பரமஹம்ச யோகானந்தரின் மொழிகள்: சலனம் முடியும் இடத்தில் கடவுள்

By செய்திப்பிரிவு

சாந்தம் என்பது ஆன்மாவிலிருந்து வெளிப்படுகிறது. அதுதான் புனிதமான அகச்சூழல், அதிலிருந்துதான் உண்மையான ஆனந்தம் வெளிப்படுகிறது.

*****

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சாந்தத்துடனே செய்ய வேண்டும். அதுதான் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவுக்கும் சிறந்த மருந்து. வாழ்க்கையை அற்புதமாக வாழ இதுதான் மிகச் சிறந்த வழி!

*****

நிதானம் என்பது நம் வாழ்வனுபவங்களை நாம் எதிர்கொள்வதற்கான ஆதர்சமான நிலை. பதற்றம் என்பது நிதானத்துக்கு எதிர்நிலை. அது எங்கும் காணப்படுவதால்தான் இன்று அது கிட்டத்தட்ட ஒரு உலகளாவிய நோயாக ஆகிவிட்டது.

*****

நிதானம் என்பது உங்களுக்குள் இருக்கும் நித்தியத்துவத்தின் குணாம்சங்களுள் ஒன்று. நீங்கள் கவலையுறும்போது உங்கள் மனதின் வானொலிப் பெட்டியில் இரைச்சல்தான் வரும். பதற்றம்தான் அந்த இரைச்சல்; நிதானம்தான் உங்கள் ஆன்மாவின் வானொலிப் பெட்டியின் வழியாகப் பேசும் கடவுளின் குரல்.

*****

பதற்றம் என்பது மாற்றத்தின், மரணத்தின் பணிப்பெண். நீங்கள் நிதானமாக இருக்கும்போது மரணம் கூட உங்களை அச்சுறுத்த முடியாது, ஏனெனில் உங்களுக்குத்தான் தெரியுமே நீங்கள்தான் கடவுள் என்று.

*****

நிதானம் என்பது உங்களுக்குள் இருக்கும் கடவுளுடைய நித்தியத்துவத்தின் உயிர்மூச்சு.

*****

உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கடவுளின் உருவத்திலேயே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களின் உண்மையான சுயம். உங்களுக்குள் இருக்கும் கடவுளின் உருவத்தை உணர்வதுதான் அறுதியான வெற்றி. முடிவற்ற ஆனந்தம், எல்லா ஆசைகளினதும் ஈடேற்றம், உடல் சார்ந்த அனைத்துத் தளைகள், இந்த உலகம் உங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் போன்ற எல்லாவற்றின் மீதாகவும் நீங்கள் பெறும் வெற்றி!

*****

தங்கள் ஆன்மாவில் ஒத்திசைவு கொண்டிருப்பவர்களாலேயே இயற்கையில் இருக்கும் ஒத்திசைவைக் காண முடியும். இந்த அக ஒத்திசைவைக் கொண்டிருக்காதவர்களுக்கு இந்த உலகத்தில் ஒத்திசைவு இல்லை என்ற உணர்வே ஏற்படும். அலங்கோலமாக இருக்கும் மனது தன்னைச் சுற்றிலும் அலங்கோலத்தையே காணும்…

*****

உங்கள் கவனத்தை உங்கள் அகம் நோக்கிக் குவியுங்கள். புதுவிதமான சக்தியொன்றை, புதிய பலத்தை, புதிய அமைதியை நீங்கள் உணர்வீர்கள்- உடலிலும் மனதிலும் ஆன்மாவிலும்.

*****

உங்களுக்கான சொர்க்கத்தை உருவாக்குவதற்கான எல்லா முகாந்திரங்களும் உங்களிடமே குவிந்துகிடக்கின்றன.

*****

உங்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் மூடிக்கிடக்கும் எல்லா உள்கதவுகளையும் தியானம் விசாலமாகத் திறந்துவிட்டுக் கடவுள் சக்தியின் வெள்ளத்தை உங்களுக்குள் நுழையச் செய்கிறது.

*****

சராசரியான மனிதர்கள் எப்போதும் பதற்றமாக இருக்கிறார்கள். அவர்கள் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் ஒருசில சமயம் நிதானமாகவும் பெரும்பாலான நேரங்களில் பதற்றமாகவும் இருக்கிறார்கள். ஆழமாக அவர்கள் தியானம் செய்யும்போது பாதி நேரம் நிதானமாகவும் பாதி நேரம் பதற்றமாகவும் இருக்கிறார்கள். நீண்ட காலம், நம்பிக்கையுடன் பயிற்சி செய்துவந்தால் பெரும்பாலான நேரங்களில் அவர்களால் நிதானமாக இருக்க முடியும், எப்போதாவது அவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம். பொறுமையுடன் தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் எப்போதும் நிதானத்துடன் இருக்கும், பதற்றமற்ற மனநிலையை அவர்கள் அடையலாம். சலனம் முடியும் இடத்தில் கடவுள் தொடங்குவார்.

*****

வாழ்க்கை, அதன் இருப்பும் நோக்கமும் புதிர்தான்; கடினமானது, அதே நேரத்தில் அறிய முடியாததல்ல. நமது முன்னோக்கிய சிந்தனையால் தினமும் நாம் அதன் ரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டுவருகிறோம். நவீன யுகத்தின் துல்லியமான, நுட்பமான அறிவியல் சாதனங்களெல்லாம் நிச்சயம் அசாதாரணமானவை. இயற்பியல், வேதியியல், வானியல் போன்ற துறைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமான கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை எப்படியெல்லாம் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது பற்றிய ஒரு தெளிவான பார்வையைத் தருகின்றன. ஆனாலும், நமது சாதனங்கள், உத்திகள், கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்கும் அப்பாலும் இன்னமும் நாம் விதியின் கைப்பாவைகளாகவே காட்சியளிக்கிறோம். இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து நம்மை விடுவித்து சுயேச்சையாக நாம் செயல்படுவதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டிதான் இருக்கிறது.

இயற்கையின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதன் பெயரல்ல விடுதலை. வெள்ளங்கள், சுழல் காற்று, நிலநடுக்கங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது நமது உத்வேகமிக்க மனங்கள் கூட நிராதரவான ஒரு மனநிலையால் ஆட்கொள்ளப்படுகின்றன. அல்லது எந்தவொரு காரணமுமின்றி நோயோ விபத்தோ நமக்குப் பிரியமானவர்களை நம்மிடமிருந்து அபகரித்துச் செல்லும்போதும் அப்படித்தான். அதுபோன்ற சமயங்களில்தான் நாம் ஒன்றும் அதிக அளவில் வெற்றிபெறவில்லை என்பது நமக்கு வெளிச்சமாகிறது.

(ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ‘Inner Peace’ என்ற புத்தகத்திலிருந்து, தமிழில்: ஆசை)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

4 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்