தாமஸ் கோப்பை பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது இந்திய அணி

By செய்திப்பிரிவு

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய ஆடவர் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பலமான டென்மார்க்குடன் மோதியது. ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 13-21, 13-21 என்ற நேர் செட்டில் விக்டர் அக்சல் செனிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது கிம் அஸ்ட்ரூப், மத்தியாஸ் கிறிஸ்டியன் சென் இணையை எதிர்த்து விளையாடியது.

இதில் சாய்ராஜ், ஷிராக் ஜோடி 21-18, 21-23, 22-20 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை தோற்கடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. 4-வது ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், விஷ்ணுவர்தன் ஜோடி 14-21, 13-21 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென், ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியிடம் வீழ்ந்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலையை எட்டியது.

கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனோய் 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரஸ்மஸ் கெம்கேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரனோய்க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு களத்தில் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் வலியுடன் விளையாடிய பிரனோய் அற்புதமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது. தாமஸ் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 73 வருடகாலத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தற்போதுதான் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்