வாசித்தாலும் தீராத புத்தகங்கள்

By ஆசை, ஆதி

இன்று உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23). இந்த நாளின்போது, காலங்காலமாக படிக்கப்பட்டு வரும் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் புத்தகங்களை பற்றித் தெரிந்துகொள்வோமா? இந்தப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனால் இவற்றை நாம் தமிழிலேயே படிக்கலாம்.

ஆலிஸின் அற்புத உலகம்

தோட்டத்துக்குச் செல்லும் சிறுமி ஆலிஸ், ஒரு முயலைப் பின்தொடர்ந்து அதன் வளைக்குள் செல்கிறாள். அங்கே முயலுக்கு ஒரு வீடே இருக்கிறது. அங்கே ஒரு பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்தவுடன், சின்னஞ்சிறியவளாகச் சுருங்கிப் போகிறாள் ஆலிஸ். பிறகு ஒரு கேக்கைச் சாப்பிடும்போது பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறாள். இப்படியே கதை முழுவதும் அவள் சிறியவளாவதும், பிறகு வளர்வதுமாக இருக்கிறாள். நிறைய கதவுகள் வருகின்றன. அவற்றைத் திறந்தால் தோட்டங்களும், புதிய இடங்களும் வருகின்றன. இப்படி அளவு மாறிக்கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் துக்கம் தாங்க முடியாமல் அவள் அழ ஆரம்பிக்க, அதனால் உருவாகும் குளத்தில் அவளே மூழ்கப் போகிறாள். அவளுடன் தண்ணீரில் தத்தளிக்கின்றன சுண்டெலிகளும் பறவைகளும். ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்து, கடைசியில் ஒரு ராணியிடம் மாட்டிக்கொள்கிறாள் குட்டியூண்டாக இருக்கும் ஆலிஸ். அவளிடம் ராணி விசாரணை நடத்தும்போது கேக்கைச் சாப்பிட்டு ஆலிஸ் பெரியவளாக மாற, ராணி, ராஜா, சீட்டுக்கட்டுகளாக இருக்கும் படைவீரர்கள் எல்லோரும் சரிந்துபோகிறார்கள்.

அற்புத உலகில் ஆலிஸ் (1865) என்ற இந்தக் கதையை எழுதியவர் பிரிட்டன் எழுத்தாளர் லூயி கரோல். தமிழில் எஸ். ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக வந்திருக்கிறது.

குட்டி இளவரசன்

குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். அதாவது, ‘இருநூறு கோடி பெரியவர்கள்' இருக்கும் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை என்பதை அந்த விமானிக்குக் குட்டி இளவரசன் உணர்த்துகிறான். குட்டி இளவரசன் ஒரு நரியையும் சந்திக்கிறான். ‘இதயத்துக்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது' என்ற ரகசியத்தைக் குட்டி இளவரசனுக்கு நரி சொல்கிறது. மீண்டும் தன் கோளுக்குச் செல்ல விரும்புகிறான் குட்டி இளவரசன். ஒரு அரசனின் விரலைவிட அதிக சக்தியைக்கொண்ட பாம்பு குட்டி, இளவரசனுக்கு உதவிசெய்கிறது. குட்டி இளவரசனை இழந்த விமானியோ, துயரத்தில் ஆழ்கிறார். குழந்தைகளே உங்களுக்கும் குட்டி இளவரசனோடு பேச வேண்டுமா? இரவில் வானத்தில் தெரியும் எண்ணற்ற விண்மீன்களுக்கிடையே ஒரு கோளில் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் குட்டி இளவரசனை நோக்கிக் கையசையுங்கள், அவன் உங்கள் அன்பை ஏற்றுக்கொள்வான்.

இதை எழுதியவர் அந்த்வான் து செந்த் எக்சுபெரி, ஃபிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்கள் வெ.ராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு.

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி

சிறுவன் சார்லிக்கு சாக்லேட் என்றால் உயிர். சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியை தினமும் கடந்து செல்லும் சார்லிக்கு, அந்தத் தொழிற்சாலைக்கு உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. ஒரு முறை, அந்த நிறுவனம் தயாரித்த ஐந்து சாக்லேட்டுகளில் தங்க டிக்கெட் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தச் சாக்லேட்டுகளை வாங்குபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த ஐந்து டிக்கெட்களும் கிடைத்த குழந்தைகள் ஃபேக்டரியில் அடிக்கும் லூட்டிதான் கதை.

பிரிட்டன் எழுத்தாளர் ரோல் தாலின் கதைகள் சஸ்பென்ஸும் சுவாரசியமும் நிரம்பியவை. ஃபேக்ட்ரியை பார்ப்பதை மிகப் பெரிய கனவாகக் கொண்டிருக்கும் சார்லியின் கையிலும் அந்த டிக்கெட் கிடைக்கிறது.

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரியை (1964) தமிழில் மொழிபெயர்த்தவர் பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.

கலிவரின் பயணங்கள்

கலிவருக்குக் கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார். களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவரைத் தரையோடு பிணைத்து யாரோ கட்டிப்போட்டிருக்கிறார்கள். கட்டை விரல் உயரமே உள்ள குள்ள மனிதர்கள் அம்பு வில்லுடன் சுற்றிலும் நிற்கிறார்கள்.

பிறகு அவரது நல்ல குணங்களைக் கண்டு, லில்லிபுட் தேசத்தில் வீடு வழங்குகிறார்கள், அரசவையிலும் இடம் தருகிறார்கள். பிளெபஸ்கியூடியன்ஸ் என்ற அருகிலுள்ள தீவு தேசத்தை, லில்லிபுட் தேசம் வெற்றிகொள்ளக் கலிவர் உதவுகிறார். ஆனால், புதிய நாட்டை லில்லிபுட் தேசத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதைக் கலிவர் எதிர்க்க, அவர் தேசத்துரோகம் செய்ததாகவும் சிறுநீர் கழித்து ஊரை வெள்ளக்காடாக மாற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரது பார்வையைப் பறிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. ஒரு நண்பரின் உதவியுடன் பிளெபஸ்கியு தப்பிச்செல்லும் கலிவர், அங்கிருந்து கைவிடப்பட்ட ஒரு படகு மூலம், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பலைப் பிடித்து நாடு திரும்புகிறார்.

ஆங்கிலோ - ஐரிஷ் எழுத்தாளர் ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய கதை கலிவரின் பயணங்கள் (1726). தமிழில் மொழிபெயர்த்தவர் யூமா. வாசுகி, என்.சி.பி.ஹெச் வெளியீடு.

அப்பா சிறுவனாக இருந்தபோது

உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்குமா, எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிக்குமா? நிச்சயமாகப் பிடிக்காது இல்லையா? அப்படி ஒரு சிறுவன், தினசரி பிரெட்டைச் சாப்பிட மறுத்து, அதைத் தரையில் வீசி எறிகிறான். யார் சொல்லியும் அந்தச் சிறுவன் பிரெட்டைச் சாப்பிடவில்லை. கடைசியாக, அடுத்த நாள் காலையில் இருந்து சிறுவனுக்கு பிரெட்டே தரப்படவில்லை. குளிர்பானங்களும் தரப்படவில்லை. இரவுச் சாப்பாடும் இல்லை. பிரெட் இல்லாமல் காலையில் சீஸ், மதியம் கட்லெட், இரவில் பிரெட் இல்லாத பொரித்த முட்டையை மட்டுமே சாப்பிட்டதால், அவன் எப்போதும் பசியுடனே இருந்தான். ஓராண்டு முழுக்க அவனுக்குப் பிரெட் கிடையாது என்றார்கள். ஆனால், அதற்கடுத்த நாள் காலை சிறிய பிரெட் துண்டு ஒன்று தரப்பட்டது. அது ரொம்பச் சுவையாக இருந்தது. அந்தச் சிறுவன் அதைச் சாப்பிட்டான். அதற்குப் பிறகு பிரெட்டை அவன் தரையிலும் வீசவில்லை, சாப்பிடவும் மறுக்கவில்லை. இப்படிச் சிறு வயதில் நாம் ஒவ்வொருவரும் செய்த எத்தனையோ சுட்டித்தனங்கள், லீலைகளை விவரிக்கும் கதைதான் அப்பா சிறுவனாக இருந்தபோது.

எழுதியவர் ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் தந்தவர் நா. முகமது ஷெரீபு, மறுவடிவம் தந்தவர் ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

27 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்