தத்துவ விசாரம்: நசிகேதன் ஆகலாம்

By ரஞ்சனி பாசு

பி

றப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு, நம் வாழ்வில் நடந்துவிட்டது. மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது. மரணம் என்றால் என்ன? அப்போது மனிதனுக்கு என்ன நேர்கிறது? அதன் பின் அவன் என்ன ஆகிறான்? இதுபோன்ற கேள்விகள் எல்லா காலகட்டத்திலும் எழுந்து வந்திருக்கின்றன. விடைகளுக்கான தேடலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது.

சிறுவனின் கேள்வி

வேத காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடைய புதல்வன் நசிகேதன். வாஜசிரவஸ் இவ்வுலகையே ஆளும் பேரரசன் ஆக விருப்பம் கொண்டார். அந்தப் பலனைத் தரும் விசுவஜித் என்ற யாகத்தைச் செய்தார். விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது நிறைவேற வேண்டுமென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான் அனைத்தும் உரிமையாக இருக்க முடியும்.

நிபந்தனைப்படி வாஜசிரவஸ் அனைத்தையும் தானம் செய்தார். ஆனால், தனக்கு உதவாதவற்றைத் தானம் என்ற பெயரில் கொடுத்தார். உதாரணமாக அந்நாட்களில் பசுக்களின் எண்ணிக்கையே ஒருவரின் செல்வச்செழிப்பை நிர்ணயிக்கும். எனவே, பசுவைத் தானம் செய்வது சிறந்தது. இவரோ, மரணத்துக்காகக் காத்திருக்கும் கிழப் பசுக்களைத் தானமாக அளித்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் இரட்டைத் தவறுகள் செய்தார்.

அவருடைய மகன் நசிகேதன் அனைத்தையும் கவனித்தான். தந்தையிடம் சென்று, “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். சிறந்தவற்றைத் தானம் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக மூன்று முறை கேட்டான். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

எமலோகப் பயணம்

தந்தை கோபத்தில் சொல்லி இருந்தாலும், அவர் சொன்னபடி எமனிடம் போக வேண்டும் என்று நசிகேதன் தீர்மானித்தான். இம்முடிவைத் தந்தையிடம் கூறினான். அவர் தான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை எண்ணி வருத்தமுற்றார். அவருக்கு ஆறுதல் கூறிய நசிகேதன், “வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடி கொடிகளைப் போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே, நான் எமலோகம் செல்வதைப் பற்றிக் கலங்க வேண்டாம்” என்றான்.

நசிகேதன் எமலோகத்தை அடைந்தபோது, எமன் அங்கு இல்லை. எனவே, எமனின் மாளிகையின் முன் மூன்று நாட்கள் காத்திருந்தான். எமன் வந்ததும் மந்திரிகள் மூலம் செய்தி அறிந்தான். நசிகேதனை நோக்கி, “விருந்தினரான நீ மூன்று நாட்கள் உணவின்றித் தங்க நேர்ந்தது நான் செய்த குற்றம். அப்பழியைப் போக்க, என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்” என்றான்.

நசிகேதனின் மூன்று வரங்கள்

நசிகேதன் தெளிவான மனதுடன் எமதர்மனை நோக்கி, “உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை, என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் அற்றவராய் என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான். எமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்று வரம் தந்தான்.

03chsrs_kadho

அதன் பின் நசிகேதன், “எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப் பற்றிச் சொல்வாயாக. இதுவே எனது இரண்டாவது வரம்” என்றான்.

எமதர்மன், “நசிகேதா, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றிச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள். சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம், அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றான்.

யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தான். நசிகேதன் அழகாய்ப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்லவும், எமதர்மன் அகமகிழ்ந்தான். இன்னொரு வரமும் தருகிறேன் என்றான். அந்த யாகம் நசிகேத யாகம் என்றே இனி விளங்கும் என்றான். மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினான்.

நசிகேதன், “மரணத்துக்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே” என்றான்.

மரணத்துக்குப் பிறகு

எமதர்மன் ,“நசிகேதா, நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள். பூமியில் உள்ள எல்லாச் செல்வங்களையும் அரசையும் கேள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துகொள். மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்றான். நசிகேதன் தெளிவாக, “உலகின் இன்பங்கள் நிலையற்றவை. ரகசியமாய் வைக்கப்பட்டுள்ள இவ்வுண்மையை நான் அறிய வேண்டும் . வேறு எந்த வரமும் வேண்டாம்” என்றான்.

எமதர்மன் நசிகேதனின் மன உறுதியில் அக மகிழ்ந்து, “நசிகேதா, உண்மையை அடைவதில் உறுதியாய் இருக்கும் உன் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்கான மந்திரம் ‘ஓம்’ ஆகும். உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். பொதுவாக மரணம் என்று குறிப்பிடப்படுவது உடம்பின் மரணம் மட்டுமே. உடம்பின் மரணத்துக்குப் பின்னரும் ஆன்மா வாழுகிறது. ஆன்மா பிறப்பற்றது; நிலையானது; அழியாதது” என்றான்.

மேலும், “மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும் பெற்ற பிறவியும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.”

ஆன்ம அனுபூதி

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம். உணர வேண்டியது. இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்.

மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்”-இவ்வாறாக எமதர்மன் தனது உபதேசத்தை நிறைவு செய்தான்.

இதைக் கேட்டு, பின்பற்றிய நசிகேதன் மரணமற்றவன் ஆனான். சிரத்தையுடன் தேடுதல் செய்து, கண்டடைந்தவற்றைத் தெளிவாய் உணர்ந்து, வழுவாமல் பின்பற்றினால் அனைவரும் நசிகேதன் ஆகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

வாழ்வியல்

12 mins ago

தமிழகம்

28 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

விளையாட்டு

54 mins ago

இந்தியா

58 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்