பலாப்பழமும் ‘பிலாத்தி’ பூஜையும்!

By எல்.மோகன்

தி

த்திக்கும் சுவை கொண்ட பலாப்பழம் பிற பழவகைகளில் இருந்து வேறுபட்டது. ஒரு பெரிய குடும்பத்தை, ஒரு பலாப்பழம் திருப்தியடையச் செய்துவிடும். வனங்களில் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகள், தேனீக்கள் என அனைத்து உயிர் களுக்கும் உணவாவதுடன், வனத் தின் பசுமையை பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது.

மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் முதன்மை உணவாக பலாப்பழம் உள்ளது. உள்ளூர் தோட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட, அதிக சுவை கொண்ட பலாப் பழங்கள் மலைப் பகுதிகளில் விளைகின்றன. இவற்றை ருசிக்கும் பாக்கியம் பழங்குடியின மக்களுக்குதான் அதிகம் கிடைக்கிறது.

பால் வர்க்கமான பலா மரத்தில் இருந்து ஒரு பழம் வெட்டினால் கூட, ஒரு உயிர்பலி நடப்பதாகவே இவர்கள் வருந்துகின்றனர். இதனால், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, `பிலாத்தி’ என்னும் பூஜை செய்து, பலா மரத்தை வழிபட்டு வருத்தம் தெரிவித்த பின்னரே, அதன் பழத்தை வெட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தோட்டமலை, தச்சமலை, ஆண்டிபொத்தை, மாறாமலை, எட்டாங்குன்று, புன்னமூட்டுத்தேரி, நடனப்பொத்தை உட்பட 48 மலை கிராமங்களில் பலாப் பழத் தை போற்றும் நிகழ்வுகள் இன்றும் நடந்து வருகின்றன. தச்சமலையைச் சேர்ந்த மாத்து குட்டி காணி(72) பலா பழங்கள் குறித்து கூறியதாவது:

பசிக்கும் நேரத்தில் பலாப்பழமும் காட்டில் ஓடும் தண்ணீரும் போதும். அன்றைய பசி தீர்ந்து போகும். மணமக்களுக்கு சீதனமாக பலாப் பழங்களையும் கொடுத்து அனுப்புவோம். அத்துடன், வாழப்போகும் வீட்டில் பலா மரக் கன்றை நட்டுவிட்டு வருவோம்.

பறவைகள், குரங்கு, கரடி, மிளா, யானைகள் என பல தரப்பட்ட உயிர்களுக்கு பலாப்பழம்தான் உணவு. தேன்கள் அதிகம் கிடைப்பதும் பலாப்பழத்தினால் தான். மரத்தில் தொங்கும் பலாப்பழத்தை விலங்குகள், பறவைகள் உண்டு மீதி தரையில் விழுபவை சிற்றுயிர்கள் உண்கின்றன. இதனால் தான் பலாப்பழத்தை முதன்மை உணவாக மதிக்கி றோம்.

விற்றால் பாவம்

அம்மைகட்டு, கண் வீக்கம் போன்றவற்றுக்கு, 100 வயதுக்கு மேலான பலா மரத்தின் பாலுடன் கூடிய பசையை மருந்தாக பயன்படுத்துகிறோம். பலாப்பழத்தை பணத்துக்கு விற்றால் பாவமாக நினைக்கிறோம். காட்டில் தேவைக்கு எடுத்த பலாப்பழம் போக மீதியுள்ளவை வன விலங்குகளுக்கும், பறவைகளுக்குமே உணவாகின்றன.

தேன்வறுக்கை, புளிவறுக்கை, நெட்டடி, முண்டன் வறுக்கை என பல வகை பலாக்கள் இருந்தாலும், உருண்டையான தோற்றத்தில் உள்ள `முண்டன் வறுக்கை’ ரகம் தற்போது அழிந்து வருகிறது. காடுகளிலேயே அரிதாகவே உள்ளது. இவற்றை காப்பாற்றும் முயற்சியாக ஆங்காங்கே நட்டு வருகிறோம் என்றார் அவர்.

சுற்றுச் சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் கூறும்போது, `பலாப்பழத்தைக் கொண்டு சிப்ஸ், பஜ்ஜி, ஜாம், பாயசம், அல்வா என பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பலாப் பழத்தின் விதைகளை பலர் ஒதுக்கி வீணாக்குவர். அதில் அதிகளவில் புரதச்சத்து இருக்கிறது. தற்போது புரோட் டீன் பவுடர் தயாரிக்க பலா விதையை அதிக அளவில் விற்பனை யாகிறது.

மலைப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பலா மரம் அதிகம் நிற்கிறது என்றாலே, அப்பகுதியில் பறவைகள், விலங்குகள் மற்றும் சிற்றுயிர்கள் அதிகமாக இருப்பதும், இயற்கை சமநிலை சிறப்பாக இருப்பதையும் உறுதி செய்யலாம்.

எனவே பலா மர விதைகளை வனப்பகுதிகளில் அதிகளவில் விதைப்பதற்கான முயற்சியை கல்லூரி மாணவ, மாணவியர் உதவியுடன் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

பலாப்பழத்தை உயிராக பாவிக்கும் பழங்குடி மக்களின் செயல் இயற்கையை நேசிக்க கற்றுத்தருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 mins ago

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

55 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்