வாழ்க்கையைக் களவாடும் கல்வி! - இயக்குநர் மித்ரன் பேட்டி

By கா.இசக்கி முத்து

“பாதுகாப்பானது என நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தின் தகவல் திருட்டுக்கள் என்னைக் கோபமூட்டியதால் அதை வைத்து ‘இரும்புத்திரை’ எடுத்தேன். அதேபோல், நமது கல்விமுறையின் மீதும் அயர்ச்சியும் எரிச்சலும் கோபமும் இருந்தன. அவற்றின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்புதான் ‘ஹீரோ’ என சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்குள் உலவவிட்டிருக்கும் அனுபவம் குறித்து உரையாடத் தொடங்கினார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

நமது கல்விமுறையின் மீதான உங்கள் கோபத்தைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நாம் அனைவரும் படிக்கிறோம், அதில் எத்தனை பேர் கற்றுக்கொள்கிறோம்? எல்லோரும் வகுப்பைத் தாண்டித் தான் வந்திருப்போம். ஆனால், படித்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் நமக்குப் பதில் சொல்லத் தெரியாது. மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக மனப்பாடம் செய்து படித்து பரீட்சை எழுதி மார்க் வாங்கியவுடன் ஏட்டுக் கல்வியால் மண்டைக்குள் எட்டாதவற்றை அப்போதே தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுகிறோம்.

இங்கு கல்வி என்பது வாழ்க்கைக்காக அல்ல. கல்லூரி முடிந்து சான்றிதழ் வந்துவிட்டால், நாம் வாழ்க்கையில் சாதித்துவிட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அந்தப் படிப்பு நமது வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் உதவுவது இல்லை. இது வாழ்க்கையைக் காப்பாற்றும் கல்வி அல்ல; களவாடும் கல்வி. நமது கல்வி முறையின் பிரதானப் பிரச்சினையான இது எனக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கான கல்வியைக் கற்காமல் போய்விட்டோமே என்று பின்னால் ஏங்கி நிற்கிற எல்லோருக்கும் வண்டி வண்டியாகக் கோபத்தைக் கொண்டுவரும். எனக்குள் இருந்த கோபத்தை ‘ஹீரோ’வுக்குள் சுவாரசியமான கோபமாக இறக்கி வைத்திருக்கிறேன்.

சிவகார்த்திகேயனை இந்தக் கதைக்குள் பொருத்த என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்குப் பிடித்த ஹீரோ. கல்வி என்றாலே குழந்தைகள்தாம். அவர்களுக்கான கருத்தை சிவகார்த்திகேயன் சொன்னால் சரியாகப் போய்ச் சேரும் என நினைத்தேன். ‘இரும்புத்திரை’ படம் வெளியாகி பத்து நாட்களில் இந்தப் படத்தின் வேலைகளைத் தொடங்கிவிட்டேன். ஒன்றரை வருடமாக நானும் சிவாவும் இந்தப் படத்துக்காக ஓடிக்கொண்டே இருந்தோம். ஒரு சூப்பர் ஹீரோ படம், அது கல்வி சம்பந்தப்பட்ட படம், குழந்தைகளுக்கான படம் என மூன்று பரிமாணங்களில் வெளிப்பட வேண்டிய சுவாரசியத்துக்காக நாங்கள் ஓடிய ஓட்டம், ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.

அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் என மற்ற நட்சத்திரங்கள் கூட்டணி வித்தியாசமாக இருக்கிறதே...

பெரிய பட்ஜெட் படத்துக்கு ஒரு புதுமுகக் கதாநாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து கல்யாணி ப்ரியதர்ஷனை ஒப்பந்தம் பண்ணினோம். இளமையான தோற்றமும் ஈர்ப்பும் கொண்ட கல்யாணிக்கு முதிர்ச்சியான கேரக்டர். மிக அழகாக நடித்திருக்கிறார். அர்ஜுனுடைய கேரக்டரைப் பொறுத்தவரை திரைக்கதை எழுதும்போதே அவர்தான் என்று முடிவு பண்ணிவிட்டேன்.

அபய் தியோலுக்கு நீண்ட நாள் காத்திருந்தேன். அவரைப் பார்க்கும்போது இதெல்லாம் இவரால் பண்ண முடியுமா என்று தோன்றும். அதே வேளையில் கொடூரமான ஆளாகவும் தெரிவார். அதாவது ஹீரோ, வில்லன் இரண்டுமாகவே இருப்பார். அவருக்குச் சுத்தமாகத் தமிழ் தெரியாது. ஒரு வசனம் கொடுத்தால் அதைப் பலமுறை எழுதிப் பார்ப்பார். அதை எழுதி மனப்பாடம் பண்ணிப் பேசுவார். அவருடைய உழைப்பு கண்டிப்பாகப் படத்தில் தெரியும்.

ஜார்ஜ் வில்லியம்ஸ், ரூபன் என்ற இருவர் இல்லாமல் மித்ரன் இல்லை என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறதே...

பத்து வருட நண்பர்கள். என்னுடைய முகவரி என்றால் ஜார்ஜும் ரூபனும் தான். யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் திரையுலகுக்குள் வந்தேன். ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் என்னிடம் கதை கேட்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய நண்பர் என்ற காரணங்களுக்காகத் தான். எனக்காகப் பல கம்பெனிகள் இருவரும் ஏறி இறங்கியுள்ளனர். அப்படித்தான் ‘இரும்புத்திரை’ வாய்ப்புக் கிடைத்தது. எப்போதுமே பக்கபலமாக இருக்கிறார்கள், இருப்பார்கள். நாங்கள் ஒரு டீம்.

இப்போதும் செல்போன் தகவல் திருட்டுப் பற்றிச் செய்திகள் வெளிவரும்போது, என்ன நினைப்பீர்கள்?

அப்படியொரு விழிப்புணர்வு நம் மத்தியில் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் படத்தைப் பண்ணினேன். ஸ்மார்ட்போன் உபயோகிக்காமல், வங்கியில் பணம் போடாமல் நம்மால் இருக்கவே முடியாது. நாம் அனைவரும் பயத்துடனேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பயத்தின் பின்னால் இருக்கும் நியாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதால், பார்த்தவர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்கக் கற்றுக்கொண்டிருந்தால் அதுவே ‘இரும்புத்திரை’யின் உண்மையான வெற்றி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்