இப்படிக்கு இவர்கள்: சுமங்கலி சுரண்டல்

By செய்திப்பிரிவு

ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய ஏற்றுமதியில் 80%-ஐ அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெறுகின்றன. இந்தப் பின்னணியில், தமிழக ஜவுளி மில்களில் நடைபெறும் ‘சுமங்கலி’ திட்டச் சுரண்டல் அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள். கொத்தடிமைத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை 3 லட்சம் பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படும் பட்சத்தில் பல குடும்பங்களின் நலன் காக்கப்படும்.

- கோம்பை ஜெ.பஷீர் அஹமது, மாணவன், திருச்சிராப்பள்ளி.



அரசியல் பயிற்சி

இன்றைய காலகட்டத்தில், ஒரு அரசியல் இயக்கம் தனது நிர்வாகிகளுக்குப் பயிற்றுவித்து, அவர்கள் அதனை உள்வாங்கி பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டிய பணியை ‘தி இந்து’வில் வெளிவரும் 'மோடியின் காலத்தை உணர்தல்’ தொடர் செய்கிறது. தேர்தல் பணி செய்வது மட்டுமல்ல அரசியல் இயக்கத்தினரின் கடமை. அரசியல் சூழலை அறிந்து தாங்களும் விழிப்படைவதுடன், பொதுமக்களையும் விழிப்படையச் செய்வதும் மிக முக்கியக் கடமை. மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகளை மக்கள் அறியும் வண்ணம் தெளிவுபடுத்துவதும், குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுவதும், மாற்றுத் தீர்வை முன்வைப்பதும் அவர்களது கடமை. அத்தகைய பணியிலிருந்து இந்திய அரசியல் இயக்கங்கள் பல விலகியிருக்கிற சூழலில், அந்தப் பணியைத் தன் பேனாவின் துணைகொண்டு செய்யும் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.



அது ஒரு அழகிய காலம்

ஞாயிறு அரங்கம் பகுதியில் தஞ்சைக் கவிராயரின் ‘அம்மா பால்’ நினைவுகளைப் படித்தபோது என் நினைவுகளும் பின்நோக்கிப் பயணித்தன. 1987-ல் நான் சென்னைக்கு வேலை தேடிவந்தேன். என் நண்பன் மேற்கு சைதாப்பேட்டையில் தங்கியிருந்தான். அவனது அறை நோக்கி நடந்து செல்லும்போதெல்லாம் சாலையின் இரு பக்கமும் உள்ள தேநீர்க் கடைகளின் முன்பு பசு மாடுகளைக் கட்டிப் பால் கறந்து கொடுத்த காட்சியைப் பார்த்திருக்கிறேன். மாலை, இரவு நேரங்களில் நண்பர்களுடன் மசாலா பால் சாப்பிடச் சென்றால், வீதியே பாலாய் மணக்கும். அந்த நாட்களின் நினைவுகள் கலப்பிடமில்லாத பால் மணமாக எழுந்து, இன்றைய பாக்கெட் பால் நுரைபோல உடைகிறது.

- விஷ்ணுகுமாரபிள்ளை, சென்னை.



உடல் எடையும் அவநம்பிக்கையும்

உடல் எடைக் குறைப்புக்காக சிகிச்சை பெற்ற 17 வயது மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் இயற்கை மருத்துவமனை மூடப்பட்ட செய்தியை (ஜூன் 13) வாசித்தேன். ஒல்லியான உடல்தான் அழகு, அதுதான் ஆரோக்கியம் என்ற கருத்து பள்ளிப் பருவத்திலேயே ஊட்டப்படுவதன் விளைவு இது. ‘கார்ட்டூன்’களில் ஆரம்பித்து திரைப்படங்கள் வரை இதையே போதிக்கின்றன. ஆரோக்கியமான மனிதர்களுக்குக் கொஞ்சமேனும் கொழுப்பு அவசியம். இல்லை என்றால் நினைவுத்திறன் குறைவதில் ஆரம்பித்து ஆயிரம் பிரச்சினைகள் ஏற்படும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என தவறான சிகிச்சையளிக்கும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் உடனடிக் கடமை.

- ரோஸ்லின், தேவகோட்டை.



ரசித்தேன் ருசித்தேன்

பா.ராகவனின் ‘ருசியியல் குறிப்புகள்’ கட்டுரைகளைத் தொடர்ந்து ருசிப்பவன் நான். அவரது நடையே தனி. உடல் எடைக் குறைப்பு, நடைப் பயிற்சி இவற்றில் தொடங்கிய எழுத்துக்கள் ‘ஆரோகண’த்தில் மட்டுமே பயணிக்கின்றன. காபியைப் பற்றிய கட்டுரை வாசித்தபோது, காபி அருந்தியதைப் போலவே ஒரு சிலிர்ப்பு. இந்த வாரம் ரசம் பற்றிய கட்டுரையும் ருசித்தது.

- ஆர்.பி.சந்திரசேகரன், சேலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்