தெய்வத்தின் குரல்: மனம் ஒன்றிப் பூஜை

By செய்திப்பிரிவு

சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு வாச ஸ்தானந்தான். இவளுக்கோ இரண்டு. அதில் ஒன்று பிரம்மாண்டம் என்கிறதற்குள்ளேயே எல்லா கிரகங்களும் தன்னைச் சுற்றி வரும்படி மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது.

இது தவிர இந்த ப்ரஹ்மாண்டத்திலேயே அடங்காமல் தனி லோகமாக சிருஷ்டி பண்ணிக்கொண்டு அதற்குள்ளே ஒரு தீவிலும் வசிக்கிறாள். ”ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ” என்று சஹஸ்ரநாமத்தில் இந்த அம்ருத சாகர இருப்பிடத்தைச் சொன்னவுடனேயேதான் காமாட்சி நாமத்தையும் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் வர்ணிப்பதும் இந்த வாஸ ஸ்தானத்தைதான்.

மேரு மத்தியானாலும் சரி, அம்ருத ஸாகரமானாலும் சரி அதில் அவளுடைய ஊருக்கு போய்விட்டால் அங்கே ஒன்றும் வித்தியாசமில்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான பிராகாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான். அந்த தலைநகரத்துக்கு புரம் அல்லது நகரம் என்றே இரண்டிலும் பெயர்.

அது இருபத்தைந்து கோட்டைகளும் பிராகாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பிலிருந்து ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு லோகத்தால் ஒவ்வொரு கோட்டை. அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு கோட்டை. இப்படியே சூட்சுமமாகப் போய் மனத்தாலேயே ஆன கோட்டை, புத்தியாலேயே ஆன கோட்டை, அகங்காரத்தாலான கோட்டை எல்லாங்கூட உண்டு. கடைசியில் சூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை.

கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல வனங்கள், பல ஓடைகள். எல்லாம் தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் — ஆவரணம் என்றாலும் ப்ராகாரம்தான் — மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த ஓடை வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டியதான அம்பாளின் அரண்மனை வரும்.

மேரு மத்தியிலேயுள்ள புரத்தில் தேவர்களுக்கெல்லாம் மேலே ராஜதர்பார் நடத்துகிற ராணியாகவும், அம்ருத சாகர மத்தியிலே உத்தமமான சாதகர்களுக்குக் காமேச்வர பதிவ்ரதையான தாயாகவும் இருப்பாள்.

அப்படிப்பட்ட அம்பாளுடைய வாசத்தைத்தான் அம்ருத சாகரத்திலிருந்து ஆரம்பித்துக் காமேச்வரனுடைய மடி வரையில் சுருக்கமாக ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார்.

நீபம் என்ற மரங்களைக் கொண்ட உபவனத்திலே – கதம்பம் என்பதைத்தான் நீபம் என்றும் சொல்வது. கதம்ப வனத்தில் ஆனந்தமாக அம்பாள் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருப்பாள். மதுரையில் கதம்ப வனம், மணித்வீபத்தில் உபவனம். உபவனம் என்றால் சிறிய வனம்.

சிந்தாமணி க்ருஹம்

நீப உபவனம் சூழ்ந்த சிந்தாமணி க்ருஹத்திலே — உத்யான வனத்திற்குள் அம்பாளுடைய அரண்மனை. சிந்தாமணி மணிகளாலேயே நிர்மாணம் பண்ணி ஜ்வலிக்கிற அரண்மனை. நம்முடைய எண்ணங்களையெல்லாமே மணியாக்கி — மணி மணியான சிந்தனைகளாக அவளைப் பற்றியே நினைத்து அந்த மணிகளாலேயே — ஆலயம் கட்டினால் அதுவும் சிந்தாமணி க்ருஹந்தான். அதற்குள், அதாவது நம் சிந்தைக்குள், அவளே வந்து குடிகொண்டு விடுவாள்.

அப்படிப் பண்ணுவதற்கு வழியாகத்தான் வெளியிலே அவளுக்கு வாஸஸ்தானம் சொல்லி அதை த்யானிப்பது. முடிவில் அவள் நமக்குள்ளேயே வரவேண்டும். அபிராமி பட்டர் அப்படித்தான், ”உன் கோவில் அங்கே இருக்கா, இங்கே இருக்கா?” என்று பல தினுசாகக் கேட்டுவிட்டு ”என்றன் நெஞ்சகமோ?” என்று முடித்திருக்கிறார். இன்னொரு பாட்டில், “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகம் முழுவதுமாக வியாபித்திருப்பவள், அந்த உலகமெல்லாம் அடிபட்டுப் போன பின் நிற்கும் ஆத்ம சொரூபமாகவும் இருப்பவள், எப்படியோ என் இத்தனூண்டு நெஞ்சுக்குள்ளே ஸ்திரவாஸம் செய்கிறாளே!” என்று ஆச்சர்யப்படுகிறார்.

காமேச்வரனின் மடியான மெத்தை அம்பாளுக்குப் பர்யங்கம்.

அதில் உட்கார்ந்திருப்பவளை காமேச்வரி, ராஜேச்வரி என்று சிருங்கார சுந்தரியாகவோ, ராணியம்மாளாகவோ சொல்லாமல் ஞானத்தின் உச்சிக்குத் தூக்கி ”சிதாநந்த லஹரி” என்று பெயர் கொடுத்திருக்கிறார்! அதுதான் ஆசார்யாள் வாக்கின் பெருமை!

இப்படியொரு வாஸ ஸ்தானத்தில் சிதாநந்த லஹரியாக உள்ள உன்னை யாரோ சில பாக்கியசாலிகள் வழிபடுகிறார்கள் என்கிறார்.

”ஏன் ‘ஒரு சில’? தேவி பூஜை பண்ணுபவர்களாக ரொம்பப் பேர் இருக்காளே! அதுவும் இப்ப நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டு வரதே!”

பூஜை என்று ரொம்பப் பேர் பண்ணலாம். ஆனால் சும்மா ‘மொண மொண’ பண்ணிவிட்டு ஒரு கல்பூரத்தைக் காட்டி விட்டால் அது நிஜமான பூஜையாகி விடுமா?

”அப்படியானா எது நிஜமான பூஜை?”

இஷ்ட தெய்வத்தின் லோகத்துக்கு நாம் ஸாலோக்யமோக்ஷம் என்று பொதுவில் சொல்வது. நாம் எங்கேயிருந்தாலும் அதுவே அந்த லோகம் என்று ஆக்கிக் கொண்டால் இன்னும் விசேஷம் என்று தோன்றுகிறது.

வித்தியாசமின்றி கரைவது

ஸாலோக்யத்திற்கு அப்புறம் ஸாமீப்யம்: சமீபத்துக்குப் போவது. அம்ருத சாகரக் கரையிலிருந்து வனம், உபவனம், ஊர் எல்லாம் தாண்டி அரண்மனையில் அவளுடைய மஞ்சம் இருக்கிற இடத்திற்கே போய்விட்டால் ஸாமீப்யம். மானசீகமாக அந்த ஸாமீப்யத்தை சாதிக்க வேண்டும்.

ஸாலோக்ய-ஸாமீப்யங்களுக்கு அப்புறம் ஸாரூப்யம். குளவி ரூபத்தை நினைத்து நினைத்துப் புழுவும் அப்படி ஆகிறதுபோல அம்பாள் ரூபத்தை நினைத்து நினைத்து நாமும் அப்படி ஆகிவிடுவது ஸாரூப்யம். முன் சுலோகத்தில் சொன்ன ரூப வர்ணனையில் ஊறி ஊறி, அந்த ரூபத்தைப் பரமசிவ பர்யங்கத்தில் உட்கார்ந்திருப்பதாக அப்படியே தியானித்தபடி இருந்தால் ஸாரூப்ய முக்தி உண்டாகும்.

அப்புறம் முடிவாக ஸாயுஜ்ய முக்தி. ரூபத்தில் ஒரே மாதிரி இருப்பதற்கு முடிவாகத் தத்வஸாரத்தில் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. அந்தத் தத்வஸாரம் என்ன என்பதைத்தான் ‘சிதாநந்த லஹரி’ என்றார். அந்த லஹரியிலேயே வித்யாஸமில்லாமல் கரைந்து போய்விட வேண்டும். அதுதான் ஸாயுஜ்யம்.

கரைந்த பிற்பாடு பூஜையே இல்லை. அதனால் பூஜை என்று பண்ணும் நிலை இருக்கிறவரையில் மானசீகமாக அந்தப் பாவனை — கரைந்து போகிற அத்வைத பாவனை — இருக்க வேண்டுமென்று அர்த்தம்.

வாஸ்தவமாக அவளுடைய லோகத்திற்குப் போவது, ஸ்வரூப தர்சனம் பண்ணுவது, தத்துவத்தில் கரைவது எல்லாம் நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது மானசீகமாக அதையெல்லாம் பாவனையில் பண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்பாளின் ஸ்வரூபத்திலேயே சிதாநந்த ரஸத்தைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு மனசொன்றிப் பூஜை செய்வது? அதனால்தான் ”கதிசந தந்யா:” என்றார்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

43 mins ago

க்ரைம்

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்