ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும்

By செய்திப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் 2021-22-ம் ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆசிய-பசிபிக் கடலோர நாடுகள் ஐம்பத்தைந்தும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, பாகிஸ்தான் இரண்டும் ஆதரித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் பிரதிநிதி இடத்துக்கான ஒரே போட்டியாளர் இந்தியாதான். அடுத்த கட்டமாக ஐநாவின் 193 உறுப்பினர்களும், 2020 ஜூனில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக மேலும் ஐந்து நாடுகளைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள். அப்போது இந்தியா அதில் 129 நாடுகளின் ஆதரவு தனக்கு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா உறுப்பினராக இருக்க முடியும்.

1950-51 முதல் இந்தியா இப்பதவியை ஏழு முறை வகித்திருக்கிறது. 2021-22-ல் பாதுகாப்பு அவையில் பதவி வகிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரம் காட்டியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு. சுழற்சி அடிப்படையில், இந்தியாவுக்கு இதற்கான வாய்ப்பு 2030-ல் தான் வந்திருக்கும். 2021-22-ல் இந்த வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டியது. இம்முறை தங்களுக்கு இதை விட்டுக்கொடுக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை ஆப்கானிஸ்தானும் ஏற்றுக்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவே இதற்குக் காரணம்.

பாதுகாப்பு அவையில் இடம்பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் இருபிரிவாகப் பிரிந்து, எதிரெதிராக நிற்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஒருபுறமும் ரஷ்யா, சீனா மறுபுறமும் அணிசார்ந்து நிற்கின்றன. இவ்விரு தரப்புடனும் இணைந்து பணியாற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு இருப்பது உலகறிந்தது. பாகிஸ்தானுடனான உறவு அவ்வளவு சுமுகமாக இல்லாத நிலையிலும், சீனாவிடமிருந்து பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் இந்தியாவுக்கு இரு நாடுகளும் சேர்ந்து ஆதரவளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாய்ப்பை இந்தியா சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவந்தால், இந்தியா மதில்மேல் பூனையாக இருந்துவிடும் என்ற வரலாறு உண்டு. அதை இனி இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான பொறுப்புகளை அமெரிக்கா ஒவ்வொன்றாகக் கைவிட்டு வருகிறது, சீனாவோ உலக விவகாரங்களில் தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில், ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்படுவதைத் தவிர்க்கும்வகையில் இந்தியாதான் கவனமாகச் செயல்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், இந்தியா அதில் நிரந்தர உறுப்பு நாடாகவும் இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்