Published : 05 May 2024 06:43 AM
Last Updated : 05 May 2024 06:43 AM

ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: உண்மையை வெளிக்கொணர தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப்பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப்பணியாற்றி வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங் கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப் பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.கடந்த ஏப்.30-ம் தேதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்க பாலு உள்ளிட்டோர் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம். ஜெயக் குமார் தனசிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக தலைவர் ராமதாஸ்: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப் பட்டிருப்பதையே காட்டுகிறது. ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

தமாகா தலைவர் ஜிகே வாசன்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் மிகவும் வருத்தத்துக்குரியது. உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய செய்தி. அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசியக்கட்சியின் மாவட்டத் தலைவர் என்ற உயர் பொறுப்பில் இருப்பவருக்கே இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, தமிழக அரசு உயர்மட்ட விசா ரணை நடத்தி, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து, உரிய நடவடி க்கையை மேற்கொள்ள வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஜெயக்குமார் தனசிங்கை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் அலட்சியப் போக்கே, அவர் சடலமாக மீட்கப்பட்ட தற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவு குறித்து காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி: கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x