தலைநூல்: இடதுசாரி இயக்க வரலாறு- ஒரு தமிழ்ப் பார்வை

By த.நீதிராஜன்

நாளுக்கு நாள் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நசுங்குபடும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இடதுசாரிகளால் ஏன் எடுபட முடியவில்லை? கம்யூனிஸ்ட்டுகள் வெளியிலும் உள்ளுமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன? கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? சிவப்பு எழுச்சிக்குச் செய்ய வேண்டியது என்? வெறும் சித்தாந்த, தர்க்கரீதியான வாதங்களின் துணையோடு அணுகாமல், இந்தியச் சமூகத்தின் உளவியலின் பின்னணியில், கள உண்மைகளை வரலாற்றுப் பார்வையோடு மிக எளிமையான மொழியில் பேசும் புத்தகம் ‘கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை’.

கம்யூனிச தத்துவம் உருவானபோது உலகின் அரசியல், சமூகச் சூழல் எப்படியெல்லாம் இருந்தது என்று தொடங்குகிறது இந்தப் புத்தகம். சர்வதேச அளவில் அந்தத் தத்துவம் ஒவ்வொரு கண்டத்திலும் எப்படியெல்லாம் உள்வாங்கிக்கொள்ளப்பட்டது, எப்படியெல்லாம் மேலும் மெருகேறியது, எப்படியெல்லாம் சிதைந்தது என்று எல்லாவற்றையும் தொடுகிறது. அந்தப் பின்னணியில், இந்தியச் சூழலைப் பேசுகிறது. தமிழக நிதர்சனத்தைப் பேசுகிறது.

கம்யூனிசம் என்பது அறிவியல்ரீதியான சமத்துவக் கருத்துகளின் தத்துவம். அது தொடர்பான கிட்டத்தட்ட முக்கியமான பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆய்வுசெய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இது. பொதுவாக இப்படியான புத்தகங்கள் ஒரு வாசகரின் பொறுமையையும் நிதானத்தையும் சோதிக்கும் மொழிநடையைக் கொண்டிருக்கும். இந்த நூலின் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் தன்னுடைய இதழியல் அனுபவங்களின் தேர்ச்சியை மொழிநடையில் பிரயோகப்படுத்தி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறார். கம்யூனிசத்துக்காக எதையும் செய்யத் துடிப்போடு இருப்பவர்கள், கம்யூனிசத்தை அடியோடு எதிர்ப்பவர்கள், அதைத் தவறான புரிதலோடு ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் அல்லது நிராகரிப்பவர்கள் இப்படிப் பல்வேறு தரப்புகளுடனும் உரையாடும் முனைப்பில் இதில் விவாதிக்கிறார் ஜவஹர்.

வயதானாலும் சிங்கம் போன்று செயல்பட்ட சிங்கார வேலர் முதலாக பாகிஸ்தான் பகுதியிலிருந்து சென்னை வந்து அரசியல் வேலைகள் செய்த அமீர் ஹைதர்கான், நெல்லூர் முதல் சென்னை வரை சைக்கிளிலேயே அலைந்து அரசியல் பணியாற்றிய பி.சுந்தரய்யா, எளிமையும் நேர்மைக்கும் இன்றைக்கும் உதாரணராகச் சொல்லப்படும் ப.ஜீவானந்தம், புதுச்சேரியின் பெரும் தலைவரான வ.சுப்பையா, துடிப்பான இளைஞராக கோட்டையின் கொடிக்கம்பத்தில் ஏறி இந்தியக் கொடியை ஏற்றிய ஆர்யா என்ற பாஷ்யம் என்று கம்யூனிச இயக்கம் இதுவரை கண்ட பல ஆளுமைகளின் உணர்ச்சிபூர்வமான வரலாறும் இந்நூலில் பதிவாகியிருக்கிறது. வெறுமனே ஒரு இயக்கம் சார்ந்த வரலாற்று ஆவணமாக மட்டும் இது சுருங்கிவிடவில்லை. இந்தியச் சமூகவியலில் இடதுசாரி இயக்கத்தின் பயணத்தோடு, இந்திய வரலாற்றையும் உடன் அழைத்துவருகிறது.

பொருளாதார அமைப்பு சரியானால் மற்றவை அனைத்தும் தானாகவே சரியாகிவிடும் என்று மார்க்ஸ் சொன்னதாக இன்றைக்குப் பலரும் பேசுகிறார்கள். அதையொட்டிய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள். ஆனால் மார்க்ஸ் அப்படிச் சொல்லவில்லை; பொருளாதாரம், அரசியல், கலை-இலக்கியம் எனப் பல துறைகள் ஏறத்தாழ சம அளவுக்கு நிர்ணயகரமானவை என்று கூறியதை நிறுவி அணுகுமுறையிலும் அதன் நியாயத்தைக் கோருகிறார் ஜவஹர். நூலினூடே வரும் பல தரவுகள் வரலாற்றில் நிறுவப்பட்ட சில மாயைகளை உடைக்கின்றன. “இந்தியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளம் என்பது தவறு; அது அப்படிக் கலைக்கப்பட்ட ஆறாவது அரசு” என்பன போன்ற தகவல்கள் சின்ன உதாரணம். இடதுசாரி இயக்கத்தை விமர்சிக்கும் நூல்களுக்கு இங்கே பஞ்சம் கிடையாது; ஆனால், அக்கறையோடு ஆக்கபூர்வ விமர்சனப் பார்வையில் ஆய்வுசெய்யும் இந்நூல், யாரை விமர்சிக்கிறதோ, அந்தத் தரப்பினாலேயே கொண்டாடப்படும் வித்தையை நிகழ்த்துகிறது.

இடதுசாரிகள் மட்டும் அல்ல; அவர்களை எதிர்ப்பவர்களும்கூட அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. இந்த நூலையும் நூலாசிரியரின் வாதத்தையும் முற்றிலும் நிராகரிப்பவர்களுக்கும்கூட நிச்சயம் இது பயன்படும், ஒரு வரலாற்றுத் தகவல் களஞ்சியமாக.

கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை

ஆசிரியர்: இரா.ஜவஹர்

விலை- ரூ. 160

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு: 044- 43993029

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

9 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

46 secs ago

விளையாட்டு

16 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

40 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்