புதிய முதல்வர் முன் அணிவகுக்கும் சவால்கள்!

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றிருக்கிறார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக “மாநிலத்தின் நிர்வாகம் முடங் கிடாத வகையில், நிர்வாகப் பொறுப்பு வேறு யாரிடமாவது ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

விளைவாக, ஜெயலலிதா வகித்துவந்த துறைகளின் பொறுப்புகளை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்தபோதும், பன்னீர்செல்வத்திடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், டிசம்பர் 5 நள்ளிரவில் முதல்வர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, உடனடியாகப் புதிய முதல்வராகப் பன்னீர்செல்வம் பதவியேற்றிருக்கிறார். ஜெயலலிதா தலைமையிலிருந்த அதே அமைச்சரவையே தொடர்கிறது.

எளிய பின்னணியிலிருந்து வந்தவர் பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த அவர், டீக்கடை நடத்திவந்தவர். அதிமுகவின் பெரியகுளம் நகரச் செயலாளர், கூட்டுறவு வங்கியின் இயக்குநர், நகர்மன்றத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என்று படிப்படியாக வளர்ந்து அரசியலில் முன்னுக்கு வந்தவர். 2001-ல் டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், முதல்வரான ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ஜெயலலிதா பதவி விலக, ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக முதல்வரானார்.

அதேபோல், 2014-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கிடைத்தது. இன்றைக்கு, ஜெயலலிதாவே இல்லாத சூழலில், பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இடையில் மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

முன்னதாக, முதல்வர் பதவிகளில் இரு முறை அமர்ந்தபோதும் கூடப் பெயரளவிலேயே அந்தப் பதவியை வகித்துவந்தார் பன்னீர்செல்வம். அவரைக் குறை சொல்வதில் நியாயமில்லை. தன் சுயபலத்தில் முதல்வ ராக உருவெடுத்தவர் அல்ல அவர். அவருடைய கட்சித் தலைவரே அந்த இடத்தில் அவரை அமர்த்தினார். அவருக்கு இடப்பட்ட, அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட பணியை அவர் நிறைவேற்றினார். அவ்வளவே.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், பணிவுக்கும் விசுவாசத்துக்கும் பெயர்போனவர் என்றாலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில், அவர் மீதும் வேட்பாளர் பேரக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை மறுக்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகூட அவருக்கு மறுக்கப்படும் என்ற அளவுக்கு இந்த விவகாரம் அப்போது பேசப்பட்டது. எல்லாவற்றையும் தாண்டி மீண்டும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. மீண்டும் அமைச்சராகவும் ஆக்கினார். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகவே இப்போதைய தேர்வையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழக அரசியலின் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது நாற்காலியில் அமரும் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னர் இப்போது மிகப் பெரிய பொறுப்புகளும் சவால்களும் காத்திருக்கின்றன. முந்தைய கால அணுகுமுறையை அவர் இனியும் தொடர முடியாது. அவர் தனித்துச் செயல்பட்டுக் காட்ட வேண்டும். மாநிலங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பேசிவந்த அவருடைய தலைவியின் வழியில், தமிழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும். கட்சிக்குள் நிழல் அதிகாரங்களையும் புதிதாக உருவெடுக்கும் அதிகார மையங்களையும் சமாளித்துச் செல்ல வேண்டும்.

இனி, அவர் பயப்பட வேண்டியதும் கட்டுப்பட வேண்டியதும் மக்களைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒருவகையில், அதிமுக எனும் பேரியக்கத்தின் எதிர்காலம் இன்று பன்னீர்செல்வத்தின் கைகளில் இருக்கிறது. புதிய முதல்வருக்கு வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

42 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்