ஆட்டிச மாணவரின் முனைவர் பட்ட ஆராய்ச்சி

By செய்திப்பிரிவு

எட்டு வயதில், கல்லூரிப் பாடங்களைக் கற்கத் தொடங்கினான் அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன். பத்து வயதில் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒட்டுமொத்தக் கணிதப் பாடத்தையும் இரண்டே வாரங்களில் தானாகவே கற்றுத் தேர்ந்தான். தற்போது 18 வயதில், இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகிறான்.

மகனைக் கண்டறிந்த தாய்

இத்தனை அசாத்தியத் திறமை வாய்ந்த ஜேக்கப் பார்னட் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இரண்டு வயதில் அவருக்கு ஆட்டிசம் கற்றல் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற குழந்தைகளைப்போல ஜேக்கப்பால் செயல்பட முடியாது என்றும், அவரைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படியும் ஜேக்கப்பின் தாயார் கிரிஸ்டைன் பார்னட்டுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், அந்தப் பள்ளிகள் ஜேக்கப்புக்கு எந்த வகையிலும் நன்மை பயக்கவில்லை. மாறாக, அவர் மேலும் தனித்தும் சோர்ந்தும் போனார். இதைக் கவனித்த அவருடைய தாய், ஜேக்கப்புக்கு வீட்டிலிருந்தபடியே பாடம் கற்பிக்க ஆரம்பித்தார். ஜேக்கபுக்கு விருப்பமான விளையாட்டுகளை கண்டறிந்து அவற்றிலும் ஈடுபடுத்தினார்.

பள்ளியை விட்டு வெளியேறியதால், கற்பதை நிறுத்தி சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்தார் ஜேக்கப். தன் வெற்றிக்கு அதுவே முதல் காரணம் என்று இப்போது கூறுகிறார். எல்லோராலும் ஒரே வழியில் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் யோசிக்க ஆரம்பித்தால்தான் கற்க முடியும் என உலக அரங்கில் நிமிர்ந்து பேசுகிறார்.

அரவணைப்பும் சுதந்திரமும்

ஒன்பது வயதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், சார்பியல் கோட்பாட்டை (Theory of relativity) விரிவாக்கும் முயற்சியைத் தொடங்கினார் ஜேக்கப். இதைக் கவனித்த அவருடைய தாய், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு அவருடைய ஆராய்ச்சி அனுப்பிவைத்தார். அதைப் படித்து வியந்த இயற்பியலாளர் ஸ்காட் டிரிமெய்ன், ஜேக்கப்பின் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றிபெற்றால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் எனப் பாராட்டினார்.

அப்போது ஜேக்கப் தானாகவே கற்கத் தொடங்கியிருந்தார். பெற்றோரின் அரவணைப்பாலும் சுதந்திரத்தாலும், தடைகள் இன்றித் தான் விரும்பியதைச் செய்யத் தொடங்கினார். பத்து வயதில், தனது பள்ளியின் மொத்தப் பாடத்திட்டத்தையும் கற்றுக்கொண்டு பர்டூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) சேர்ந்து, வானியற்பியல் (Astrophysics) கற்க ஆரம்பித்தார். அங்கேயே, தனது ஓய்வு நேரத்தில் பிற மாணவர்களுக்குக் கணிதத்தில் பயிற்சி அளித்து சம்பாதிக்கவும் செய்தார்.

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சி மேற்கொண்ட பெரிமீட்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் தியரெட்டிக்கல் பிசிக்ஸ் (Perimeter Institute of Theoretical Physics) நிறுவனத்தில் பதினைந்து வயதில் சேர்ந்து பி.எச்டி. ஆய்வு செய்துவருகிறார்.

தன்னால் சரியாகப் பேசக்கூட முடியாது என்று கூரியவர்கள் முன்னிலையில் மட்டுமல்லாமல், பிரபலங்களை அழைத்துச் சொற்பொழிவு நிகழ்த்தவைக்கும் டெட் நிறுவனத்தின் ‘டெட் எக்ஸ் டீன் டாக்’ (TEDxTeen Talk) நிகழ்ச்சியில் 2012-ல் அற்புதமாக உரையாற்றினார். அதிலும், அவருடைய தாய் அவரைப் பற்றி எழுதிய ‘தி ஸ்பார்க்: எ மதர்’ஸ் ஸ்டோரி ஆஃப் நர்ச்சரிங் ஜீனியஸ்’ (‘The Spark: A Mother's Story of Nurturing Genius’) புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார்.

அரங்கில் கூடியிருந்த 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் யூ டியூபில் நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவருடைய அசாத்தியமான பேச்சால் தனக்கு மூளை வளர்ச்சி சரியாக இருக்காது என்று கூறிய மருத்துவர்கள், வல்லுநர்களைவிட, தான் புத்திசாலி என்பதை நிரூபித்தார். சரியான பயிற்சியும் அன்பும் கிடைத்தால், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் வெற்றியாளர் ஆகலாம் என்பதற்கு ஜேக்கப் சிறந்த உதாரணம்.

ஜேகப்பின் உரைவீச்சைக் காண: >goo.gl/TNZWd

- க.ஸ்வேதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்