வேலையைக் காதலி!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

பயோ டேட்டா என்பது பழைய சொல். கரிக்குலம் விடே (curriculum vitae) எனும் சி.வி. (cv) தான் சரியான பதம். உங்கள் வாழ்க்கை வரலாறு அல்ல இது. உங்கள் கல்வி/ தொழில் பின்னணியின் சுருக்கம்தான் சி.வி.

நல்ல சி.வி. என்பது உங்களுக்காக நிறுவனத்தின் கதவுகளைத் திறக்க வைக்கும் மந்திரச் சாவி.

உங்களை அடுத்து என்ன செய்ய என்று முடிவு செய்ய வைக்க உதவுவது உங்கள் சி.வி. தான். முதல் கட்டத்திலேயே நிராகரிப்பா அல்லது எழுத்துத் தேர்வுக்கு அல்லது நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதா என்பதை முடிவு செய்வது இதுதான்.

“இதுதான் நான்!” என்று பளிச்சென்று உங்களைச் சரியான முறையில் அடையாளம் காட்டுவது உங்கள் சி.வி.தான்.

இதைத் திறமையாக வடிவமைத்துக்கொள்ளுதல் வேலை தேடலில் மிக முக்கியப் பணி.

நம் மாணவர்கள் பலருக்கு இது சிம்ம சொப்பனம். “என்னத்தைடா எழுதறது? ஏதேனும் ஃபார்மட் இருந்தா குடு. காப்பி அடிக்கலாம்” என்ற அளவில்தான் உள்ளது பிரயத்தனம்.

பலருக்கு சி.வி. என்றால் வெறும் கன்ட்ரோல் சி & கன்ட்ரோல் வி (control c & control v) செயல்பாடுதான். காப்பி அடிப்பதைக்கூட அடி பிறழாமல் செய்வார்கள். ஆனால் மண்டபத்தில் எழுதிக் கொடுத்த பாட்டை எடுத்து வந்து பரிசு வாங்குவது சி.வி. விஷயத்தில் சிக்கல்தான்.

சி.வி.க்கான குறிக்கோள் என்ற முதல் பகுதியில் ஜிலேபி போல வளைத்து வளைத்து சம்பந்தமில்லாமல் ஒரு நீண்ட ஆங்கில வாக்கியம் வந்தாலே சுட்ட கதை என்று தெரிந்து விடும். அங்கேயே உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டுவிடும்.

என்ன வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாலே போதும். அதுதான் சி.வி.யின் குறிக்கோள். வழ வழா கதையெல்லாம் வேண்டாம்.

சிலர் குறிப்பிடுவார்கள்: “For any suitable job” என்று. என்ன வேலை கொடுத்தாலும் சரி என்கிற எண்ணத்தில். இப்படி வருபவை பல நேரங்களில் குப்பைத் தொட்டிக்குள் செல்வது தான் பரிதாபம்.

பிரச்சினை இதுதான்: வகைப்படுத்த முடியாத சி.வி.க்கள் நேரில், அஞ்சலில், இ- மெயிலில் எப்படி அனுப்பினாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதனால் எந்த வேலைக்கு அல்லது எந்தப் பிரிவிற்கு என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்.

கண்ணை உறுத்தும் நிறங்களோ, வடிவமைப்புகளோ தேவையில்லை. தேவையான தகவல்களைப் படிக்கும் வண்ணம் கொடுத்தால் போதும். சில ப்ரஃபஷனல் சி.வி.க்கள் எப்படி உள்ளன என்று வலை தளங்களில் தேடிப் பார்த்தல் தவறில்லை. ஆனால் வார்த்தைகள் அனைத்தும் உங்களுடையதாக இருக்க வேண்டும்.

சில வருடங்கள் முன், என்னிடம் வேலை கேட்டு வந்த பெண்ணிடம், “கோர்ஸ் முடித்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பணி அனுபவம் இல்லாதது கேள்வியை எழுப்புமே?” என்றதற்கு வெகுளித்தனமாகப் பதில் சொன்னாள்: “ 2 வருசம் வேலை செஞ்ச மாதிரி ஃபேக் செர்டிபிகேட் வாங்கலாம்னு மாமா சொல்லிச்சு!”

சி.வி. அழகாய் இருப்பதை விட உண்மையாக இருக்க வேண்டும். இல்லாததை, செய்யாததை எழுதாதீர்கள். நேர்முகத் தேர்வில் தவறவிட்டால்கூட வேலைக்குச் சேர்ந்த பிறகு குட்டு வெளிப்படலாம். இன்று அவசர கதிக்கு ஆட்களை அள்ளிப் போட்டுக் கொள்ளும் ஐ.டி கம்பனிகள் கூட ‘Pre Employment Verification’ செய்கிறார்கள். சில நிறுவனங்கள் ஆற அமர ஆறு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்வதற்குள் செய்வார்கள். உங்கள் தகவல் பொய் என்றால் பிறகு அந்த நிறுவனத்தில் நுழையும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்து விடுவீர்கள். புலன் விசாரிக்கும் நிறுவனமும் உங்கள் தகவலைச் சேமித்து வைத்து அவர்கள் கிளையண்ட் கம்பனிகள் அனைத்திலும் போகாமல் பார்த்துக் கொள்ளும்.

பணி அனுபவம் இல்லாத மாணவர்களிடம் சி.வி.யில் பார்ப்பது கல்வி மற்றும் குடும்ப பின்னணிதான். படிக்கும்போது ஏதாவது ப்ராஜக்ட் அனுபவம் இருந்தால் கண்டிப்பாகக் குறிப்பிடுங்கள். மற்றபடி எளிமையான சுருக்கமான இரண்டு பக்கங்கள் போதும்.

பணி அனுபவம் மிக்கவர்கள் நிறைய எழுத விஷயங்கள் இருக்கலாம். இருந்தும் சுருக்கமான சி.வி. போதும். சுருக்கமான, கோவையான, நம்பத்தகுந்த, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உங்களைப் பற்றி எழுதுதல் ஒரு கலை. இன்று சி.வி. எழுதித் தரவே பல நிறுவனங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

சற்று மிகைப்படுத்தி எழுத எல்லாருக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களைப் புகழோ புகழ் என்று நீங்களே எழுதாதீர்கள். அதே போல அந்த கம்பனியில் எல்லாம் நான் தான் என்று எம்.டி. லெவெலுக்கு எழுதிவிட்டு, அங்கு சீனியர் ஆஃபீஸராக இருந்தேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த வேலையில் உங்கள் பங்கு என்ன என்று மட்டும் எழுதுங்கள். நேரில் அதன் முக்கியத்தைக் குறிப்பறிந்து சொல்லலாம்.

சம்பளம் பற்றிக் குறிப்பிட்டால் சான்று அவசியம். பொதுவாக எல்லாவற்றிற்கும் சான்று இருத்தல் நல்லது. ஆனால் அனைத்தையும் சி.வி.யுடன் முதலிலேயே இணைத்து அனுப்பத் தேவையில்லை- அவர்கள் குறிப்பிட்டுக் கேட்டிருந்தாலொழிய.

விளையாட்டில் சாதனைகள், சமூக நலப் பணிகளில் ஆர்வங்கள், இலக்கியப் பங்களிப்பு என்றெல்லாம் இருந்தால் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

உங்கள் சி.வி. உங்களைப் பார்க்கத் தூண்ட வேண்டும்.

நல்ல சி.வி.யும் ஒரு நல்ல உடைபோலத்தான். நல்ல உடைக்கு நீச்சல் உடையை உதாரணம் காட்டுவார்கள். அது சி.வி.க்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் கவர் பண்ணணும். கவர்ச்சியாகவும் இருக்கணும்!

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்