என் தாடிக்குள் ஒளிந்திருக்கும் வலி! - நடிகர் கதிர் பேட்டி

By கா.இசக்கி முத்து

றிமுகமான படம் முதலே வித்தியாசமான கதைகளைத் தேர்வுசெய்து நடித்து வருபவர் கதிர். ‘விக்ரம் வேதா’ படத்தில் புள்ளி என்ற கதாபாத்திரத்தில் கவர்ந்தவர், தற்போது ‘சிகை’ என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்க்க இருக்கிறார். ‘சிகை’ முதல்பார்வை வெளியானது முதலே கவனம் ஈர்த்துவரும் கதிரிடம் பேசியதிலிருந்து...

‘சிகை’ எந்த மாதிரியான கதைக்களம்?

‘சிகை’ ஒரு புதிய முயற்சி. உடனே மெதுவாக நகரும் கதையோ என எண்ணிவிட வேண்டாம். க்ரைம் த்ரில்லர் பாணியில் நகரும் கதையில் கதாபாத்திரங்கள் அனைத்துமே புதுமையாக இருக்கும். நாயகன், நாயகி, காதல், வில்லன் என வழக்கமான எதுவுமே இப்படத்தில் இருக்காது. கதையைக் கேட்கும்போது எப்படி உணர்ந்தேனோ, அதையே படத்தைப் பார்ப்பவர்களும் உணர்வார்கள்.

திரைப்பட விழாக்களில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மிகவும் பாராட்டினார்கள். ஆனால், இது திரைப்பட விழாவுக்கான படமும் கிடையாது, கமர்ஷியல் படமும் கிடையாது. இதன் கதைக் களத்துக்காக மட்டுமே திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வானது.

‘சிகை’யின் முதல் பார்வைக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

உண்மையில் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. அதனை வெளியிடும் முன்பு, நண்பர்களிடம் காட்டியபோது “உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை, இந்தக் கதாபாத்திரத்தை ரொம்பவும் முன்னதாகச் செய்து உனது திரையுலக வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாய். இது சரியாக வராது” என்று சொன்னார்கள். அப்போது தவறாகத் தேர்வு செய்து விட்டோமோ என்று எண்ணினேன். அரை மனதுடன் மக்கள் தொடர்பாளர் நிகிலிடம் ‘நீங்கள் போஸ்டரை வெளியிட்டு விடுங்கள்’ என்று சொன்னேன். ஃபர்ஸ்ட் லுக் வெளியான அடுத்த நாள் “கதிர்... உங்க பேட்டி வேண்டும்” என்று பல பத்திரிகையாளர்கள் பேசினார்கள். அப்போதுதான் இக்கதையின் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று சந்தோஷப்பட்டேன். மேலும், அப்போது படப்பிடிப்பே தொடங்கப்படவில்லை.

திருநங்கையாக நடித்துள்ளீர்களா?

படத்தில் எனக்கு இரண்டு தோற்றங்கள் இருக்கின்றன. திருநங்கை மட்டும் என்று சொல்லிவிட முடியாது. மேலும், அதைப் பற்றி விலாவரியாகப் பேசவும் முடியாது. ஏனென்றால், அதுதான் படத்தின் சஸ்பென்ஸ். இப்படத்தின் ட்ரெய்லரை திருப்தி வரும்வரை ஐந்து முறை தயார் செய்தோம். முதலில் எதை வெளியிடலாம், எதை வெளியிட வேண்டாம் என்ற குழப்பம் எங்களுக்கே இருந்தது. அதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.

பெண் தோற்றம் எனும்போது அதற்கான மெனக்கிடல்?

உண்மையில் மிகவும் கடினமாக இருந்தது. மேக்-அப் போட்டு நடித்தால், வேறு மாதிரி தெரியும் என்று நினைத்தோம். எனவே, பெண்களுக்கு மெழுகு தோய்த்த நூலைக் கொண்டு இமை முடிகளைப் பிடுங்கி எடுப்பதுபோல எனது தாடியை ஒவ்வொரு முடியாக ஆறரை மணி நேரம் பிடுங்கி எடுத்தார்கள். அப்போது மிகவும் வலித்தது. அதைத் தொடர்ந்து கன்னம் கொஞ்சம் வீங்கியது. உடனே படப்பிடிப்பு தொடங்கி விட்டோம். ஆகையால் மிகவும் குறைந்த மேக்-அப் தேவைப்பட்டது. மேக்-அப்பை எல்லாம் தாண்டி நடிப்பாக எந்தவொரு இடத்திலும் ஓவராக நடித்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன். ஆண் - பெண் இருவருக்குமே உருவ வித்தியாசம் என்று ஒன்றுள்ளது. அதைத் தாண்டி செய்கைகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருக்கும். பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

திரைப்படப் பின்புலமின்றி நாயகனாக வளர்ந்து வருகிறீர்கள். கடினமாக உணர்கிறீர்களா?

எளிதாக யாரையும் அணுக முடியவில்லை என்பது உண்மைதான். திரையுலகப் பின்புலம் இருந்தால் மட்டுமே திரையுலகுக்குள் வர முடியும் என்பது கிடையாது. பின்புலம் இருந்தால் திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கும். நம்மை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அதை யாருமே ஊகிக்க முடியாது. என்னை மக்கள் ஏற்றுக்கொண்டதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையுலகில் எனக்குக் கிடைக்கும் அனுபவங்கள் புதிதாக இருக்கின்றன. அதில் நிறைய பாடங்கள் கற்று வருகிறேன். வாழ்க்கையில் அனுபவங்கள் மட்டுமே என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

திரையுலகில் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்தது யார்? யாருடைய பாராட்டை மறக்க முடியாது?

‘மதயானைக் கூட்டம்’ பார்த்துவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் நீண்ட நேரம் பேசினார். அதற்கு முன்னால் அவரைச் சந்தித்ததில்லை. பெரிய இயக்குநர் ஒருவர் அவ்வளவு நேரம் பேசியது எனக்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கிறேன். அப்படம் வெளியாகும்போது, நமக்குச் சுத்தமாக நடிப்பு வரவில்லை என்பது எனது எண்ண ஓட்டமாக இருந்தது. அதில் நன்றாக நடித்துள்ளேன் என்று சொன்னால் அனைத்துமே இயக்குநருக்குத்தான் போய்ச் சேரும்.

திரையுலகில் நண்பர்கள் மிகவும் குறைவு. சேது அண்ணா (விஜய் சேதுபதி), கலையரசன், ‘விக்ரம் வேதா’ படக்குழுவினர் நண்பர்களாக இருக்கிறார்கள். ஏதாவது படம் ஒப்பந்தமாகும்போது, சேது அண்ணாவிடம் மட்டும் கொஞ்சம் வழிமுறைகள், கருத்துகள் கேட்பேன். விஜய் சாரிடம் பணிபுரியும் ஜெகதீஷ் அண்ணா மூலமாகத்தான் திரையுலத்துக்குள் வந்தேன். அப்போதிலிருந்து இப்போது வரை எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

படங்கள் மிகவும் குறைவாக நடிக்கிறீர்கள். 2017-ல் தான் நீங்கள் நடித்து அதிகமான படங்கள் வெளியாகின்றன என நினைக்கிறேன்…

நிறைய படங்களில் நடித்து முகத்தைப் பதிவுசெய்வது என்பது ஒரு வகை. இன்னொன்று படங்கள் குறைவாக நடித்தாலும், அதில் நமது திறமையை நிரூபிப்பது இன்னொரு வகை. இரண்டிலுமே பயணிக்க ஆசைதான். ஒவ்வொரு படத்தையும் மக்கள் அணுகும்முறையும் மாறியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல நடந்துகொள்ள நினைக்கிறேன். நான் போகும் பாதை சரியானதுதானா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பாதையில் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 mins ago

விளையாட்டு

38 mins ago

வேலை வாய்ப்பு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்