கோடம்பாக்கம் சந்திப்பு: காஜலுக்குக் கௌரவம்

By செய்திப்பிரிவு

முப்பத்தைந்து வயதைக் கடந்து கதாநாயகிகளாகத் தொடரும் அதிசயத்தைப் பல நடிகைகள் நிகழ்த்திவருகிறார்கள். த்ரிஷா, நயன்தாரா வரிசையில் காஜல் அகர்வாலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் கலக்கி வருகிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ‘கோமாளி’ மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவரும் காஜல், இந்தியில் ‘மும்பை சாகா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவை தவிர ‘குயின்’ படத்தின் தமிழ் மறு ஆக்கமான ‘பாரிஸ்’ படம் முழுவதும் தயாராகிவிட்டாலும் இன்னும் வெளியாக வில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தமிழ் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்துவரும் காஜலுக்கு, சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகுச் சிலை அமைக்கிறது. அதற்காக சிங்கப்பூர் சென்று, சிலைக்கான வார்ப்புருவை உருவாக்கத் தனது உடலின் அளவுகளைத் தந்து திரும்பி இருக்கிறார்.

பாங்காங்கில் படப்பிடிப்பு

சுபாஷ்கரனின் லைகா பட நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்துவருவதைப் படக்குழு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம், சரத்குமார், ‘ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, அஸ்வின் காகமனு, கிஷோர் ஆகியோர் இப்போதைக்கு நட்சத்திரப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, தோட்டா தரணி - வாசிக் கான் கலை இயக்கம், ஏகா லக்கானி ஆடை வடிவமைப்பு, ஷாம் கௌஷல் சண்டைப் பயிற்சி, கர் பிரசாத் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்பக் கூட்டணி களைகட்டியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து எழுதுகிறார்கள். வசனங்களை ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழில் சனல் குமார்!

கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷின் 40-ம் திரைப்படத்தை இயக்கிவருகிறார். நிழலுலகைக் கதைக் களமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் வேலைகள் ஒருபுறம் இருக்க, கார்த்திக் சுப்பராஜ் ‘அல்லி’ என்ற சுயாதீனத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். ‘ஒளிவு திவசெத்தே களி’, ‘எஸ் துர்கா’ ஆகிய சுயாதீனப் படங்களின் மூலம் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநரான சனல் குமார் சசிதரன் இப்படத்தை இயக்கி உள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘அல்லி’ படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

புதிய ஜோடி

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருந்த ‘ஆக் ஷன்’ சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்து ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ரிது. ‘எவ்விடே சுப்ரமண்யம்’, ‘பெல்லி சூப்புலு’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்த ரிது, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படங்களிலும் நடித்திருப்பவர்.

அதிரடியாக ஐந்து!

‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டும் தரமான திரைப்படங்கள் மூலம் சிறந்த தயாரிப்பாளராகவும் முகம் காட்டியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். தனது திரைப்படத் தயாரிப்பைத் தொடரும் விதமாக கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து புதிய படங்களைத் தயாரிக்கிறார் இரஞ்சித்.

அவற்றில் ஒரு படத்தை ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இயக்குகிறார். மற்றொரு படத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். அடுத்த மூன்று படங்களை பா.இரஞ்சித்தின் உதவியாளர்களான சுரேஷ்மாரி, மோசஸ், ப்ராங்க்ளின் ஆகியோர் இயக்குகிறார்கள். இந்த ஐந்து படங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்