டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு ராமாயண ஆன்மிக சுற்றுலா: பக்தர்களுக்காக இந்தியன் ரயில்வே ஏற்பாடு

By எஸ்.முஹம்மது ராஃபி

ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண சுற்றுலாவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தனி யாத்திரை ரயில் மூலம், இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், ராமாயண யாத்திரைக்காக ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து, சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்ததாக கூறப்படும் பகுதி வரை சிறப்பு ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ராமாயணா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், டெல்லியிலுள்ள சப்பிடார் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 14 அன்று தனது பயணத்தை தொடங்குகிறது.

அங்கிருந்து புறப்படும் ரயில் முதலாவதாக அயோத்தியில் நிறுத்தப்படும். இங்கு ராமர், அனுமான் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நந்திகிராம், சீதாமர்கி வழியாக நேபாளத்தில் உள்ள ராமாயண கால புராதன நகரமான சீதை பிறந்த இட மாகக் கருதப்படும் ஜானக்பூருக்கு ரயில் செல்லும்.

அங்குள்ள ஜானகி மந்திரில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக சுற்றுலா பக்தர்கள் கலந்துகொள்ள முடியும்.

தொடர்ந்து ஜானக்பூர், வாரணாசி, பிரயாக், சித்ராகூட், நாசிக், ஹம்பியில் உள்ள புனித வழிபாட்டுத் தலங்களை தரிசித்து விட்டு, ராமேசுவரத்துக்கு ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைகிறது. ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோயில், ராமர்பாதம், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட ஸ்தலங்களை தரிசித்துவிட்டு ராமாயணா எக்ஸ்பிரஸ் மீண்டும் சென்னை வந்தடைகிறது.

ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 800 ஆகும். ஒருவருக்கான மொத்த பயணக் கட்டணம் ரூ. 15,120 (இந்தியாவுக்குள்) ஆகும். இந்தக் கட்டணத்தில் பயணிகளுக்கு உணவு, ஆன்மிக ஸ்தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை பயணம்

ஆன்மிகச் சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்புவுக்கு சென்று, அங்கிருந்து ராமாயணம் தொடர்புடைய நுவரெலியா, ராம்பொட, சிலாபம் ஆகிய நகரங்களில் ஆன்மிகப் பயணத்தை தொடரலாம். இதற்கான கட்டணம் தனியாக வசூலிக்கப்படும்.

சீதை அம்மன் கோயில் (நுவரெலியா)

இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா நகரில் ‘சீதா எலிய’ என்ற இடத்தில், சீதை அம்மன் கோயில் உள்ளது. இது ராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் என நம்பப்படுகிறது. மேலும், இங்கு ராமர், அனுமனுக்கும் கோயில் கள் உள்ளன. இங்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்யப் படுகிறது.

அனுமன் கோயில் (ரம்பொட)

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ரம்பொட ஆகும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கவர்ந்து வந்தபோது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப் பிரதேசத்திலும் தேடியதாகவும் ராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப் பிரதேசத்தில் திரண்டதால் ‘ராம்படை’ என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் ரம்பொடவாக திரிந்ததாகவும் நம்பப்படுகின்றது. இங்கு அனுமனுக்கும் கோயில் உண்டு.

முன்னேசுவரம் கோயில் (சிலாபம்)

இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தில் அமைந்துள்ள சிவனுக்கு ஆலயம் அமைந்துள்ள இடம் முன்னேசுவரம் ஆகும். சிவபக்தனான ராவணனை ராமன் கொன்றதால், ராமனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன்லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் ராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து ராமர் வழிபட்டதால், முன்னேசுவரம் ராமேசுவரத்துக்கு முற்பட்டது என நம்பப்படுகிறது.

இந்த யாத்திரை தொடர்பான மேலும் விவரங்களை www.irctctourism.com&nbsp என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்