கரோனா தடுப்பூசி: இரண்டாவது தவணையைத்தவிர்க்கக் கூடாது

By செய்திப்பிரிவு

நடப்பாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அடுத்த ஆண்டுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மட்டுமே உயிரிழப்புகளைத் தவிர்க்கும், அடுத்தடுத்த பரவல் அலைகளைக் கட்டுப்படுத்தும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். எனவே, வாய்ப்புள்ளவர்கள் அனைவருமே தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உள்ள மனத்தயக்கங்கள் இன்னும்கூட முழுதாக அகன்றுவிடவில்லை. முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள், அடுத்த தவணையைத் தவிர்ப்பதும்கூட அதிக அளவில் இருக்கிறது. கடந்த வார நிலவரப்படி, தமிழ்நாட்டில் மட்டும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் போட்டுக்கொள்ளவில்லை. இது தடுப்பூசியின் நோக்கத்தையே பலவீனப்படுத்திவிடக்கூடியது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பலருக்குக் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படுவதால் இரண்டாவது தவணையை போட்டுக்கொள்ளத் தயங்குகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தத் தயக்கங்கள் உண்டு. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாவதன் அறிகுறிகள் மட்டுமே. அதைவிடவும் முக்கியமாக முதல் தவணை தடுப்பூசியே முழுமையான பாதுகாப்பை அளித்துவிடும் என்ற தவறான நம்பிக்கையும் நிலவுகிறது. கரோனா நுண்கிருமிகள் தொடர்ந்து உருமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொள்வது மட்டுமே அதன் பாதிப்புகளிலிருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சிக்கான உயர் அமைப்புகளில் ஒன்றான நோய்க் கட்டுப்பாடு மற்றும் முன்தடுப்பு மையங்கள் (சிடிசி) மருத்துவப் பணியாளர்களிடம் நடத்திய ஆய்வுகளில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களை விடவும் இரண்டு தவணைகளும் போட்டுக்கொண்டவர்கள் அதிக நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது தவணை தவிர்க்கப்படக் கூடாதது என்பதை வலியுறுத்தி, உலகளவில் தீவிரமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 7 முதல் 8 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் போடுவதற்கான கட்டமைப்பு இருந்தபோதிலும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவாகவே இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு 25% தடுப்பூசிகள் அளிக்கப்பட்டாலும் அதன் பயன்பாடு 4.5% ஆக மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 10% ஆகக் குறைத்து அரசு மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை மேலும் 15% ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், தடுப்பூசித் தட்டுப்பாட்டின் காரணமாக இரண்டாவது தவணையைப் போட்டுக்கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் போட்டுக்கொள்ள வாய்ப்பு உருவாகும். இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுப்பது பற்றியும் சுகாதாரத் துறை பரிசீலிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

52 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்