விவிலிய மாந்தர்கள்: பொறுமையின் சிகரம்

By ஜோ.ஆரோக்யா

யோசேப்பு

யாக்கோபுக்கு மொத்தம் பன்னிரண்டு மகன்கள். அவர்களில் யோசேப்பும் பென்யமினும் இளையவர்கள். ஆனால், யாக்கோபு மற்ற அனைவரையும்விட யோசேப்பின் மீது சற்று அதிகமாகவே பாசம் காட்டினார். அவனுக்கு அழகான, நீளமான ஒரு அங்கியைச் செய்து கொடுத்தார். இதனால் தம்பி யென்மீனைத் தவிர மற்ற பத்து அண்ணன்களும் யோசேப்பின் மீது பொறாமைப்பட்டு அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். யாக்கோபுவும் மற்ற மூத்த பிள்ளைகளை மந்தைகளை மேய்த்துவர அனுப்பியதுபோல் யோசேப்பை அனுப்பாமல் தன் அருகிலேயே அவனை வைத்துக்கொண்டார். அதனால் அவர்கள் யோசேப்புமீது மேலும் கோபத்துடன் இருந்தார்கள். ஆனால், கடவுள் யோசேப்பை ஆசீர்வதித்திருந்தார். அவனுக்கு ஓர் அருள் அடையாளத்தை வழங்கினார். கனவுகளுக்கான விளக்கத்தை அறிந்துகொள்ளும் ஆற்றலே அந்த அருள் அடையாளம். யோசேப்பின் சகோதரர்களோ, ’கனவு மன்னன்’ என்று அவரைக் கிண்டல் செய்தார்கள்.

அண்ணன்களால் விற்கப்பட்டார்

இந்நிலையில் யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டார். அந்த இரண்டு கனவுகளிலுமே அவனுடைய அண்ணன்கள் அவருக்கு முன்பாகத் தலைகுனிந்து பணிந்து வணங்கினார்கள். அந்தக் கனவுகளைப் பற்றி யோசேப்பு தன்னுடைய அண்ணன்களிடம் சொன்னபோது அவர்கள் இன்னும் அதிகமாக யோசேப்பை வெறுக்கத் தொடங்கினார்கள். அந்த வெறுப்பு நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது. ஒருமுறை மந்தைகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காகச் சென்றிருந்த மூத்த மகன்கள் பத்துப் பேரும் பலநாட்கள் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் யாக்கோபு கலக்கமடைந்தார். யோசேப்புவை அழைத்தவர், “அண்ணன்கள் மந்தைகளை எங்கே கிடை போட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களது நலத்தையும் அறிந்துவா மகனே” என்று அனுப்பி வைத்தார்.

அப்பாவின் கவலையைப் புரிந்துகொண்ட யோசேப்பு, அண்ணன்களை சீகேம் நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த தோத்தான் என்ற பள்ளத்தாக்கில் தேடிக் கண்டுபிடித்தார். அப்பா கொடுத்த அழகான அங்கியை அணிந்திருந்த யோசேப்பு “ அண்ணா… அண்ணா.” எனப் பாசமாக அழைத்துக்கொண்டு வருவதைத் தூரத்திலிருந்தே அண்ணன்களில் சிலர் பார்த்தனர். அவர்களது மனத்தில் வெறுப்பின் அனல் புகையாகக் கசியத் தொடங்கியது. “நாம் அனைவரும் சேர்ந்து இந்தக் கனவு மன்னனைக் கொன்று போட்டுவிட்டு, காட்டுவிலங்கு ஒன்று இவனை அடித்துத் தின்றுவிட்டது என்று அப்பாவிடம் கூறிவிடலாம். இவனைக் கொல்ல இதுதான் நல்ல சந்தர்ப்பம்” என்கிறார்கள் சிலர்.

ஆனால், மூத்தவர்களில் ஒருவனான ரூபன் “ வேண்டாம் அப்படிச் செய்ய வேண்டாம். அவனைக் கொல்வதற்குப் பதிலாக, இதோ இந்த வறண்ட தண்ணீர் தொட்டிக்குள் பிடித்துத் தள்ளிவிடலாம்”என்றார். அவ்வாறே யோசேப்பைப் பிடித்து அவனது அழகான அங்கியைக் கழற்றிக்கொண்டு வறண்ட தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விடுகிறார்கள். அப்போது யோசேப்பு கண்ணீர் சிந்தினாலும் பொறுமை காத்தார். தன் அண்ணன்களில் ஒருவர் தன்னைக் கொல்லக் கூடாது என்று சொன்னதற்காக மனம் நெகிழ்ந்தார். தன் அண்ணன்கள் மீது அவர் கோபப்படவில்லை.

இந்த நேரத்தில் எகிப்து நாட்டுக்குப் பொருட்களை ஓடங்களில் ஏற்றிக் கொண்டு அந்த வழியே மீதியானிய வியாபாரிகளான இஸ்மவேலர்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். “நம்முடைய தம்பியைக் கொலை செய்துவிட்டு அதை மூடி மறைப்பதில் நமக்கு என்ன லாபம்? வாருங்கள், அவனை இந்த இஸ்மவேலர்களிடம் விற்றுவிடுவோம்”என்று கூறி யோசேப்பை வறண்ட தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே தூக்கி, இஸ்மவேலர்களிடம் 20 வெள்ளிக் காசுகளுக்கு யோசேப்பை விற்றார்கள். அந்த வியாபாரிகளோ யோசேப்பை எகிப்துக்குக் கூட்டிக் கொண்டுபோனார்கள். அப்போது தன் அண்ணன்களையும் தம்பி யென்மீனையும் பெற்றோரையும் நினைத்துக் கலங்கினார் யோசேப்பு. ஆனால், கடவுளின் திட்டம் வேறு எதுவாக இருக்கும், ஒருவேளை நாம் கண்ட கனவுகள் நிஜத்தில் நடப்பதற்காகத்தான் தான் அண்ணன்களால் விற்கப்படுகிறோமோ என நினைத்துக்கொண்டார். பொறுமையுடன் முரண்டு பிடிக்காமல் ஒரு அடிமையாகத் தனது பதின் வயதில் அந்த வியாபாரிகளுடன் பயணப்பட்டார்.

யோசேப்பை விலங்கு அடித்துத் தின்றுவிட்டது என்று அப்பா யாக்கோபுவை அண்ணன்கள் நம்ப வைக்கிறார்கள். அதற்காக மந்தையிலிருந்த ஆடு ஒன்றைக் கொன்று அந்த ரத்தத்தில் யோசேப்புவின் அங்கியை நனைத்து அதை யாக்கோபுவிடம் காட்டுகிறார்கள். அவரும் அதை நம்பி, துக்கத்தில் துடியாய்த் துடித்துப்போகிறார்.

நேர்மைக்குச் சிறை

அந்த மீதியானி வியாபாரிகள் யோசேப்பை எகிப்துக்குக் கூட்டிக் கொண்டுபோய், பார்வோன் மன்னனின் அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும் இருந்த போத்திபாரிடம் சற்று அதிக விலைக்கு விற்றுவிட்டுச் சென்றார்கள். ஒரு அடிமையாகத் தன் எஜமானரான போத்திபாருக்காகக் கடுமையாக உழைக்கத் தொடங்கினார் யோசேப்பு. வளர்ந்த அழகான இளைஞனான யோசேப்பின் உழைப்பைப் பார்த்த போத்திபார் தன் முழு வீட்டையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவனிடம் கொடுக்கிறார். யோசேப்பின் அழகைக் கண்ட போத்திபாரின் மனைவி அவனை அடைய நினைக்கிறாள். ஆனால், பிறன்மனை நாடலும் இணங்கலும் கடவுளுக்கு விரோதமான செயல்கள் என்பதை யோசேப்பு அறிந்திருந்ததால், அவளின் ஆசைக்கு இணங்க மறுத்துவிடுகிறார். அவமானமும் கோபமும் அடைந்த போத்திபாரின் மனைவி, தன் கணவன் வீட்டுக்கு வந்ததும் யோசேப்பு தன்னிடம் வல்லுறவுகொள்ள முயன்றான் என அபாண்டமாகப் பொய் கூறினாள். மனைவி சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பிய போத்திபார் யோசேப்பிடம் எந்த விளக்கமும் கேட்காமல் சிறையில் அடைத்தான். அப்போதும் யோசேப்பு மிகப் பொறுமையாகவே இருந்தார்.

கைகொடுத்த கனவு

சிறையில் நாட்கள் ஓடத் தொடங்கின. எங்கே இருந்தாலும் அங்கே உண்மையாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்ந்த யோசேப்பு நல்லவன் என்பதைச் சிறை அதிகாரி அறிந்துகொள்கிறார். சக கைதிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை யோசேப்புவிடம் கொடுக்கிறான். அந்நேரத்தில் பார்வோன் மன்னன், தனக்கு மது பரிமாறும் ஊழியனையும் ரொட்டி தயாரித்துத் தருகிறவனையும் அவர்கள் செய்த தவறுகளுக்காகச் சிறையில் தள்ளுகிறான். அவர்கள் இருவரும் மாறுபட்ட கனவுகளைக் காண்கிறார்கள். ஆனால், தாங்கள் கண்ட கனவுகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்கவில்லை. இதை அறிந்த யோசேப்பு அவர்களது கனவுகளுக்குக் கடவுள் தந்த திறமையால் விளக்கம் சொல்கிறார்.

மது பரிமாறும் ஊழியனிடம், “இன்னும் மூன்றே தினங்களில் நீ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் மன்னனின் விருப்பத்துக்குரிய மதுக்குவளை ஏந்துபவனாகப் பணியில் அமர்த்தப்படுவாய். அப்போது என்னைப் பற்றி நீ மன்னனிடம் எடுத்துக்கூறி சிறையிலிருந்து என்னை விடுதலை செய்ய உதவு” என்றார். மூன்று தினங்களுக்குப் பின் யோசேப்பு சொன்னபடியே நடக்கிறது. மன்னனின் மது பரிமாறும் ஊழியன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு மீண்டும் மன்னனிடம் வேலைக்கு அமர்கிறான். ஆனால், யோசேப்பின் வேண்டுகோளைச் சுத்தமாக மறந்துவிடுகிறான். தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் யோசேப்பு பொறுமை காத்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்