என்.டி.ராமராவ் | தாகம் தீர்க்க உதவிய நூற்றாண்டு நாயகர்!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் இதிகாச நாயகர்களான ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் என்.டி. ராமராவ் நினைவுகூரப்படுவார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். இதிகாச ராமரின் குணங்களாக வர்ணிக்கப்படும் அமைதியும், சாந்தமும் ராமராக நடித்த என்.டி.ஆரின் முகத்தில் தவழும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால், ஆழமாக நடித்திருப்பார். அவரை ராமர் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் சம்பூர்ண ராமாயணம் படமும் வெற்றி பெற்றது.

அதேபோல, கிருஷ்ணர் என்றாலும் ராமராவ்தான் கண் முன் நிற்பார். ‘மாயா பஜார்’, ‘கர்ணன்’ படங்களில் கிருஷ்ணராகத் தோன்றுவார். இதிகாசப்படி கிருஷ்ணர் கொஞ்சம் எதிரிகளிடம் குறும்புடன் விளையாடுவார். ராமராக நடிக்கும்போது அமைதியும் சாந்தமும் ராமராவின் உணர்ச்சி பாவங்களாக இருகும் என்றால், கிருஷ்ணராக நடிக்கும்போதோ அதற்கேற்ப அவர் முகத்தில் குமிழ் நகையும் குறும்பும் கொப்பளிக்கும்.

தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற திரைப் பாடல்களில் ஒன்றான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பாடலில், வயோதிகராக வந்து அசத்துவார் ராமராவ். கர்ணனனாக நடிக்கும் சிவாஜி கணேசனிடம் தர்மத்தை தானமாகப் பெற முயலும்போது, கர்ணனின் நிலையைப் பார்த்து பரிதாபப் பார்வை பார்ப்பார். அதேநேரம், அவனுடைய தர்மப் பலன்கள் அனைத்தையும் பெற்றால்தான் கர்ணன் உயிர்போகும் என்பதால் தானத்தைப் பெற்றுவிடுவதில் காட்டும் முனைப்பு என்று நடிப்பில் என்.டி. ராமராவ் கொடி நாட்டியிருப்பார். ராமராவ் நடித்து 1951-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பாதாள பைரவி’ திரைப்படத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையும் ரசிக்கும்!

உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கிய என்.டி.ஆர்., சினிமாவையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க உதவியவர்! மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராமராவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் பெயரிலும் ராமன் உண்டு. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் என்றால் தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர்! இருவருமே அரசியலில் ஈடுபட்டு மாநில முதல்வரானவர்கள்!

தெலுங்கு கங்கைத் திட்டத் தொடக்க விழாவின்போது..

எம்.ஜி.ஆருக்கும் என்.டி.ராமராவுக்கும் உள்ள நட்பும் நெருக்கமும் நாடறிந்தது. ‘எனது குருநாதர் எம்.ஜி.ஆர்.’ என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராமராவ்! ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக என்.டி. ராமராவ் பதவியேற்றார். தன்னிடம் ஆசிபெறுவதற்காக சென்னை வந்த என்.டி.ராமராவுக்கு அவரை கவுரவிக்கும் விதமாக தனது தோட்டத்தில் எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்படியே சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையையும் அதைத் தீர்க்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் யோசனையையும் என்.டி.ராமராவிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் சொன்னால் என்.டி.ஆரிடம் மறுப்பேது? அப்போது உருவானதுதான் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் ‘தெலுங்கு கங்கைத் திட்டம்’. பதவியேற்ற அடுத்த 4 மாதங்களில் 1983,மே 25-ஆம் தேதி சென்னையில் நடந்த தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்! அந்த வகையில் சென்னை நகரின் தாகம் தீர்க்க உதவியிருக்கிறார் நூற்றாண்டு நாயகர் என்.டி. ராமராவ்!

தொடர்புக்கு: sridhar.s@hindutamil.co.in

படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்