திரை என்னும் துறை: ஹாலிவுட் கிராபிக்ஸுக்கும் தேவை கோலிவுட்!

By கா.இசக்கி முத்து

ரு படத்தின் கிராபிக்ஸ் பணியில் மிக முக்கியமானது கம்போசிட்டிங். ஹாலிவுட் படங்களில்கூட, தமிழர்கள் சிலர் கம்பாசிட்டிங் பணியைப் புரிந்துவருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மொஹிந்தர். ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘ரெமோ’, ‘டிமான்ட்டி காலனி’, ‘புலி’, ‘பாகுபலி’ ஆகிய தமிழ்ப் படங்களுக்கு மட்டுமன்றி ‘ஹாரி பாட்டர் 6’, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 2’, ‘அயர்ன் மேன் 2’, ‘மிஷன் இம்பாஸிபில் 4’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கும் கம்பாசிட்டிங்கில் பணிபுரிந்திருந்துள்ள மொஹிந்தரிடம் அந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினோம்.

கம்பாசிட்டிங் என்பது என்ன?

திரைப்படத்துக்கான கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும்போது நிறைய அடுக்குகளில் வேலை செய்வோம். ஒரே காட்சியில் 2 அல்லது 3 காட்சிகளை உள்ளடக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, டபுள் ரோலில் ஒருவர் நடித்தால் அதை 2 முறை ஷூட் செய்திருப்பார்கள். இப்படிப் பல விஷயங்களையும் ஒன்றிணைக்கும் இடம்தான் கம்பாசிட்டிங். அனைத்தையும் ஒன்றாக்கிப் பார்க்கும்போது, ஒரேநேரத்தில் நடந்தது போலப் படத்தில் தெரிய வேண்டும். அதுதான் சவால். அப்படிப் பார்த்தால் கிராபிக்ஸ் பணிகளில் இறுதி நிலைதான் கம்பாசிட்டிங்.

ILM நிறுவனம் தொடங்கிப் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறீர்கள். இப்போது கம்பாசிட்டிங் துறை எப்படி இருக்கிறது?

நிறைய மாற்றம் வந்திருக்கிறது. முன்பெல்லாம், எதற்கு கிராபிக்ஸ் , ஷூட் செய்துவிடலாம் என்று நினைப்பார்கள். இப்போது அப்படியல்ல. இயக்குநர் ஷங்கர், ராஜமெளலி படங்கள் வெற்றியடைந்தவுடன் பலரும் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கம்பாசிட்டிங்கில் நிறைய வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறது. அது மட்டுமன்றி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாகக் கிளைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் பாதிக்கு மேல் இந்தியாவில்தான் நடக்கின்றன.

நீங்கள் கம்பாசிட்டிங் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

எனக்கு ஓவியம் தீட்டுவதில் பேரார்வமும் ஆற்றலும் இருந்ததால் முதலில் 3டி-யில் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால், நான் பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் 3டி-ஐ வெறும் அனிமேஷனுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். பல விஷயங்களை 2டி-யிலே செய்து முடித்துவிடுவார்கள். அதனால், 2டி-யில் பணிபுரியத் தொடங்கினேன்.

MOHINDER படம்: எல். சீனிவாசன் கம்பாசிட்டிங் துறைக்குள் நுழைய என்ன படித்திருக்க வேண்டும்?

விஷுவல் எஃபெக்ட்ஸ் படித்தால் அதிலேயே அனைத்தையும் சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். கம்பாசிட்டிங்கில் 2டி, 3டி என இரண்டு பிரிவுகள் உள்ளன. அவற்றில் 2டி-யில் நான் வேலைபார்க்கிறேன். பல கல்வி நிறுவனங்களில் தற்போது விஷுவல் எஃபெக்ட்ஸ் கற்றுத் தரப்படுகிறது. அங்கு மென்பொருள் மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள். பணிபுரியும்போது மட்டுமே உங்களுடைய செயல்திறன் மூலம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் படித்தால் ஹாலிவுட்டைச் சேர்ந்த பெரிய திரைத் துறை நிறுவனங்களே மாணவர்களுக்கு நேரடியாக வந்து பாடம் எடுக்கும். இதன் மூலம் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் பணிச் சூழலுக்குத் தயார்படுத்தப்படுவார்கள். ஆனால், இங்கு திரைத்துறையும் அது தொடர்பான படிப்பு சார்ந்த நிறுவனங்களும் தொடர்பின்றிச் செயல்படுகின்றன.

இணையதளங்கள் மூலமாகவே கம்பாசிட்டிங் கற்க முடியுமா?

சாத்தியம்தான், ஆனால், வெறுமனே இணையத்தில் படித்து அனைத்து சூட்சுமங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. அதை மென்பொருளில் செயல்படுத்திப் பார்ப்பதன் மூலமே முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

கம்பாசிட்டிங் படித்துவிட்டு, திரைத்துறைக்குள் நுழைவது எப்படி?

முழுமையாகப் படித்துவிட்டு, ‘demo reel’ தயார் செய்ய வேண்டும். தற்போது நிறைய நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு demo reel- உடன் உங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ரெஸ்யுமேவையும் அனுப்பினால் போதுமானது. Demo reel-ஐப் பார்த்துவிட்டு அழைப்பார்கள்.

முதலில் சம்பளம் பெரிதாக இருக்காது. மளமளவென உங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டால், போகப்போக நன்றாகச் சம்பாதிக்கலாம். இன்னொரு விஷயம், எடுத்தவுடனே கம்பாசிட்டராகப் பணி அமர்த்த மாட்டார்கள். ‘ரோட்டோ ஆர்டிஸ்ட்’ ஆகப் பணியமர்த்துவார்கள். அதில் உங்களுடைய செயல்திறன், வித்தியாசமான அணுகுமுறை உள்ளிட்டவற்றின் மூலம் கம்பாசிட்டராக உயரலாம்.

இத்துறையில் சம்பள நிலவரம் என்ன?

ஹாலிவுட் நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டதால் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். உங்களுடைய திறமையை வெளிப்படுத்த வெளிப்படுத்த சம்பளமும் அதிகரிக்கும். பெரிய படங்களுக்குப் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்....

முன்பு ‘Illusion’, ‘Combustion’ ஆகிய மென்பொருள்கள் பிரபலமாக இருந்தன. அதன் பிறகு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ‘Shake’ மென்பொருள் வந்தது. தற்போது ‘Nuke’-தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஹாலிவுட்டில் ‘Nuke’ அல்லது அவர்களே தங்களுடைய படத்துக்கு ஏற்றாற்போல் மென்பொருளை உருவாக்கிக்கொள்வார்கள்.

தங்களுடைய படத்துக்குத் தேவையான மென்பொருளைக்கூடத் தாங்களே வடிவமைக்கும் அளவுக்கு ஹாலிவுட் இருக்கும்போது, ஏன் இங்கு அத்தகைய முன்னெடுப்புகள் இல்லை?

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை பெரிய கிராபிக்ஸ் நிறுவனங்களில் புதிதாக மென்பொருள் உருவாக்க பிரத்யேகமாக ஒரு அணி இருக்கும். அவர்களுடைய வேலையே ஏதாவது புதிது புதிதாக உருவாக்குவது மட்டுமே. இதுவரை தங்களுடைய படங்களில் இடம்பெறாத ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால், உடனே புதிதாக மென்பொருளை உருவாக்குவார்கள். நம்மூரில் அப்படிக் கிடையாது.

அவர்கள் கண்டுபிடிப்பதை நாம் பயன்படுத்தும் நிலைதான் நீடிக்கிறது. ஏனென்றால், இங்கு பட்ஜெட்டும் குறைவு, அந்த அளவுக்குப் பெரிதாக கிராபிக்ஸில் யாரும் எதிர்பார்ப்பதும் கிடையாது. மக்களுக்கு ஓரளவுக்கு நம்பகத்தன்மை இருந்தால்போதும் என்று நினைப்பார்கள். தனியாக மென்பொருள் உருவாக்குவது எல்லாம் இப்போதைக்கு கோலிவுட்டில் சாத்தியம் இல்லை.

இணையத்தில் கம்பாசிட்டிங் கற்க

https://www.lynda.com/Visual-Effects-training-tutorials/1470-0.html

https://www.udemy.com/topic/vfx-visual-effects/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

சினிமா

21 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்