டிஜிட்டல் மேடை: விரல்நுனியில் காத்திருக்கும் விபரீதங்கள்

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

இணைய வசதி உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டது. அதன் வழியாக சமூக ஊடகங்கள் கடல்கடந்த சிநேகங்களை விரல்நுனியில் வளர்த்துள்ளன. வரமாக வேண்டிய நவீனத்தின் வளர்ச்சிகள், நடைமுறையில் சாபமானதற்கு நமது தலைமுறையே சான்று. அவ்வகையில் சமூக ஊடகங்களின் வழியே நடந்தேறும் சில அவலங்களைத் தோலுரிக்கிறது ‘ஃபிங்கர்டிப்’ வலைத்தொடர். ஜீ5 தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட இந்தத் தொடர், இளைய சமுதாயத்தினர் மட்டுமன்றி அனைவரும் பார்க்க உகந்தது.

தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாகத் தனிப்பட்ட நபர் குறித்த தரவுகள் இணையவெளியில் ஏகபோகமாக விலை போகின்றன. தகவல் நெடுஞ்சாலையில் நமது தேடல், பதிவுகள், பகிர்வுகள், விருப்பங்கள் என அனைத்தும் பெருநிறுவனங்களுக்காகக் கண்ணியமாகக் களவாடப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால், நாமாக வலியச் சென்று சமூக ஊடகங்களில் நமது உள்ளக் கிடக்கையைப் பலவிதமாய்ப் பந்தி வைக்கிறோம்.

தனிப்பட்ட அபிலாஷைகள், மனக்குமுறல்கள், ஆட்சேபனைக்குரிய கருத்துகள், தனிப்பட்ட ஒளிப்படங்கள், வீடியோக்கள் எனப் பலவற்றையும் சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்க்கிறோம். இவை எல்லை மீறும்போது நம்மையறியாது பலவிதமான நச்சு வலைகளில் சிக்கிக்கொள்வது நடக்கிறது. ‘ஃபிங்கர்டிப்’ வலைத்தொடரின் 5 அத்தியாயங்களும் தலா ஐந்து செயலிகளின் வழியே, இந்தப் பிரச்சினைகளை இன்னும் நெருக்கமாகத் தரிசிக்கவும் விழிப்புணர்வு பெறவும் உதவ முயல்கின்றன.

ஐ.டி. நிறுவனத்தில் கைநிறைய ஊதியம், கணவருடன் மன நிறைவான வாழ்க்கை என்று வாய்த்திருந்தபோதும், கூடுதல் அங்கீகாரத்துக்காகச் சமூக ஊடகத்தில் தன்னை ஒரு பிரபலமாக நிறுவும் பெரும் பிரயத்தனத்தில் தடுமாறுகிறார் சுனைனா. இந்த முயற்சிகளில் அவர் தடம்புரளும்போது சொந்த வாழ்க்கை, வேலை, மகிழ்ச்சி என அனைத்தையும் இழந்து புதைசேற்றில் சிக்குகிறார். பாவனை உலகில் பிரபலமாகச் சஞ்சரிப்பதற்காகப் படிப்படியாக உருமாறும் அவருடைய மனநிலைகளின் வேட்கையும் அதன் பாதிப்புகள் சொந்த வாழ்க்கையை சீரழிப்பதையும் உறுத்தாத உளவியல் பார்வையில் சொல்கிறார்கள். இறுதியாக அவர் முன்வைக்கும் முடிவின் நிதர்சனம் முகத்தில் அறைகிறது.

அடுத்து வரும் அத்தியாயம், தனக்கு வந்ததை ஆய்ந்தறியாது அடுத்தவருக்குப் பகிர்ந்து வம்பு வளர்க்கும் ‘வாட்ஸ் அப்’ விபரீதங்களைப் பேசுகிறது. ‘பிள்ளை பிடிப்பவர்’ என்ற வதந்தியால் ஊருக்கு ஊர் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட கும்பல் தாக்குதல்களை இன்னொரு கோணத்தில் அலசுகிறார்கள். இதுவும், அடுத்து அக்‌ஷரா ஹாசன் தோன்றும் மூன்றாம் அத்தியாயமும், முன்விரோதத்தில் வேண்டாத நபர்களை மோசமாகச் சித்தரித்து அவர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் சமூக வலைத்தளவாசிகளின் கோர முகங்களை அம்பலப்படுத்துகின்றன.

ஆன்லைனில் இளசுகள் கூடிக் குலவும் சமூகச் செயலிகளில் மறைந்திருக்கும் அபாயங்களை பேசும் நான்காம் அத்தியாயம், திரில்லர் பாணியில் செல்கிறது. பெண்களுக்கு வலைவீசும் மணமான ஆண்களை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், தனது பிரத்யேகக் குரலும் நடிப்புமாக பிரமாதமாகச் செய்திருக்கிறார் காயத்ரி. சில வருடங்களுக்கு முன்னர் சினிமா நட்சத்திரங்களை கலங்கடித்த ‘லீக்ஸ்’ விவகாரத்தை முன்வைத்து, நமது கையடக்க செல்ஃபோனின் இணைய இணைப்புகளே விபரீதங்களைத் திறந்துவிடுவதை ஐந்தாம் அத்தியாயத்தில் அலசுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களின் சீர்கேடுகளும் ஆன்லைன் அக்கப் போர்களுமே வலைத்தொடரின் அடிப்படை என்றபோதும் பெரிதாக நீதிபோதனை நெடியின்றி சுவாரசியமான பொழுதுபோக்குடன் அத்தியாயங்களைக் கொண்டு செல்கின்றனர். பல திரைப்படங்களில் இவை கையாளப்பட்டிருந்தும் வலைத்தொடரின் பிரத்யேக பாணியும் அவகாசமும் நெகிழ்வும் சிறப்பான கதையாடலுக்குக் களம் அமைத்திருக்கின்றன. தனித்தனிக் கதைகள் என்றபோதும் அவற்றை ஒன்றோடொன்று கோத்திருக்கும் லாவகமும் ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிப்பில் எஸ்.ஷிவாகர் இயக்கியிருக்கும் இந்த வலைத்தடர 3 மணி நேர சினிமா அனுபவத்தைத் தந்தாலும், சில அத்தியாயங்களின் நீளம் சோதிக்கிறது. கணவருடன் தயாரிப்பில் இணைந்திருக்கும் அனுவர்தனின் உடையலங்காரமும் செழிப்பான இசையும் ஒளிப்பதிவும் பிராந்திய வலைத்தொடர்களுக்கு முன்மாதிரியாகின்றன. நடப்பிலிருக்கும் பிரபல சமூக ஊடகங்கள் எதையும் நேரடியாகக் குறிப்பிடாமல், அவற்றை அசப்பில் பிரதிபலிக்கும் புதிய செயலிகளையும் அவற்றுக்கான மென்பொருளையும் உருவாக்கிய உழைப்பும் கவனம் ஈர்க்கின்றன.

முன்னோட்டத்தைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்