மத யானை... கல்பாத்தி சாமி அண்ணா... ஐயப்ப அதிசயம்! 

By வி. ராம்ஜி

சபரிமலை என்றதும் நம் நினைவுக்கு வருவது பதினெட்டுப் படிகள்தான். அவை சாதாரணப் படிகள் அல்ல. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் உண்டுபண்ணப்பட்டது. அந்த 18 படிகளை சிருஷ்டித்தவர் பரசுராமர். அகத்திய மாமுனிவரை முன்னிலையாக வைத்துக் கொண்டு, பந்தள ராஜாவைக் கொண்டு கட்டப்பட்ட படிகள் அவை.

உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகத் திருமேனியில், இந்தப் பதினெட்டுப் படிகளின் வழியே ஏறிச் சென்றுதான் அந்த விக்கிரகத் திருமேனியுடன் ஐயப்ப சுவாமி ஐக்கியமானார் என்கிறது புராணம்.

அவை வெறும் படிகள் அல்ல. பதினெட்டு தேவதைகள். ஐயப்பன் கோயிலில், கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி ஆகியோர் காவல்தெய்வங்களாக இன்றைக்கும் காத்துவருகின்றனர் என்கிறது சபரிமலை புராணம்.

பக்தியே இல்லாமல், நியமங்களைக் கடைப்பிடிக்காமல், அனுஷ்டானங்களை சரிவரச் செய்யாமல், இந்த பதினெட்டுப் படிகள் மீது, பதினெட்டு தேவதைகளைக் கடக்க முற்பட்டால், அந்தக் காவல்தெய்வங்கள் நம்மைக் கவனித்துவிடும்; கண்காணித்துக் கொள்ளும்; கணக்கெடுத்து வைத்துக் கொள்ளும். மறந்துவிட வேண்டாம் என்கிறார் ஐயப்ப உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமண்யம்.

இன்னொன்றும் உண்டு. புலன்கள் ஐந்து, பொறி ஐந்து, மனமானது ஒன்று, புத்தி ஒன்று, ஆங்காரம் ஒன்று என மொத்தம் 18. இந்த பதினெட்டையும் விட்டொழித்துவிட்டு, நினைப்பை மறந்துவிட்டு, பதினெட்டுப் படிகளேறினால்தான் ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்றும் விவரிக்கிறார்.

கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவை இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் ஐயப்ப பக்தர்கள்.
பக்தியும் நம்பிக்கையும் அசாத்தியமானது. சற்றும் அசைக்க முடியாதது. தான் நினைத்த மாத்திரத்தில் பகவானை மனத்துள் கொண்டு வந்து நிறுத்தி ஐயப்பனுடன் உரையாடுவார் என்று சாமி அண்ணாவைச் சிலாகிக்கிறார்கள் அன்பர்கள்.

திருவிளக்கின் சுடரொளியில் ஐயப்பனுடன் இவர் பேசுவதை பலரும் கண்டிருக்கிறார்கள். இவர் பக்திக்குக் கட்டுப்பட்ட ஐயனும் குழைந்து ஓடி வந்தான் என்பதும் நிதர்சனம்.

ஒரு முறை... சபரிமலை யாத்திரையின் நடுவே பெரிய பாதையில் வந்து கொண்டிருக்கும் போது யானை ஒன்று, மதம் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே குழப்பம். பீதி. அச்சம். கலக்கம். நடுங்கிப் பதைபதைத்தார்கள் சாமிமார்கள்.

தொடர்ந்து செல்ல முடியவில்லை. யானையைக் கடந்து செல்லும் துணிவு யாருக்குத்தான் இருக்கும். நிற்பது சரியா, நடப்பது உத்தமமா, ஓடினால் யானை துரத்துமா என்றெல்லாம் அறிய முடியாது அல்லவா. அந்த யானையும் வழியை மறித்துக் கொண்டு மலைபோல குறுக்கே நின்று கொண்டிருந்தது.

அங்கிருந்து கல்லையும் மண்ணையும் எல்லோர் மேலும் தூக்கி எறிந்து கொண்டிருந்தது. எல்லோரும் செய்வதறியாமல் திகைத்து, பின்னோக்கி ஓடத் துவங்கினார்கள்.

திடீரென முன்னோக்கி வந்தார் சாமி அண்ணா. தன் கையில் வைத்திருக்கும் முத்திரைப் பிரம்பை உயர்த்தினார். பக்தர்களிடம் பேச்சுக் கொடுத்தபடியே யானையையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

“சபரிமலைக்குப் புறப்பட்ட பின்னர், இருமுடியுடன்... பின்னே செல்லக்கூடாது. யாரும் பின் வாங்காதீர்கள். என் ஐயப்பன் நம்முடன் இருப்பது சத்தியம். எல்லோரும் தைரியமாக முன்னேறுங்கள். நான் இங்கே நிற்கும் வரை இந்த கஜராஜன் உங்களை ஒன்றும் செய்யமாட்டான். இந்த யானை ஒன்றும் செய்யாது” என்று கர்ஜித்தார்.

சாமி அண்ணாவின் பேச்சு, ஓரளவு தெம்பைக் கொடுத்தது. தைரியம் தந்தது. கலக்கத்தில் இருந்து கொஞ்சம் மீண்டார்கள். அவர் சொல்லின் மேல் நம்பிக்கை வைத்து யானையைக் கடந்தார்கள்.

சாமி அண்ணா, யானையைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார். ஒவ்வொருவராக யானையைக் கடந்து போகச் சொன்னார். அப்படியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடையாகவும் இல்லாமல், ஓட்டமாகவும் இல்லாமல் வேகமெடுத்துக் கடந்தார்கள். கடைசி பக்தரும் கடந்து போன பிறகே ஐயர் நகர்ந்தார். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அந்த யானை, சிலை போல நின்றுகொண்டே இருந்தது. தும்பிக்கை கூட அசையவில்லை. சிறிது நேரம் கழித்து, அந்த யானை, அமைதியாக திரும்பிச் சென்றது.

ஐயப்பனை நினைத்து உருகி அவனிலேயே ஆழ்ந்திருந்த காரணத்தால் சாமி அண்ணாவிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் எல்லாம் சத்திய வாக்காகவே, சபரிகிரிவாசனின் வார்த்தையாகவே விளங்கியது என்று அந்தக் கால ஐயப்ப பக்தர்களும் குருசாமிகளும் சிலிர்த்து விவரித்திருக்கிறார்கள்.

.பிறகு, இந்தச் சம்பவம் மலையிலும் பக்தர்களிடத்திலும் பரவியது. பக்தர்கள், இன்னும் இன்னுமாக ஐயப்ப சுவாமி மீது பக்தி கொள்ள ஆரம்பித்தார்கள். சாமி அண்ணாவை இன்னும் மரியாதையுடன் அணுகினார்கள்.

என்ன மனக்கவலையோடு யார் அவரிடம் சென்றாலும் அவற்றை நீக்கி ஆறுதலும், கவலை நீங்குவதற்கான வழியும் கிடைத்தது. அவர் அருளால், ஆசியால் நல்வாழ்வு பெற்ற பலநூறு பக்தர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

அளவற்ற பக்தி என்கிறோம். பக்திக்கேது அளவு? அருட்கடல் என்கிறோம். கடலை விட பிரமாண்டமானது அல்லவா ஐயப்ப சுவாமியின் பேரருள்!

பக்தியும் நம்பிக்கையும் இல்லையெனில், எறும்பு கூட யானைதான். உண்மையான, ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் இருந்துவிட்டால், யானை கூட எறும்புதான் என்கிறார் அரவிந்த் சுப்ரமண்யம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

கருத்துப் பேழை

10 mins ago

தமிழகம்

46 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்