மொழி கடந்த ரசனை 21: முடியாத இரவு

By எஸ்.எஸ்.வாசன்

காதலனையும் அவன் மீதான காதலையும் இரு அம்சங்களாகக் காணும் விசித்திரமான திரை மரபு அன்றாட யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. காதலன் தன்னைத் துறந்தாலும் அவன் காதலை மறக்காத ஒரு பெண் வெளிப்படுத்தும் கவிதை வரிகளாக இந்தியில் எழுதப்பட்டுள்ள பல பாடல்கள், இந்த உணர்வை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இடமளிக்காத தமிழ் மனம்

‘அன்பட்’ படத்துக்காக மெஹதி அலி கான் எழுதிய ‘ஹை இஸ்ஸி மே பியார் கீ ஆப்ரு’ என்று தொடங்கும் பாடல் இவ்வகையைச் சார்ந்தது. காதலி கொள்ளும் கழிவிரக்க உணர்வின் உச்சகட்டக் கவிதையாகக் கருதப்படும் இப்பாடல் வரிகள் நமக்கு ஒரு தமிழ்ப் பாடலை நினைவுபடுத்தும். ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். ‘இது குழந்தை பாடும் தாலாட்டு இது மேற்கில் தோன்றும் உதயம்’ என்ற அந்தத் தமிழ்ப் பாடல் தன்னைப் புறக்கணிக்கும் காதலியை நோக்கிக் காதலன் பாடுவது.

பொதுவாக, இழந்த காதலை எண்ணி, வெளிப்படையாக வருந்தி, காதலி பாடும் பாடல்கள் தமிழ்த் திரையில் அரிது. ஒரு சிறந்த பெண் அல்லது காதலி அவ்வாறு வெளிப்படையாகத் தன் மனக் கிடக்கையை வெளிப்படுத்துவதற்குத் தமிழ்ப் பண்பாட்டுத் தர அளவுகோல்கள் இடமளிக்காது போலும்.

‘அன்பட்’ படத்தின் இந்தப் பாடலின் பொருள் மட்டுமின்றி அதன் சொற்பிரயோகங்களும் மிக அழகானவை. ‘ஆப்ரூ’ என்ற பெர்சிய வேர் கொண்ட உருதுச் சொல், ‘வெகுமதி’ ‘விருது’ போன்ற உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது. ‘ஹை இஸ்ஸீ மே பியார் கீ ஆப்ரூ’ என்ற தொடக்க வரிகள் ‘இதில்தான் இதுவே (காதல் தோல்வி) காதலுக்குக் கிடைத்த வெகுமதி என்ற பொருளைத் தருகிறது.

இதில்தான் உள்ளது காதலுக்குக் கிடைத்த வெகுமதி

உள்ளத்தை நோகடிப்பான் அவன்

உண்மைக் கடமையில் நான்

கடமை பயனில்லை எனில் பகரட்டும் அவனே

என்ன செய்ய, துக்கம்கூட எனக்குத்

துலங்கும் ஒரு சக்தியாக என் அருகில் வந்து

பரிசாக அவன் தந்ததன்றோ

அந்தப் பிரிவுத் துன்பமே இனி என் வாழ்க்கை

எந்த விதத்தில் அதை நெஞ்சிலிருந்து

நான் நீக்க முடியும்

முற்றுப் பெறாத பொருள் தரும்

மொழியின் கருத்து நான்

சற்றும் கழியாத விடியலற்ற

நீள் இரவு நான்

அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது

என் தலையெழுத்து

இப்படியே மெழுகுவர்த்தியாக

எரிந்து அழியும்படி

எவர் உள்ளமும் கொள்ளும்

விருப்பமும் இல்லை நான்

எவர் விழிகளும் காண ஏங்கும்

ஏக்கமும் இல்லை நான்

வசந்தத்தை வரவேற்க வாடி நிற்கும் மலராக நான்.

வசந்தம் வராமல் போனால்

நான் என்ன செய்வேன்

இதில்தான் உள்ளது காதலுக்குக் கிடைத்த வெகுமதி

இப்பாடலின் சிறப்புப் பிரயோகங்களாக விளங்கும் ஆபுரூ, ஜஃபா, வஃபா, அஜீஸ், ஆருஜு, ஜஸ்துஜு போன்ற உருதுச் சொற்கள் எல்லாம் திரை தாண்டிய, உருது பெர்சிய அரபு மொழிகளின் கவிதைகளில் அதிகமாக எடுத்தாளப்படும் எதுகை மோனை ஒலியுடைய பயன்பாட்டுச் சொற்கள். குறிப்பாக வலிமை, சக்தி என்பதான பொருள் தரும் ‘அஜீஸ்’ என்ற சொல்லின் வேர் ஹீப்ரூ மொழியில் உள்ளது. பின்னர் ஹீப்ரூ பேசப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் வழக்கில் இருந்த அரபு மொழி, அராமேய்க், துருக்கிய மொழி, புஷ்ட்டு மொழி, குதிரிஷ் மொழி, ஆகிய மொழிகளிலும் பெர்சிய மொழி, உருது மொழி வங்காள மொழி ஆகிய இந்திய துணைக்கண்ட மொழிகளிலும் இன்று வரை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று, விருப்பம் என்ற பொருள் தரும் ‘ஆருஜு’ என்ற பெர்சியச் சொல் ஏராளமான இந்தித் திரைப்படப் பாடல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு கவிச்சொல். ஆனால், இதன் இணைச்சொல்லாக விளங்கும் இதே பொருள் தரும் ஜஸ்துஜு உருது சொல்லைக் கவிதைகளில் மட்டுமே அதிகம் காணலாம்.

இப்பாடலின் மற்றொரு சிறப்பு, இது நகை முரண் பாணியில் முழுவதுமாக அமைந்த அரிதான பாடல். ‘துக்கம்கூட ஒரு சக்தி’, ‘பொருள் அற்ற கருத்து’, ‘விடியல் இல்லாத இரவு’ போன்றவை தமிழ் மொழி போல நேரடியாக இல்லாமல், ‘எந்த இரவு விடியாதோ அந்த இரவு நான்’ என்ற முறையில் மட்டுமே இந்தியில் எழுத முடியும். எனவே இசை அமைப்புக்கு இது ஏற்றதாக அமைகிறது.

சிந்திக்கத் தூண்டும் கற்பனை

சோக உணர்வுப் பாடல்கள் பல உள்ள இப்படத்தில் ஒரு பாடல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ‘சிக்கந்தர் னே போரஸ் ஸே கீ தீ லடாயீ’ தோ மே கியா கரூன்’ என்று தொடங்கும் மகேந்திர கபூர் பாடியுள்ள அந்தப் பாடலின் பொருள் இப்படி அமைகிறது:

சிக்கந்தர் (அலெக்ஸ்சாண்டர்) போரஸ்ஸுடன்

போர் செய்ததற்கு நான் என்ன செய்வேன்.

கவுரவர்கள் பாண்டவர்களுடன் யுத்தம் புரிந்ததற்கு

நான் என்ன செய்வேன்.

p- u- t புட் ஆனால் b-u-t பட் என்று மாற்றி மாற்றிக்

கற்றுக் கொடுப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்?

பாலில் தண்ணீர் கலந்து விற்பதால்

வெண்ணெய் வராததற்கு

நான் என்ன செய்ய முடியும்

இப்படி இந்த மக்கள் அநீதியைக் கண்டு

எதிர்த்துப் பேசாமல் ஊமையாய் இருப்பதற்கு

நான் என்ன செய்ய முடியும்.

அன்றைய சமூக நிலையையும் சரித்திரத்தையும் சிறுவர்களும் புரிந்துகொள்ளும்படி நகைச்சுவை உணர்வில் எழுதப்பட்ட இந்தப் பாடலை அக்காலத்தில் பஞ்சாப் பகுதியில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் பாடிப் பாடம் எடுப்பார்களாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்