ஜிம்பாப்வே போராடி தோல்வி: டி20 தொடரை வென்றது இந்தியா

By இரா.முத்துக்குமார்

ஹராரேயில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி தழுவியது. இதன் மூலம் டி20 தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது.

இதன் மூலம் ஒருநாள், டி20 தொடர்களை இளம் அணியுடன் சென்ற தோனி தலைமையில் இந்தியா வென்றுள்ளது.

முதலில் இந்தியாவை பேட் செய்ய அனுப்பியது ஜிம்பாப்வே. இந்திய அணியை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் என்று அருமையாக மட்டுப்படுத்திய ஜிம்பாப்வே இலக்கைத் துரத்திய போது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் என்று நெருக்கமாக வந்து போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் சரண் வீசிய முதல் பந்தை மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸை அடித்தார் மரூமா. அடுத்த பந்து வைடு வகையில் 1 ரன் வந்தது. அடுத்த பந்து யார்க்கர் முயற்சியில் அதிக உயரம் வந்த புல்டாஸாக மாற பந்து கவர் திசையில் மரூமா பவுண்டரி விளாசினார், இதோடு இது நோ-பால் எனவும் அறிவிக்கப்பட்டது. 2-வது பந்தை மீண்டும் வீசிய சரண் வைடு யார்க்கராக வீச ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த பந்து வைடாகியிருக்க வேண்டியது, ஆனால் அது வைடு அல்ல ரன் இல்லை. 4-வது பந்தில் மரூமா 1 ரன் எடுத்து அதிரடி வீரர் சிகும்பராவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார்.

சிகும்பரா 5-வது பந்தை மேலேறி வந்து சுழற்ற ஷார்ட் தேர்ட் மேனுக்கு வாய்ப்பில்லாமல் தேர்ட்மேனில் பவுண்டரி ஆக, கடைசி பந்து 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. ஆனால் சரண் கடைசி பந்தை தாழ்வான புல்டாசாக வீச மட்டையின் அடி விளிம்பில் பட்டு கவர் திசையில் அருகிலேயே சாஹலிடம் கேட்ச் ஆனது அவுட் ஆனார் சிகும்பரா, இந்தியா 3 ரன்களில் வெற்றி பெற்றது. விரட்டலில் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்ட ஜிம்பாப்வே நடுவில் சொதப்பியது, இறுதியில் அடித்து ஆடத் தொடங்கினாலும் விக்கெட்டுகள் விழுந்ததால் நெருங்க மட்டுமே முடிந்தது வெற்றி பெற முடியவில்லை, தொடரை வெல்ல கிடைத்த அருமையான வாய்ப்பு அந்த அணிக்கு கிட்டி வந்து பலிக்காமல் போனது.

இந்திய அணியில் தவல் குல்கர்னி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சரண் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பும்ரா 4 ஓவர்களில் 23 ரன்கள் ஆனால் விக்கெட் இல்லை, அக்சர் படேல் 18 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் சற்றே சாத்து வாங்கிய சாஹல் 4 ஓவர்களில் 32 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்திய இன்னிங்ஸ்:

சடாரா முதல் ஓவரை அருமையாக வீச மெய்டன் ஓவருடன் ஜிம்பாப்வே தொடங்கியது. 2-வது ஓவரை ஜிம்பாப்வேயின் இன்றைய சிறந்த வீச்சாளர் திரிபானோ வீச மந்தீப் சிங் 3 ரன்களையும், ராகுல் 1 ரன்னையும் எடுத்தனர்.

அடுத்த ஓவரை சடாரா வீசும் போது ராகுல் பொங்கி எழுந்து விட்டார். கவருக்குத் தள்ளி ராகுல் தூக்கி அடித்து பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். அடுத்த பந்தை தேவையில்லாமல் ஸ்லோவாக வீச லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் ராகுல், அடுத்த பந்து மோசமான வெளியே போடப்பட்ட பந்தை கவர் திசையில் பவுண்டரி விளாச ராகுல் அந்த ஓவரில் 15 ரன்களை விளாச மந்தீப் சிங் 1 ரன் எடுக்க 3-வது ஓவர் முடிவில் 20/0.

அடுத்த ஓவரில் திரிபானோ மரூமாவின் நல்ல கேட்சுக்கு மந்தீப் சிங்கை பெவிலியன் அனுப்பினார். 5-வது ஓவரில் மட்சீவாவை ராகுல் ஒரு பவுண்டரி அடித்து அதே ஓவரில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். ராகுல் 20 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்த பந்தே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாண்டே வந்த பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார், பவுலர் முனையில் நேரடியாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். 5-வது ஓவர் முடிவில் இந்தியா 27/3 என்று தடுமாறியது.

ஜாதவ் அரைசதம்:

அதன் பிறகு ஜாதவ், ராயுடு நிலை நிறுத்தினர். 9-வது ஓவரில் ஜாதவ் தேர்ட் மேனில் ஒரு பவுண்டரியையும் ஃபைன் லெக்கில் அதிர்ஷ்ட பவுண்டரியும் அடித்தார், இது கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் அதிர்ஷ்டம் ஜாதவ் பக்கம் இருந்தது. ராயுடு நிதானமாகவே ஆட முடிந்தது அவர் 25 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து கிரீமர் பந்தில் லாங் ஆனில் சிகும்பராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தோனி இறங்கி சரியாக ஆடவில்லை 13 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் திரிபானோ பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். பைல்கல் பறந்ததில் ஒரு பைல் தோனியின் ஹெல்மெட்டையும் மீறி உள்ளே புகுந்து வலது கண்ணருகே பதம் பார்த்தது. ஒரு நிமிடம் தடுமாறி பிறகு நிலைபெற்று பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் சதாரா 18-வது ஓவரை வீச வர ஜாதவ் முதல் பந்தை மேலேறி வந்து பவர்ஃபுல் ஷாட் ஒன்றை தூக்கி அடிக்க லாங் ஆனில் சிக்ஸ். பிறகு பாயிண்டில் ஒரு அழகான பவுண்டரியையும், இன்சைடு எட்ஜில் கீப்பர் பின்னால் ஒரு பவுண்டரியையும் அடித்து கேதர் ஜாதவ் 38 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அருமையான அரைசதம் கடந்தார். 19-வது ஓவரில் திரிபானோவை மேலும் ஒரு பவுண்டரியை ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக்கில் அடித்து விட்டு அடுத்த பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து 42 பந்துகளில் 58 ரன்களுக்கு அவுட் ஆனார். நெருக்கடியில் ஆடப்பட்ட நல்ல இன்னிங்ஸ் ஆகும் இது. வெற்றி இன்னிங்ஸ் என்றும் கூறலாம்.

கடைசி ஓவரை மட்சீவா வீச அக்சர் படேல் ஒரு சிக்சருடன் 16 ரன்களை அந்த ஓவரில் அடித்து 11 பந்துகளில் 20 ரன்கள் என்ற பயனுள்ள பங்களிப்பைச் செய்ய இந்தியா கடைசி 5 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் பக்கம் அடித்து ஸ்கோரை 138 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸ்:

ஜிம்பாப்வே இன்னிங்ஸ் தொடங்கிய போது 2.3 ஓவர்களில் 17 ரன்கள் வந்தது, மசாகாட்சா 2 பவுண்டரிகளை அடிக்க, சிபாபா ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 5 ரன்களில் சிபாபா சாஹலிடம் கேட்ச் கொடுத்து சரணிடம் அவுட் ஆனார். வுசி சிபாந்தா களமிறங்க ஆட்டம் சூடுபிடித்தது, இவரும் மசாகாட்சாவும் இணைந்து 6.1 ஒவர்களில் 40 ரன்களைச் சேர்த்தனர். இதில் பெரும்பாலும் அடித்தது சிபந்தாதான். மசாகாட்சா 15 ரன்களில் படேல் பந்தில் எல்.பி.ஆனார்.

இவர் ஆட்டமிழந்த உடனேயே 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் விளாசி அபாய வீரர் சிபந்தா குல்கர்னி பந்தில் எல்.பி.ஆனார். மூர் என்பவர் களமிறங்க சாஹல் அவருக்கு சிலபல ஷார்ட் பிட்ச்களை வழங்க சாஹலை மட்டும் அவர் 3 சிக்சர்களை அடித்து 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சாஹலிடமே அவுட் ஆனார். இது மிக முக்கியமான தருணத்தில் கிடைத்த விக்கெட்டாக அமைந்தது. காரணம் 13.4 ஓவர்களில் ஜிம்பாப்வே 86/3 என்று கொஞ்சம் சவால் அளித்தது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் இந்தியா கிடுக்கிப் பிடி போட சிகும்பரா, வாலரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதனால் 18 ரன்களே வந்தது. அப்போது 10 ரன்களில் வாலர் குல்கர்னியிடம் ஆட்டமிழந்தார். 17 பந்துகளில் 34 ரன்கள் என்ற சமன்பாடு கடைசி ஓவரில் 21 என்று ஆனது, அந்த ஓவரில் சரண் கலவையாக மோசமாகவும் சிறப்பாகவும் வீசினார் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை எனும்போது சிகும்பரா ஆட்டமிழக்க ஜிம்பாப்வே தொடரை இழந்தது.

சிகும்பரா 16 ரன்களை 16 பந்துகளில் எடுக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டார், மரூமா பும்ரா, சரண் ஆகியோரை அடித்த அபாரமான சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் தேங்கினார். ஜிம்பாப்வே 135/6 என்று முடிந்த்து, ஆட்ட நாயகனாக் கேதர் ஜாதவ்வும், தொடர் நாயகனாக சரணும் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

33 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

53 mins ago

மேலும்