செ.கணேசலிங்கன்: ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி

By வீ.பா.கணேசன்

ஈழத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக நாவல் உலகில் புதிய பாதையை வகுத்த முன்னோடியான செ.கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021) மறைந்தார். அவருக்கு வயது 93. இலங்கையின் ’தினகரன்’ நாளிதழில் 1950-ல் தனது முதல் சிறுகதையை எழுதிய அவர், தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் சமூக அவலங்களைத் தனது எழுத்துகளின் மூலம் பல்வேறு பரிமாணங்களில் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் 1928 மார்ச்-9 அன்று பிறந்த செ.கணேசலிங்கன் அரசுப் பணியாற்றி 1981-ல் ஓய்வு பெற்றார். 1950-களில் தொடங்கி, மறையும் வரை தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்ட அவரது எழுத்து, இலங்கை தமிழ்ச் சமூகத்து இளைஞர்களிடையே மட்டுமின்றி, 1970-களில் தொடங்கி, தமிழகத்திலும் பரவலாக வாசிக்கப்பட்டது. அவரின் கட்டுரை, நாவல், சிறுகதை போன்றவை ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் வெளியீடுகளில் பிரசுரமாகின. படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி சமயம், சமூகவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு பாரதூரமானவையாக அவரது எழுத்துகள் திகழ்ந்தன.

தொடக்கத்தில் காந்தியவாதியாக இருந்த கணேசலிங்கன், ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பின் செயலாளராக, யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிவந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றியவர். 1948-49-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், முன்னோடி கம்யூனிஸ்ட் ஆன ப.ஜீவானந்தம் கோடியக்கரை வழியாக யாழ்ப்பாணம் சென்றபோது, கணேசலிங்கன் அவரைத் தனது சொந்தக் கிராமமான உரும்பிராய்க்கு அழைத்துச் சென்று நடத்திய கூட்டத்தில் தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை ஜீவா வலியுறுத்திப் பேசினார்.

இத்தகைய தொடர்புகளும் பின்னாளில் ஏற்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான கார்த்திகேயனின் தொடர்பும் செ.க.வை மார்க்சிய சிந்தனைப் போக்கை நோக்கி இழுத்தன. அத்தத்துவத்தை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கற்றறிந்த அவர், தனது தொடர்ச்சியான, எளிமையான எழுத்துகளின் மூலம் மக்களிடையேயும் எடுத்துச் சென்றார். இவ்வகையில் அவர் எழுதிய ‘குந்தவிக்குக் கடிதங்கள்’, ‘குமரனுக்குக் கடிதங்கள்’, ‘மான்விழிக்குக் கடிதங்கள்’ என்ற மூன்று நூல்களும் ஒரு தந்தையாகத் தனது குழந்தைகளுக்கு மனித சமூகத்தின் வரலாற்றை மார்க்சிய சிந்தனைப் போக்கில் எடுத்துக் கூறும் நூல்களாகத் திகழ்கின்றன.

மலையகப் பகுதியில் தேயிலை-காபித் தோட்டங்களில் அதிகாரிகளாலும் துரைமார்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட கடுமையான சுரண்டலைத் தனது எழுத்துகளில் பதிவுசெய்ததோடு, இந்தக் கொடுமைகளுக்கு எதிராக சாதி, மத, இன பேதங்களைக் கடந்து, மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரண்டு போராட வேண்டியதன் அவசியத்தையும் தனது எழுத்தில் வலியுறுத்திய தனிச்சிறப்புப் பெற்றவராகவும் திகழ்ந்தார். அவரது முதல் நாவலான ‘நீண்ட பயணம்’ (1965), அதையடுத்து ‘சடங்கு’ (1966), ‘செவ்வானம்’ (1967) ஆகிய மூன்றுமே யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்டு, அதன் சமூக மாற்றத்தைச் சித்தரிப்பவையாக இருந்தன. ‘நீண்ட பயணம்’ நாவலுக்கு இலங்கை அரசு 1966-ம் ஆண்டிற்கான சாகித்ய மண்டலப் பரிசை வழங்கியது. தமிழ்நாடு அரசு ‘மரணத்தின் நிழலில்’ நூலுக்காக 1994-ல் சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியது.

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் மேனாள் பேராசிரியர் வீ.அரசு தனது ஆய்வில் “தமிழ் நாவல் உலகில் புதிய வடிவமாக ‘நீண்ட பயணம்’ நாவல் அமைகிறது. நிலவுடைமைக் கொடுமையின் சாதியம் மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய தன்மை, குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டு மொழியில் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆக்க இலக்கியமாக இந்த நாவலை உருவாக்கியுள்ளார் என்று கருத முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

செ.கணேசலிங்கனின் முதல் மூன்று நாவல்களும் இலங்கையில் நில மானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கும் புதினங்களாக உள்ளன என்று பேராசிரியர் க..கைலாசபதி குறிப்பிட்டிருந்தார். கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை 1976-ல் நடத்தியபோது, சமர்ப்பிக்கப்பட்ட பல கட்டுரைகளில் கணேசலிங்கனின் நாவல்கள்தான் அதிகம் பேசுபொருளாக இருந்தன.

‘இரண்டாவது சாதி’ என்ற அவரது நாவல், முதலாளித்துவம் பெண்களைக் கவர்ச்சிப் பண்டமாக்கிச் சந்தைப்படுத்துதலையும், பாலியல் பேதத்தை முன்வைத்துப் பெண்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதையும், அவர்களின் உரிமைகளை மறுப்பதையும் எடுத்துக்கூறுகிறது. ஆணிலும் பார்க்க மனித இனத்தில் படைப்பாற்றல் கொண்டவர்களாக இருந்தபோதிலும், பெண்கள் இரண்டாவது சாதியாகவே உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறார்கள் என்பதை அந்த நாவல் விரிவாக விவரிக்கிறது. பெண்மை பற்றிய பல கற்பிதங்களை உடைத்தெறியும் நாவலாக ‘ஒரு பெண்ணின் கதை’ அமைந்திருந்தது.

சிறுவர்களுக்கெனப் பல நூல்களையும் படைத்துள்ள அவர் சிறுவர்களுக்கான கதைகள் பகுத்தறிவை ஊட்டக் கூடியவையாக, சிந்தனையை வளர்ப்பவையாக, அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பவையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தார். ‘உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள்’, ‘உலகச் சமயங்கள்’, ‘உலக மகாகாவியங்கள் எடுத்துக் கூறும் கதைகள்’, ‘புதிய ஈசாப் கதைகள்’, ‘சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள்’ என சிறுவர்களுக்கான படைப்புகளிலும் அவர் தனித்தன்மை கொண்டு விளங்கினார். மாணவர்கள் – இளைஞர்களிடையே மார்க்சியக் கருத்துக்களைக் கொண்டுசெல்லும் விதமாக 1971-ல் ‘குமரன்’ என்ற இதழை அவர் தொடங்கி, 1990 வரை நடத்திவந்தார். இதே காலப் பகுதியில் குமரன் பதிப்பகம் என்ற நிறுவனத்தின் மூலம் தனது எழுத்துகள் மட்டுமின்றி இலங்கையின் முன்னணி எழுத்தாளர்கள்-ஆய்வாளர்களின் நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டுவந்தார்.

1980-களின் இறுதியில் சென்னையில் வந்து நிலைகொண்டார். அவரது ‘நீண்ட பயணம்’, ‘செவ்வானம்’, ‘மண்ணும் மக்களும்’, ‘போர்க்கோலம்’ போன்ற நூல்கள் தமிழ்நாட்டின் இடதுசாரி எழுத்தாளர்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தன. சக எழுத்தளர்கள்-கலைஞர்களிடம் எவ்வித வேறுபாடுமின்றி, எளிமையாக, மிகுந்த மனிதத் தன்மையோடு, மென்மையாகப் பழகிய அவரது பாங்கு ஈழ, தமிழ் இலக்கிய உலகில் தனித்துவம் மிக்கதாகத் திகழ்ந்தது. எழுத்திலும் பதிப்புத் துறையிலும் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் பாலமாக இருந்த முதுபெரும் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் தமிழ் பேசும் நல்லுலகில் என்றும் நினைவுகூரத்தக்கவராகவே திழ்வார்.

- வீ.பா. கணேசன், ‘சத்யஜித் ரே வாழ்வும் வழியும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: vbganesan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

13 mins ago

வாழ்வியல்

37 mins ago

தமிழகம்

53 mins ago

ஆன்மிகம்

11 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்