மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!

By பா.தீனதயாளன்

ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.

நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது.

இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார்.

தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

எம்.ஜி.ஆர். - சிவாஜிக்கு இணை

1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது.

சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

‘மல்லிகைப்பூ ரோஜா... முல்லைப் பூ வேணுமா...

தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.

‘ராஜி என் கண்மணி’

எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.

அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.

‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஏமாற்றமும் ஏற்றமும்

‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது.

சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

வாழ்வியல்

23 mins ago

தமிழகம்

39 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்