பட்டாசுத் தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம்: துயரங்களிலிருந்து பாதுகாக்குமா?

By செய்திப்பிரிவு

பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தை அமைத்தும் அதற்கு உறுப்பினர்களை நியமித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. உயிராபத்துகளை எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்துடனும் எளிதில் உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகளுடனும் பணியாற்றிவரும் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு இந்நல வாரியம் உரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும். தற்சமயம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டிருக்கும் 62,661 உறுப்பினர்களைக் கொண்டு இந்த நல வாரியம் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று இயங்கிவரும் 1,250 பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் 870 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் மொத்தம் 1,20,000 தொழிலாளர்கள் பணியாற்றிவருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் அனைவரையுமே நல வாரியத்தின் உறுப்பினர்களாக ஆக்குவதற்கு அரசாங்கம் முயல வேண்டும்.

கரோனா காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கும் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 33 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்திருந்தாலும் 12.13 லட்சம் பேர் மட்டுமே தங்களைப் புதுப்பித்துக்கொண்டிருந்தனர். தங்களுக்கென்று ஒரு நல வாரியம் இயங்குகிறது, அதில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் பதிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னமும் உடலுழைப்புத் தொழிலாளர்களைச் சென்றுசேரவில்லை. அதன் காரணமாக, உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்காத கட்டுமானத் தொழிலாளர்களும் அமைப்புசாரா ஓட்டுநர்களும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற முடியாமல் தவித்தனர்.

கட்டுமானப் பணிகளின் மொத்த மதிப்பீட்டிலிருந்து தொழிலாளர் நலனுக்காக வசூலிக்கப்படும் 1% தொகையானது தொழிலாளர்களுக்குச் செலவழிக்கப்படாமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பதிப்பாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்’ நூலக ஆணை பெற்ற புத்தக வெளியீட்டாளர்களிடம் 2.5% பிடித்தம் செய்துகொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அந்தத் தொகையிலிருந்து பதிப்பாளர், தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கரோனா காலத்தில் பதிப்புசார் தொழிலாளர்கள் நிவாரணம் கோரியும்கூட அக்கோரிக்கை அரசின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இயந்திரமயமாதலால் தீப்பெட்டித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஏற்கெனவே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். பதிவுசெய்துகொள்ளும் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும். விபத்து, தொழில்சார்ந்த உடல் பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரும்போது உரிய நிவாரணங்கள் தாமதமின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் பட்டாசுத் தொழில் விருதுநகர், சிவகாசி மற்றும் அவற்றையொட்டிய பகுதிகளிலேயே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நல வாரியத் தலைமையகத்தை சென்னையில் அமைக்காமல் தொழில் நடக்கும் பகுதிகளிலேயே அமைப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

கருத்துப் பேழை

45 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்