டிஜிட்டல் மேடை 22: நிழல் நாயகியின் நிஜக் கதை

By எஸ்.எஸ்.லெனின்

இந்திய சினிமாவின் வெற்றிகரமான பெண் சண்டைக் கலைஞர்களில் முக்கியமானவர் ரேஷ்மா பதான். அவரது போராட்ட வாழ்க்கையைச் சுவாரசியமாக விவரிக்கிறது ‘ஜீ5’ தளத்தில் கிடைக்கும் ‘தி ஷோலே கேர்ள்’.

60-களின் இறுதிவரை பாலிவுட் உட்பட இந்தியத் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளில் ஆண்களின் ஆதிக்கமே நிலவியது. நாயகிகளுக்கு ‘டூப்’ போடும் சண்டைக் கலைஞர்களும் ஆண்களாகவே இருந்தார்கள்.

14 வயதில் பாலிவுட்டில் கால்வைத்த ரேஷ்மா பதான் என்ற சின்னப் பெண், இந்த நிலைமையை அடியோடு மாற்றினார். கூடவே திரைத்துறையில் ஊறிப் போயிருந்த பாலினபேதத்தை உடைக்கும் சுத்தியலை ஏந்திய முதல் பெண் கரம் ரேஷ்மாவுடையதாக மாறியது.

அவரது முயற்சிகள், திரைக்குப் பின்னே உழைக்கும் அனைத்துப் பெண் கலைஞர்களுக்கான அங்கீகாரத்துடன் மதிப்பான ஊதியத்தையும் பெற்றுத் தந்தன. அந்த முன்னோடி பெண் கலைஞரின் வாழ்க்கையை ஆவணமும் புனைவும் கலந்த ஒன்றரை மணி நேரப் பதிவாக விறுவிறுப்பாகச் சொல்கிறது ‘தி ஷோலே கேர்ள்’.

2 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த்தின் பின்னணிக் குரலுடன் ஹாட் ஸ்டாரில் வெளியான ‘சினிமா வீரன்’ ஆவணப் பதிவை அறிவோம்.

திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு உயிர்கொடுக்க ரத்தமும் வியர்வையும் சிந்தும் சண்டைக் கலைஞர்களுக்கு ‘சினிமா வீரன்’ பெருமை சேர்த்தது.

 தற்போது ஜீ5 வெளியிட்டிருக்கும் ‘தி ஷோலே கேர்ள்’ அந்த சண்டைக் கலைஞர்களில் பெண் முன்னோடியான ரேஷ்மாவைக் கவுரவித்திருக்கிறது.

தனது குடும்பத்தின் 7 வயிறுகளுக்காக அப்போதைய பம்பாய் வீதிகளில் சாகசம் நடத்தி சில்லறைகளைத் தேற்றும் சிறுமியாக ரேஷ்மா அறிமுகம் ஆகிறார். பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் கண்பட்டு, கதாநாயகிகளுக்கான முதல் பெண் ‘டூப்’ சண்டைக் கலைஞராகிறார்.

திரைத்துறை மீதான பொதுப்புத்தியில் ஊறிய அவப்பெயர், பழமை செறிந்த இஸ்லாமியக் குடும்பத்தின் எதிர்ப்பு, பெண்ணின் உழைப்பை உதாசீனம் செய்யும் திரையுலகின் பிற்போக்குத்தனம் எனப் பல சவால்களுக்கு மத்தியில் போராடி தன்னை நிலை நிறுத்துகிறார்.

ஹேமமாலினி, ஸ்ரீதேவி, மீனாகுமாரி, டிம்பிள் கபாடியா என பாலிவுட் தாரகைகளின் திரை சாகசங்களுக்குத் தனது முகம் மறைத்து உயிர் கொடுக்கிறார் ரேஷ்மா.

பாதுகாப்பு சாதனங்களும், நுட்பமான ஏற்பாடுகளும், கிராஃபிக் கலையும் வளராத காலத்தில் சாகசக் காட்சிகளில் ’டூப்’ போடுவதற்கு மெய்யாலுமே உயிரைப் பணயம் வைத்தாக வேண்டும்.

ஆனால், மூன்றாவது மாடியிலிருந்து குதிப்பது, தேகத்தில் பற்றிய தீயுடன் ஓடுவது, கண்ணி வெடிகளுக்கு இடையே தப்பிப்பது, கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பாய்வது எனக் கதாநாயகிகளின் தீரங்களுக்கு ரேஷ்மா உரம் சேர்ப்பதை நம்பும்படி ஆவணப் படுத்தி உள்ளனர்.

திரைப்படங் களில் ரேஷ்மாவின் சாகசங்களைவிட, தான் நேசிக்கும் பணியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் திரைக்குப் பின்னே அவர் மேற்கொள்ளும் நிஜ வாழ்க்கையின் சாகசங்கள் தனியாகக் கவனம் ஈர்க்கின்றன.

 ஆண்களுக்கு நிகராக உழைத்தாலும் பெண் என்பதற்காக ஸ்டண்ட் கலைஞர்களுக்கான சங்கத்தில் சேர்க்க மறுப்பது, ஊதியத்தைக் குறைத்து ஏமாற்றுவது எனத் திரையுலகின் வறண்ட பாலின சமத்துவத்துக்கு எதிராக ரேஷ்மா போராடுகிறார்.

பாலியல் சீண்டலுக்கு எதிராகப் பொங்குகிறார். திரைத்துறைப் பெண்ணைத் தூற்றும் சாமானிய பெண்களைச் சமாளிக்கிறார்.

அதே மனநிலையில் தவறாக அணுகும் ஆண்களைச் சீறிப் பாய்ந்து தாக்குகிறார். தான் ரத்தம்சிந்தி நடித்த காட்சி களுக்கான முழு அங்கீகாரமும் கதாநாயகிகளுக்குச் செல்வதைக் கண்டு இயலாமையுடன் வெம்புகிறார்.

இப்படி ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான சகல அம்சங்களுடன் ரசிகருக்கு உத்வேகமும் நெகிழ்வும் ஊட்டும் திரைப்படமாக ஈர்க்கிறது ’தி ஷோலே கேர்ள்’.

தமிழுக்கான மொழிபெயர்ப்புப் பதிப்பின் தடுமாற்றங்களை மட்டும் சற்றுப் பொறுத்துக்கொண்டால் நல்லதொரு அனுபவத்துக்கு ஷோலே கேர்ள் உத்தரவாத மளிக்கும். ரேஷ்மா பதானாக வரும் பிடிதாவின் பேசும் கண்களும்,  உடல்மொழியும் கச்சிதம்.

தலைப்புக்கு நியாயம் சேர்க்கும்விதமாக ஷோலே படக் காட்சிகளுக்காகச் சற்று மெனக்கெடவும் செய்திருக்கிறார்கள். படத்தின் இறுதியாக  நிஜ ரேஷ்மாவும் தோன்றி கனம் சேர்க்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்