வேளாண் நிதிநிலை அறிக்கை: நல்லதொரு தொடக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் வேளாண் துறை தொடங்கப்பட்டு 140 ஆண்டுகளும், தமிழ்நாட்டில் 120 ஆண்டுகளும் ஆன சூழலில், தமிழ்நாடு அரசின் முதலாவது வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை என்பது விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், நீண்ட காலச் செயல்பாடுகள் பலவற்றைக் குறித்த அறிவிப்புகள், அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

16 உள்ளடக்கத் தலைப்புகளில் 49 முக்கிய அம்சங்களைக் கொண்ட நிதிநிலை அறிக்கையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இருபோக சாகுபடிப் பரப்பை அதிகமாக்குதல், இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் வகைகளை ஊக்குவிக்கும் திட்டம், சிறு குறு தானியங்கள், பனைப் பாதுகாப்பு, முருங்கை ஏற்றுமதி மண்டலம் உள்ளிட்ட பல திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

வரவேற்பு பெற்ற திட்டங்கள்

காவிரிப் படுகைப் பகுதியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் தஞ்சை மாவட்டத்திலும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல மையம் பட்டுக்கோட்டையிலும், திருவாரூரில் பருத்தி விதை நீக்கும் மையம், நாகையில் மீன் பதப்படுத்த பயிற்சி மையம், நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், இலவச மின்சாரம் மற்றும் பயிர்க் காப்பீட்டை (நடப்பு குறுவைப் பட்டத்துக்குக் காப்பீடு திட்டம் அறிவிக்காத சூழலில்) உத்தரவாதப்படுத்தியது உள்ளிட்ட பல திட்டங்கள் காவிரிப் படுகை விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருச்சி, நாகை மாவட்டங்களுக்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக ஆக்குவதற்கான அறிவிப்பும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் அதற்கான சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்தும் அறிவிப்பும் உள்ளன. மேற்கண்ட உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி வரக்கூடிய தொழில் நிறுவனங்கள், காவிரிப் படுகைப் பகுதியின் மண் வளத்துக்கும் நீர் வளத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்று இந்த அறிவிப்பில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

கடந்த ஆட்சியில் காவிரிப் படுகைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, பிப்ரவரி 2020-ல் அதற்கான சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

அப்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை மசோதாவில் சேர்க்காதது ஏன் எனவும், காவிரிப் படுகையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ள விவசாயம் அல்லாத திட்டங்களுக்குத் தடை விதிக்காதது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார். மேலும், மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில், விடுபட்ட இடங்களைச் சேர்ப்பது, வேளாண் சாராத திட்டங்களைத் தடுப்பது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாநிலக் குழுவைத் திருத்தி அறிவிப்பது, மாவட்டக் குழுக்களை அறிவிப்பது போன்ற அம்சங்கள் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பாதுகாக்கப்பட்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் புதிய கச்சா எண்ணெய் எடுப்புக்கான அறிவிப்பு வந்தபோதும், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தபோதும், முதல்வர் உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றி, தமிழ்நாட்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார். அதனை உத்தரவாதப்படுத்தும் வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மேலும் செழுமைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை காவிரிப் படுகைப் பகுதியில் உள்ளது.

கொள்முதல் எதிர்பார்ப்புகள்

காவிரிப் படுகைப் பகுதியில் நெல் கொள்முதலில் உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நெல்லுக்குக் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,500 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில், சன்ன ரகத்துக்கு ரூ.2,060 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு டன்னுக்கு ரூ.4,000 கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்த சூழலில் ரூ.2,900 என்று அறிவித்திருப்பது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்த நிதிநிலை அறிக்கையில் கூடுதலான தொகை அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் அதிகமாகியுள்ள சூழலில், வட்டத்துக்கு ஒரு வேளாண் பொறியியல் அலுவலகம், அதன் மூலம் டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் என்ற அறிவிப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. கடந்த சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு காரணமாகத் தனியார் நிர்ணயித்த கூடுதல் வாடகை காரணமாக உற்பத்திச் செலவு அதிகமானது. அரசு, அடுத்த நிதிநிலை அறிக்கைகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, கூடுதலான இயந்திரங்களைக் குறைந்த வாடகையில் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்தால், உற்பத்திச் செலவு குறைந்து கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். ஒரு நீண்ட பயணத்துக்கான முதலடி என்ற வகையில் வேளாண் துறைக்கான முதலாவது தனி நிதிநிலை அறிக்கை நல்லதொரு தொடக்கமே.

- வ.சேதுராமன், மாநிலக் கருத்தாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

தொடர்புக்கு: mannaisethu1@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்