அரசியல் பழகு: எது ஜனநாயகக் கட்சி? யார் ஜனநாயகத் தலைவர்?

By சமஸ்

சமூக வலைதளங்களில் எங்கும் தம்பிதுரையின் படம் சுற்றிக்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் ஜெயலலிதாவின் வண்டி, சாலையில் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை அடையாளம் காட்டுவதற்காக, கையில் ஒரு ஜெயலலிதா - இரட்டை இலைச் சின்னம் பொறித்த தட்டியுடன் தம்பிதுரை பரிதாபமாக நிற்கும் படம் அது. அதிமுகவில் இதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலி என்பதாலேயே அந்த நாற்காலியில் அமராமலேயே முதல்வர் பதவிக் காலத்தை முடித்தவர். தம்பிதுரை இன்று இந்நாட்டின் மக்களவைத் துணை சபாநாயகர். ‘நீ ஊருக்கே ராஜாவாக இருந்தாலும், கட்சித் தலைமைக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அந்தப் படம். ஜனநாயகம் இந்நாட்டில் இன்றைக்கு எவ்வளவு இழிந்த நிலையை அடைந்திருக்கிறது என்பதற்குமான குறியீடு இது. விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் கருதுவோர்கூட “நாட்டிலேயே கட்டுக்கோப்பான கட்சி அதிமுக, கட்சியை விரலசைவில் வைத்திருப்பவர் ஜெயலலிதா” என்று இதையெல்லாம் விதந்தோதும்போது அச்சம் எழுகிறது. இன்னும் ஆண்டான் அடிமை மனோபாவத்திலிருந்து நம்மவர்கள் வெளியே வர எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

சின்ன வயதில் நாட்டிலேயே ஒழுங்கீனமான கட்சி என்று காங்கிரஸை நினைத்திருக்கிறேன். கல்லூரி சென்ற பின் மனநிலை மாறியது. பேராசிரியர் தங்க.ஜெயராமன் ஒரு வகுப்பில் சுட்டிக்காட்டினார். “ஒரு வகுப்பில் அமைதி இருக்கிறது என்றால், முதலில் அந்த அமைதி எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று உள்வாங்க வேண்டும். ஒருவர் பேச ஏனையோர் வாய் மூடி அமர்ந்திருக்கும் சூழல், அமைதியின் குறியீடு அல்ல; அடக்குமுறையின் குறியீடு. தனக்கு எதிராக ஒரு குரல் எழக் கூடாது என்று நினைக்கும் ஒருவர் வெளிப்படுத்துவது, உண்மையில் அவருடைய ஆளுமையை அல்ல; பயத்தை, சந்தேகத்தை, தன்னம்பிக்கையின்மையை!”

ஒரு தலைவர் உண்மையில் எவ்வளவு ஆகிருதியானவர் என்பதைக் கட்சியில் அவருக்கு இணையாக எத்தனை தலைவர்களை உருவாக்கியிருக்கிறார் என்பதும் தொண்டர்களைத் தனக்கு எந்த அளவில் இணையாக நடத்துகிறார் என்பதிலுமே இருக்கிறது என்பதை ஜெயராமன் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவரே ஒரு கட்சியில் கோஷ்டிகளின் குரல்களாக வெளிப்படுவது, பல தரப்புகளின் குரல்கள் என்பதையும் அடையாளம் காட்டினார். காங்கிரஸில் காந்தியும் நேருவும் இப்படித் தனக்கு ஒவ்வாத பல தரப்புகளுடனும் இடைவிடாமல் காலமெல்லாம் பேசிக்கொண்டிருந்தது பின்னாட்களில் வரலாற்றைப் படிக்கும்போது தெரிந்தது. கட்சியில் எதிர்க்குரல்கள் வலுத்தபோதெல்லாம் இருவரும் தாம் விலகப்போவதாக மிரட்டியிருக்கிறார்களே தவிர, தனிப்பட்ட எதிர்ப்புக்காக எதிர்த் தரப்பை அவர்கள் விலக்கியது இல்லை.

பல விஷயங்களில் காந்திக்கும் நேருவுக்கும் இடையிலேயே வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. இந்த விஷயங்களில் காந்திக்குத் தன் கருத்து வேறுபாட்டை எழுதும்போது, தனிப்பட்ட கடிதங்களாக அவற்றை எழுதுகிறார் நேரு. காந்தியோ பொதுமக்கள் கவனத்துக்கும் அது செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். நேருவுக்கு காந்தி எழுதிய 1945, அக்டோபர் 5 தேதிய கடிதத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். “நம்மிடையே மூலாதாரமான பிரச்சினைகளில் கருத்து வேற்றுமை இருக்குமாயின், அதைப் பொதுமக்களும் அறிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் எனக் கருதுகிறேன். அதை அவர்களுக்குத் தெரியாமல் மறைத்துவைப்பது, சுயராஜ்யத்துக்காக நாம் செய்துவரும் தொண்டுக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.”

நேருவிடம் இதே அணுகுமுறை அவர் முதல்வர்களுக்கு எழுதிய கடிதங்களில் புலப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின், பிரதமராகப் பதவியேற்றது முதல் கடைசிக் காலம் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார் நேரு. பதவி, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒரு தலைவர் எப்படி ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது என்பதற்கு இன்றைக்குமான உதாரணங்கள் அவை.

பாபர் மசூதி விவகாரம் முதல் முறையாகப் பெரிய அளவில் புகைந்தபோது, 26.12.1949 அன்று தன்னுடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஜி.பி.பந்துக்கு அனுப்பிய தந்தி இது: “அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின் மூலம், உத்தரப் பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.”

தொடர்ந்து, 1950 ஏப்ரல் 17-ல் நேரு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது: “உத்தரப் பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது… 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உறவிலிருக்கும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய குரல், நான் அறிந்த காங்கிரஸின் குரல் அல்ல! எனது வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களில் எதிர்த்துவந்த குரல்! ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கிய தலைவர்களின் இதயத்திலும் மதவாதம் புகுந்துவிட்டது எனக்குத் தெரிகிறது. இது நோயாளியால்கூட உணர்ந்துகொள்ள முடியாத மிக மோசமான பக்கவாத நோய். ஏதோ சில காரணங்களுக்காகவோ அல்லது அரசியல் லாபத்துக்காகவோ இந்த நோயை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இதனால் இந்த நோய் நமது மாநிலம் உட்பட நாடு முழுவதும் பரவிவருகிறது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, இதை மட்டும் எடுத்துக்கொண்டு போராடலாமா என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள், அப்பணியை மேற்கொள்வேன்.”

அங்கிருந்து பார்த்தால் இன்று எவ்வளவு கீழே இறங்கிவிட்டோம்!

ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் எந்தக் கொள்கைகளைவிடவும், குறைகளை விடவும் நாம் முக்கியமானதாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அதன் ஜனநாயக அணுகுமுறை. ஏனென்றால், அதன் மீது நின்றுதான் இந்த அரசியலிலேயே நாம் பங்கேற்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, ஜான் ஸ்டூவர்ட் மில்லின் வார்த்தைகளை ஒரு அறிவுரையாகவே இந்நாட்டு மக்கள் ஏற்க வேண்டும் என்று கோருகிறார் அம்பேத்கர். “உங்களுடைய சுதந்திரத்தை வேறு யாருக்கும் அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தந்துவிடாதீர்கள். அவருக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர் அதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையும் தலைகீழாக்கிவிடுவார்.”

ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பவரின் ஆதரவு எதுவரை நீடிக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சியின் நல்ல/கெட்ட முடிவுகளும் நியாய/அநியாய விளைவுகளுமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, தலைவர்கள் மீதான கவர்ச்சியும் கட்சி மீதான விசுவாசமும் அல்ல. ஜனநாயகத்தின் மிகப் பெரிய கொள்ளி இந்த விசுவாசம் எனும் அடிமைத்தனம். ஒரு தலைவர் மீதான வழிபாடு மட்டும் அல்ல; ஒரே கட்சியின் அதீத பலமும்கூட ஜனநாயகத்துக்கு ஆபத்தானதேயாகும். நிறையப் பேர் ஒரு நல்ல அரசியல் தலைவருக்கான அடிப்படைப் பண்பாக உறுதியைக் குறிப்பிடுவது உண்டு. அதுவல்ல; அனைவரையும் அரவணைக்கும் நெகிழ்வுத்தன்மையே அடிப்படைப் பண்பு!

இந்திய மக்கள் ஜனநாயகத்தின் பெயரால் அஜனநாயக சக்திகளைப் பெருமளவில் கொண்டாடு வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அடிப்படையில் நம்முடைய சமூகமே அஜனநாயக அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பது. முதலில் நம்முடைய குடும்பங்களில் எந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறது? குடும்பங்களில் பெண்களுக்கு எந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறது? குழந்தைகளுக்கு அவருடைய வாழ்க்கை விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது? ஒரு ஆண்/பெண் தனக்கான இணையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதை அங்கீகரிக்கும் மனநிலையே இன்னும் பொதுமையாகவில்லையே?

இந்திய அரசியல் அரங்கில் ஒரு சாமானியனை நோக்கி உச்சரிக்கப்பட்ட சொற்களிலேயே அதிக பொருள் மிக்கதும் கல்வியைத் தருவதுமான சொல், பெரியார் முழங்கிய சுயமரியாதை. தன்னுடைய சுயமரியாதையை இழக்காத, அடுத்தவரின் சுயமரியாதையைப் பறிக்காத மனமே ஜனநாயகத்தின் ஆன்மா. நாம் இன்னும் பெருமளவில் ஜனநாயகப் பார்வைக்கே தயாராகவில்லை. சரியாகச் சொல்வதானால், வீட்டின் சமையலறையில் கரண்டியைப் பிடிக்கும் பொறுப்பு ஒரு தரப்பைச் சேர்ந்ததா, எல்லாத் தரப்புகளுக்கும் உரியதா என்பதில் இருக்கிறது ஒரு நாட்டின் சுதந்திரம், பிரதிநிதித்துவம், சமத்துவம், ஜனநாயகம்! நம் குடும்பங்களையே நாடு பிரதிபலிக்கிறது!

(பழகுவோம்…)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

30 mins ago

க்ரைம்

34 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்