புகையிலை எனும் பேராபத்து!

By கு.கணேசன்

உலகில் சுமார் 70 கோடிப் பேர் தினமும் புகைபிடிக்கின்றனர்

ருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய உயிர் க்கொல்லியாக விஸ்வரூபம் எடுத்த எய்ட்ஸ் நோய் குறித்து இன்றைக்கும் அச்சப்படுகிறோம். கடந்த ஆண்டில் ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய எபோலாவும் மெர்ஸும் எங்கே இந்தியாவுக்கும் வந்துவிடுமோ எனக் கவலைப்படுகிறோம். அதேநேரத்தில், ‘இரண்டாவது உயிர்க்கொல்லி’ எனப் பெயர் பெற்றுள்ள புகைப் பழக்கம் குறித்து நாம் அவ்வளவாக அச்சப்படுவதில்லை. அதனால்தான், பல நூற்றாண்டுகளாக இப்பழக்கத்தை ஒழிக்க முடியாமல் திணறுகிறது மருத்துவத் துறை.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் சுமார் 70 கோடிப் பேர் தினமும் புகைபிடிக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இவர்களில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 50% பேர் புகைபிடிக்கின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத் துறை.

பாதிப்புகள் என்ன?

சிகரெட் புகையில் 4,000-க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் உள்ளன. நிகோடின், கார்பன்மோனாக்சைட், நைட்ரோபென்சீன், தார் ஆகியவை முக்கியமானவை. அட்ரீனலின், நார்அட்ரீனலின் ஆகிய ஹார்மோன் சுரப்புகளை நிகோடின் நச்சு அதிகரிக்கச் செய்வதால், உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது ரத்தத் தட்டணுக்களை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளச் செய்கிறது. இதயத்தமனி ரத்தக் குழாயில் இத்தட்டணுக்கள் ஒரு கொத்தாக ஒட்டிக்கொள்ள, ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு உண்டாக வழிவகுக்கிறது. மேலும், நிகோடின் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்வதால், மூளையில் ரத்தக் குழாய் அடைத்து பக்கவாதம் வருகிறது. கை, கால்களுக்குச் செல்லும் ரத்தம் குறைந்து விரல்கள் அழுகி, கை, கால்களையே அகற்ற வேண்டிய ஆபத்தான நிலை உருவாகிறது.

சிகரெட் புகைக்கும்போது உண்டாகின்ற கார்பன் மோனாக்சைட் நச்சுவாயு, ரத்த ஹீமோகுளோபினோடு சேர்ந்து, கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது. இதனால், ரத்தத்தில் ஹீமோகுளோபினைச் சுமந்து செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது. புகையிலையில் உள்ள வேறு பல நச்சுகள் சுவாசப் பாதையைப் பாதிப்பதால் ஆஸ்துமா, சளி, சுவாசத்தடை என நுரையீரல் நோய்களும் தாக்குகின்றன.

புகையிலையில் இருக்கும் ‘தார்’ எனும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன் புற்றுநோயை உருவாக்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலையால் ஏற்படும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத் துறை.

இன்னொரு முக்கிய விஷயம், புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17% பேர் பலியாகின்றனர். இப்படி 2004-ம் ஆண்டில் நேரடியாகப் புகைக்காமல் இறந்தவர்களில் 31% பேர் குழந்தைகள். தவறு செய்யாதவர்களுக்கும் தண்டனை தருகின்ற இப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

தடுப்பு ஏற்பாடுகள்

1960-ம் ஆண்டிலிருந்தே இந்திய அரசாங்கம் புகைபிடிப்பதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. என்றாலும், புகையிலை விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் பிரம்மாண்ட உத்திகளோடு ஒப்பிடும்போது, புகையிலையின் கேடுகளை அறிவிக்கும் விளம்பரங்கள் மக்களை அவ்வளவாகச் சென்றடைவதில்லை. ‘புகைப்பது உடல் நலனுக்குக் கேடு’ எனும் எச்சரிக்கை வாசகம், சிகரெட் பெட்டியின் அடிப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறிய எழுத்தில் அச்சிடப்படுவதே இதற்குச் சான்று. திரை அரங்குகளிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொதுஇடங்களிலும் புகைப்பதற்குத் தடைவிதித்துச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கும் தடை. என்றாலும், இந்தச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவதில்லை என்பது பெருங்குறை.

புதிய முயற்சிகள்

சிகரெட் விற்பனையைக் குறைப்பதன் மூலம் இந்தக் கொடிய பழக்கத்தைக் குறைக்க முடியும் என்று நம்புகிறது உலக சுகாதார நிறுவனம். சிகரெட்டுக்கு அதிக வரி, பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகில் சிகரெட் விற்கத் தடை போன்றவை ஏற்கெனவே உள்ள உத்திகள். புகைபிடிப்பவர்கள் தாங்கள் விரும்பிப் புகைக்கும் பிராண்ட் தெரியாதபடி சிகரெட் பெட்டிகளை விற்பனைக்கு வைத்துவிட்டால், சிகரெட் மோகம் குறையும் எனும் உளவியல் உத்தியில், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் புகையிலை ஒழிப்பு தினத்தின் லட்சியமாக, ‘பெயரில்லாத சிகரெட் பெட்டிகளைப் பயன்படுத்துங்கள்’ (Get ready for plain packaging) என்று வகுத்துள்ளது. சிகரெட் விற்பனையைக் குறைப்பதில் ஆஸ்திரேலியாதான் முன்மாதிரியாக இருக்கிறது. 1912-லேயே சிகரெட் எந்த பிராண்ட் என்பதை அட்டையில் அச்சிட முடியாமல் ஆஸ்திரேலிய அரசு தடுத்துவிட்டது. 1915-ல் அயர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதற்கான சட்டம் இயற்றியுள்ளன. இப்போது 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இதுபோன்ற ஒரு ஏற்பாட்டை இந்தியாவும் செய்துள்ளது. இந்தியாவில் சிகரெட் அட்டைப் பெட்டி மீதான எச்சரிக்கைப் படத்தைப் பெரிய அளவில் கண்ணில்படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு

இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில் 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் 20% பேர். 25-லிருந்து 44 வயதுக்குள் உள்ளவர்கள் 40% பேர். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே எந்த அளவுக்கு இப்பழக்கம் இளைய வயதினரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது என்று புரியும். இந்த போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு இளைய சமுதாயத்திடம் ஏற்பட்டாலொழிய, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என்கிறது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை.

புகைப்பதைப் படிப்படியாக நிறுத்த உதவும் நிகோடின் மாற்றுச் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனை மையங்களை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும். புகைப்பதால் உண்டாகும் உடல் பாதிப்புகளைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அரசாங்க இயந்திரம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் இன்னமும் முனைப்புடன் செயல்பட்டு, நிரந்தரக் காட்சிக்கூடம் அமைப்பது, கருத்தரங்குகள் நடத்துவது, வாட்ஸ்அப், முகநூல் வசதிகளைப் பயன்படுத்துவது எனப் புகையிலை தொடர்பான விழிப்புணர்வுச் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பிஹார், மத்தியப்பிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் குட்கா, ஜர்தா, பான் விற்பனைக்குத் தடைவிதித்துள்ளது. இதுபோல தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் இந்தத் தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

ஒரு நாட்டின் வலிமை, அந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் புரிந்து, கடுமையான புகையிலைத் தடுப்புச் சட்டங்களைத் தேசிய அளவில் உருவாக்கி, அவற்றைத் துணிச்சலாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கட்டாயம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

மே-31 உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

56 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்