சென்னையின் ‘ராப்’ ரோஜா!

By செய்திப்பிரிவு

ரேணுகா

அருவியைப் போல் அடுக்கடுக்கான வார்த்தைகளுடன் பாடப்படுபவை ‘ராப்’ எனப்படும் சொல்லிசைப் பாடல்கள். இத்தளத்தில் ஆண்களே அதிகம் கவனம் பெற்றுவந்த நிலையில், தன்னுடைய அழுத்தமான, அழகான தமிழ் உச்சரிப்பால் சமூக வலைத்தளத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் பாடகி ரோஜா ஆதித்யா.

சென்னையில் வசித்துவரும் ரோஜா, ஃபேஸ்புக்கில் ‘மக்கள் பாட்டு’ என்ற பக்கம் மூலம் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தப் பக்கத்தில் ‘ஸ்ரீ காஞ்சி காமாட்சி..’ என்ற பழைய தமிழ்ப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘அனா..கனா..’ பாடலைப் பாடி வெளியிட்டார். இதில் ‘ஓள, ஃ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளைத் தவிர்த்து மற்ற அனைத்து சொற்களும் இடம்பெறும் வகையில் பாடியிருந்தார். இந்தப் பாடலைப் பாடுவது அவ்வளவு எளிதல்ல. தமிழில் ஒவ்வொரு வார்த்தையின் ஒலிகளை சரியாக உச்சரித்துப் பாடியதன் மூலம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மக்களுக்கான இசை

அடிப்படை சங்கீதம் தெரிந்த ரோஜா ஆர்மோனியம், கீபோர்ட் போன்ற வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவர். இவர் 9-ம் வகுப்பு படித்தபோது சுயமாகப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடத் தொடங்கினார். “எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் பாடகர். பள்ளியிலிருந்தே பல மேடைகளில் திரைப்பாடல்கள், கிராமிய பாடல்களைப் பாடிவருகிறேன். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது நான் ஐ.டி. துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் குறித்துப் பாடலை பாடினேன். அதுதான் இசை மூலம் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூற முடியும் என்ற தெளிவை எனக்குக் கொடுத்தது” என்கிறார் ரோஜா.

இது தொடக்கம்தான்

தற்போது ‘தமிழ் முற்றம்’, ‘தெருக்குறள்’, ‘காம்ரேட் டாக்கீஸ்’, ‘கவிப்போம்’ உள்ளிட்ட அமைப்புகளில் சமூகப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடல்களைப் பாடிவருகிறார் ரோஜா. இந்த ஊரடங்குக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ‘தூரம் போகணுங்க..’, விவசாயி, தொழிலாளர்களின் வறுமை குறித்து ‘எங்க மக்கா பசியைப் பாருங்க.., எங்க மக்கா பசியை தீருங்க..’, குழந்தைகள் மீதான வன்முறை குறித்து ‘எங்கே போகிறது இந்த தேசம்..’, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தும் ‘இயற்கை விவாசயம்..’ உள்பட ரோஜா பாடிய பாடல்கள் சமூக ஊடகங்களில் கவனம் பெற தவறவில்லை.

“சாதாரண ஏழை மக்களின் பிரச்சினைகளுக்குப் பாடல் மூலமாக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன். நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துதான் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பாடல்களைப் பாடுகிறேன். நண்பர்கள் உதவியுடன்தான் இதையெல்லாம் செய்கிறேன். நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது” என்கிறார் ரோஜா.

மும்பையில் சொல்லிசைப் பாடல் தளத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இசைவாணி, சோபியா அஷ்ரப்பை தொடர்ந்து சமூக, சுற்றுச்சுழல் கருத்துகளைக் கிராமிய, சொல்லிசைப் பாடல்கள் வழியாக வளர்ந்துவருகிறார் ரோஜா ஆதித்யா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்