும்தான் இப்படித் தலையை நிமிர்த்திக்கொண்டு நிற்குமோ என்னவோ!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

23 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்